SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு

2022-08-14@ 01:06:09

மதுரை: மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீரென விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம், தமிழகத்தில் உள்ள சைவ மடங்களிலேயே மிகவும் பழமையானது. 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்தபோது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவரது அரசியல் நடவடிக்கைகளுடன், நித்யானந்தாவை இளைய ஆதீனமாக முடிசூட்டியது, நீக்கம் என பேசு பொருளாகவே இருந்து வந்தது. அவரது மறைவிற்கு பிறகு, 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் ஆனார். இவரது சில பேச்சுகள் சர்ச்சையை கிளப்பின. இப்படிப்பட்ட சூழலில் மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் அரவிந்தன் விலகியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை பூர்வீகமாகக் கொண்ட அரவிந்தன், சைவ சமய ஆன்மிக பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பல்வேறு ஆதீனங்களுடன் நேரடி தொடர்பில் இருந்தார். இதனால், 292வது ஆதீனத்தால் மதுரை ஆதீனத்தின் தம்பிரானாக நியமித்து விஸ்வலிங்க தம்பிரான் என அழைக்கப்பட்டார். ஆதீன மடத்தின் பூஜைகள், கட்டளைகள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நேரடியாக இவரே செய்து வந்தார். இவரை மடத்தின் இளவரசாக நியமிக்க 292வது ஆதீனம் முடிவு செய்திருந்தார். இவரது மறைவால், 293வது ஆதீனம் நியமனத்திற்கு பிறகு தம்பிரானின் பணிகள் குறைந்தன. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கச்சனம் கிளை மடத்திற்கு தம்பிரானை மாற்றி ஆதீனம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பிறகு மதுரை ஆதீனத்தில் நடந்த குருபூஜை உள்ளிட்ட எந்தவித நிகழ்ச்சிக்கும் தம்பிரான் அழைக்கப்படவில்லை. இதனால், மன வேதனையடைந்த தம்பிரான் கச்சனம் மடத்தில் உள்ள 292வது ஆதீனத்தின் படத்தின் முன்பு ஆதீன மரபுப்படி காதில் அணிந்திருந்த திருவேடன் என்ற வளையத்தையும், தலையில் அணியும் முக்காடு ஆகியவற்றையும் கழற்றி வைத்து விட்டு ஆதீனத்தில் இருந்து விலகுவதாக கூறிச் சென்றுள்ளார். இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில், ‘‘நான் முன்பு பணியாற்றிய கிளை மடத்தில் அவரை பணியாற்றிட கூறினோம். அவரை அனுபவரீதியாக பழக்குவதற்காகவே அங்கு அனுப்பினோம். அவர் அனைத்தையும் உடனே பெற நினைக்கிறார். வேறு எந்த நோக்கமும் இல்லை. அவராகவே விலகிச் சென்றுள்ளார்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்