SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஓபன் டென்னிஸ் முதன்மை சுற்று அட்டவணை வெளியீடு: இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு அனுமதி

2022-09-11@ 05:40:44

சென்னை: முதல் முறையாக சென்னையில் நடைபெறும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் மோதும் வீராங்கனைகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அந்த அட்டவணையில், இந்திய வீராங்கனைகள் சிறப்பு அனுமதி மூலம் இடம் பிடித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கில், முதல் சுற்றில் யாருடன் யார் மோதுவது என்பதை தீர்மானிப்பதற்கான குலுக்கல் (டிரா) நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ், செயலர் பிரேம்குமார் காரா, தலைமை நிர்வாக அலுவலர் ஹிதேன் ஜோஷி, ஏபிஜி ஸ்போர்ட்ஸ் மீடியா தலைமை நிர்வாக அலுவலர் லாரா செக்கேரெலி, உலக மகளிர் டென்னிஸ் சங்கத்தின் மேற்பார்வையாளர் கெர்லின் கிரமெர், வீராங்கனைகள் அனஸ்டசியா கசனோவா(ரஷ்யா), ஷர்மதா பாலு (இந்தியா) ஆகியோர் பங்கேற்றனர்.

மொத்தம் 32 பேர் கொண்ட ஒற்றையர் பிரிவுக்கான போட்டி அட்டவணையில் அலிசன் ரிஸ்க் அமிர்தராஜ் (29வது ரேங்க், அமெரிக்கா), வர்வாரா கிரசெவா (ரஷ்யா, 72வது ரேங்க்), மேக்தா லினெட் (போலந்து, 73வது ரேங்க்)) என 24 பேர் நேரடியாக அட்டவணையில் இடம் பிடித்தனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வீராங்கனைகள். மேலும் இந்திய வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா (139வது ரேங்க்), கர்மன் தான்டி (365வது ரேங்க்) ஆகியோர் சிறப்பு அனுமதி மூலம் அட்டவணையில் இணைந்துள்ளனர். எஞ்சிய 6 இடங்களுக்கான வீராங்கனைகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.   

தகுதிச் சுற்று:​ இந்த 6 இடங்களுக்கான போட்டியில் 24 வீராங்கனைகள் களத்தில் உள்ளனர். நேற்று தொடங்கிய தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று முடிகின்றன. இதில் லட்சுமி பிரபா அருண்குமார், சாய் சமர்தி (இருவரும் தமிழ்நாடு),  சவுஜென்யா பவிசெட்டி, ரியா பாட்டீயா, ருதுஜா போஸ்லோ ஆகிய  இந்திய வீராங்கனைகள்  5 பேர் கலந்துக் கொண்டனர். எஞ்சிய 19 பேரும் வெளிநாட்டு வீராங்னைகள். மொத்தம் 3 சுற்றுகளாக நடக்கும் இந்த தகுதிச் சுற்றின்  முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனைகள் 5 பேரும் தோற்று வெளியேறினர்.

அட்டவணை முடிவான பிறகு பேசிய விஜய் அமிர்தராஜ் கூறியதாவது: முதன்மை  சுற்று ஆட்டங்கள் திங்கட்கிழமை முதல் தினமும்  மாலை 5 மணிக்கு தொடங்கும்.  டிக்கெட் விற்பனை சீராக நடக்கிறது. முதல் நாள் ஆட்டத்தை காண பள்ளி மாணவர்களை தனி வாகனங்களில் அழைத்து வருகிறோம். போட்டி முடிந்ததும் மீண்டும் வாகனத்தில் அவர்களை  அழைத்துச் செல்வோம்.தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவராக தமிழ் நாடு உட்பட இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ஏமாற்றம்தான். ஆனால் அவர்களுக்கு இது நல்ல அனுபவமாக இருக்கும். இது ஆரம்பம்தான். இனி நல்ல மாற்றங்கள் இருக்கும். பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான போட்டி அட்டவணை தயார் செய்வதற்காக  அதிகபட்சம் 10, 12 வீராங்கனைகள்தான் பட்டியலில் இருப்பார்கள். இப்போது நிலைமை மாறி விட்டது. டென்னிஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழக அரசின் சீரிய ஒத்துழைப்புடன் நடக்கும் இந்தப் போட்டி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் டென்னிஸ் விளையாடும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.  

ஷர்மதா பாலு (இந்தியா):​ நான் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் விளையாடுகிறேன். சர்வதேச ஆட்டங்களில் ஏற்கனவே விளையாடி இருந்தாலும், சொந்த மண்ணில் முதல் முறையாக சர்வதேச ஆட்டத்தில் விளையாடுவது எதிர்பார்ப்பையும், கூடுதல் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

* அரசு அதிகாரிகள் ஆய்வு​  
உலக மகளிர் போட்டிக்காக  நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் புதுப்பிக்கும் பணிகள் இன்றுடன் முடிகிறது. தொடரும் பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்