SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் பக்கம் உள்ள இலை ஆட்களை தன் பக்கம் இழுக்க தேனிக்காரர் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-08-10@ 00:07:12

‘‘வைத்தியானவருக்கு என்ன ஈகோவாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தேனிக்காரருக்கு ஆதரவாக வைத்தியானவர் இருந்து வர்றார். ஆனால், வைத்தியானவருக்கு மிக நெருக்கமான முக்கிய நிர்வாகிகள் பலர் சேலத்துக்காரர் அணிக்கு தாவியது பழைய கதை.  குறிப்பாக, நெற்களஞ்சியம் மற்றும் மலைக்கோட்டை மாவட்டங்களில் வைத்தியானவரின் ஆதரவாளர்கள் கூட சேலத்துக்காரர் டீமில் தான் இருக்காங்க. கட்சியில் தனது பக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்ததோடு, பத்தாண்டு ஆட்சி காலத்தில் தங்களுக்கு வேண்டியதெல்லாம் கேட்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தாங்க.

ஆனால், கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் இன்றைக்கு ஒவ்வொருவராக விலகி சேலத்துக்காரர் பக்கம் சென்று விட்டதாக வைத்தியானவர் அவரது நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பினாராம். அப்போது அடிவருடிகள், அரசியல்ல இதெல்லாம் சகஜம் அண்ணே... பேசாம உங்க டென்ஷனை கீழே இறக்கி வைத்துவிட்டு, ஈகோ ஏதும் பார்க்காமல் பிரிந்து சென்றவங்களை அழைத்து பேசுங்க. எல்லோரும் தானாக வருவாங்கனு சொன்னாங்களாம். இதனால வைத்தியானவர், தனது ஆதரவாளர்களை தன்பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் இறங்கிட்டாராம். இந்த முயற்சி ஒர்க் அவுட் ஆகுதாம். இதனால எப்போது பார்த்தாலும் போனும் கையுமாக சேலம்காரர் ஆதரவாளர்களின் நம்பர்களை தேடி தேடி போன் செய்து இன்வைட் பண்றாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி அமைச்சரான கிங்  பெயரை கொண்டவரின் ஆதரவாளர்கள் மண்டையை பீய்த்து கொள்கிறார்களாமே, ஏனாம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ கிங் மாஜியோ எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறாராம்... ஒருவேளை மீண்டும் சின்ன மம்மி ஆதரவு நிலையை எடுக்கப் போகிறாரா, இல்லை... வேறு கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளாரா, இல்லை அரசியலுக்கே முழுக்கு போட்டு விட்டாரா என அவரது ஆதரவாளர்கள் குழம்பி வருகின்றனர்்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சி கூட்டணியில் தேசிய கட்சி இருந்தாலும்,  இலை கட்சியில் ஓரங்கட்டப்பட்ட ஆனால் செல்வாக்குள்ள நபர்களை தாமரை கட்சி தன் பக்கம் இழுத்து வருகிறது. இப்படி தான் இலை கட்சியில் இருந்து தேசிய கட்சிக்கு தாவிய மாஜி அமைச்சருக்கு அல்வா மாவட்ட தொகுதியில் வாய்ப்பு தந்து இலை கட்சி கூட்டணி மூலமே ஜெயித்து எம்எல்ஏவாக்கி விட்டனர். இப்போது அவர் தான் தேசிய கட்சியின் சட்டமன்ற குழு தலைவர். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இலை கட்சியில் போட்டியிட்டவரும் தற்போது தேசிய கட்சியில் ஐக்கியமாகி விட்டாராம்.

அதாவது தமிழ்க்கடவுள் குடி கொண்டுள்ள சூரசம்ஹார ஸ்தலத்தில் கடந்த முறை இலை கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்தாராம். அவர் தற்போது தேசிய கட்சிக்கு அணி தாவி விட்டாராம். இப்படி கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஒவ்வொரு சீட்டாக உருவினால் கடைசியில் ஒண்ணும் மிஞ்சாது என கவலையோடு சொல்கின்றனர் இலை கட்சியினர்... அதனால தேசிய கட்சியை ஓரங்கட்டிவிட்டு, தனித்து போட்டியிட்டால்தான் இலை மிஞ்சும். இல்லை என்றால் கிளை கூட மிஞ்சாது என்று அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சுயபுராணம் பாடிய தலைவரை பற்றி தொண்டர்கள் என்ன பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாவட்டத்துல நடந்த பார்மர்ஸ் மாநாட்டுக்கு சமீபத்தில் தாமரை தலைவர் வந்தாராம். இது பார்மர்ஸ் மாநாடு. இங்கே அரசியல் பேசுவது அழகல்ல. உங்கள் பிரச்னைகளை மட்டும்தான் பேசுவேன் என்று மைக்கில் ஆரம்பித்தாராம். ஆனால் அரைமணி நேரமும் தாமரை கட்சி ஆட்சியில் உங்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம், இன்னொன்றை செய்யப்போகிறோம் என்று ஒரே சுய புராணம் தானாம். வழக்கம் போல் தலைவரின் பேச்சை சிலாகித்த அடிப்பொடிகள்... அரசியல் பேச மாட்டேன்னு சொல்லிட்டு அரை மணிநேரம் அதைப் பற்றிதான் பேசி தன் திறமையை நிரூபித்துள்ளார் நம்ம தலைவர் என்று தொண்டர்கள் சொல்லி சிரிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நிதி நிறுவனங்களில் கருப்பு பணம் முதலீடு செய்தவர்களில் சிலர் கிலியில் இருக்காங்களாமே, உண்மையா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர்பத்தூர், கிரிவலம் மாவட்டங்களை  சேர்ந்தவர்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை கொடுத்து சிக்கி உள்ளனர். கந்துவட்டி,  ஸ்பீடு வட்டி என பொதுமக்களிடம் கறார் வசூல் செய்து சில ரவுடி கும்பலும்  பணத்தை முதலீட்டிற்கு போட்டு இருந்தனர். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல  ஆயிரம் கோடி ரூபாய்கள் மோசடி செய்துவிட்டு முதலீடு கும்பல் தலைமறைவாகி  உள்ளது. வீட்டையும், நிலத்தையும் விற்று முதலீடு செய்தவர்கள் மட்டுமே  புகார் தெரிவித்து பணம் திரும்ப வருமா என்று காத்திருக்கும் நிலையில்,  பணத்தை இழந்த அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரபலங்கள் புகார் அளிக்க அஞ்சுகின்றனர். கோடிக்கணக்கில்  முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி கேட்டால் என்ன செய்வது.  தேவையில்லாமல் நாமே வம்பில் சிக்கிவிடுவோம் என்று பயந்து கொண்டு அமைதியாகி  விட்டார்களாம். அந்த வகையில் பல கோடி ரூபாய் யாரும் கிளைம் செய்யாமல் அப்படியே கிடக்கிறதாம். சிலர் போட்ட தொகையைவிட அதிகளவில் வட்டி வாங்கி கொண்டதால்  வந்தவரை லாபம் என்று எந்தவித புகாரும் அளிக்காமல்  இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்