SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

2022-08-14@ 01:04:52

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்து அட்டகாசம் செய்ததுடன், அவரது கார் மீது பாஜவினர் செருப்பை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
ஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்தபோது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த விமான நிலையத்திற்குள் சென்றார்.

அப்போது நுழைவாயிலில் பாஜவினர், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்த தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்திற்குள் இருப்பதால், தங்களையும் அனுமதிக்கும்படி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதைக்கண்ட அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் முறைப்படி அரசு மரியாதைக்கு பிறகு மற்றவர்கள் அஞ்சலி செலுத்தலாம் எனக்கூறி விட்டு, விமான நிலையத்திற்குள் சென்றார். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பாஜவினரின் ஒரு பகுதியினர், ராணுவ வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பழைய விமான நிலையத்தின் வாயிலுக்கு சென்று காத்திருந்தனர். அரசு மரியாதையை ராணுவ வீரர் உடலுக்கு செலுத்தி விட்டு, அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் வெளியே வந்தார்.

இதை எதிர்பார்த்து காத்திருந்த பாஜவினர் திடீரென ‘பாரத் மாதாகீ ஜே’ கோஷத்துடன், அமைச்சரின் காரை மறித்து, முற்றுகையிட்டு, காரையும் தாக்கி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அருகில் நின்றிருந்த பாஜ மகளிர் குழுவை சேர்ந்த ஒரு பெண் திடீரென அமைச்சரின் கார் மீது தனது செருப்பை கழற்றி வீசினார். அது காரில் தேசிய கொடி பறந்து கொண்டிருந்த பகுதியில் போய் விழுந்தது. தொடர்ந்து பாஜவினர் பலர், அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர்.  உடனடியாக போலீசார் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அகற்றி அமைச்சர் காரை வழியனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவ வீரரின் இறுதி மரியாதை நிகழ்வில், பாஜவினர் கலவரத்தில் ஈடுபட்டதற்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிணத்தை வைத்து அரசியல்:  மதுரையில் நேற்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரை, அடக்கம் செய்வது குறித்து இரு நாட்களாக ராணுவத்தினரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன், தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும், பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை (இன்று) பேசுகிறேன்’’ என்றார்.

* 6 பேர் கைது: 30 பேர் மீது  வழக்கு பெண் நிர்வாகிக்கு போலீஸ் வலை
மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்து, செருப்பு வீசப்பட்ட வழக்கில் பாஜவை சேர்ந்த 6 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். மதுரை மாநகர் மாவட்ட பாஜ துணைத்தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார்(48), மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா(49), திருச்சியை சேர்ந்த நிர்வாகிகள் கோபிநாத்(42), மற்றொரு கோபிநாத்(44), ஜெயகிருஷ்ணா(39), முகமது யாகூப்(42) ஆகிய 6 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேடப்படுபவர்களில் பாஜ பெண் நிர்வாகியான மதுரையைச் சேர்ந்த சரண்யாவும் ஒருவர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்