SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி ஆதரவாளரை வரவேற்காமல் வறுத்தெடுத்த குக்கர் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-08-05@ 00:04:38

‘‘பிரியாணி, கரன்சியோட தடபுடலா வரவேற்கணும்னு சொன்னது யாரு... அது நடந்துச்சா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகரில் இலைக்கட்சியை பொறுத்தவரை, இடைக்கால அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. தேனிக்காரரின் அணிக்கு ஆள் இல்லாமல் சுத்தமாக இருக்காம். முன்பு, ஓ.பி.எஸ் அணியில் இருந்த ‘ஸ்மால்’ பெயர் கொண்ட ஒரே ஒரு மாஜி எம்எல்ஏ.வும் அங்கிருந்து தாவிவிட்டார். அவர், தற்போது எந்த அணியிலும் இல்லை. தற்போதைக்கு தேனிக்காரர் அணியின் ஆள் என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு `செல்வ’மான ஒரே ஒரு மாஜி எம்எல்ஏ மட்டும் உள்ளார். இவர், கதர் கட்சியில் இருந்து இலைக்கு தாவியவராம். இவர், தேனி அணியில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள படாதபாடு படுகிறார். கட்சி இரண்டாக உடைந்த பிறகு இவர், சொந்த ஊரான கோவைக்கு, இன்று முதல்முறையாக வருகிறாராம். தான் ஒரு பெரிய லீடர் என்பதை காட்டிக்கொள்ள, ``கோவை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்க, கூட்டம் சேருங்கப்பா...’’ பிரியாணி, கரன்சி மற்றும் எல்லாவற்றையும் தருகிறேன். ஆனால், வரவேற்பு தடபுடலா இருக்க வேண்டும் என கட்சியினரிடம் கெஞ்சினாராம். ஆனால், யாருமே அசைந்து கொடுக்கவில்லையாம். காரணம், 99 சதவீதம் பேர் இடைக்கால அணியில் இருக்காங்களாம். அதனால், தனக்கு வேண்டிய ஒருசில அடிபொடிகளிடம் டெலிபோனில் பேசி, ``யப்பா... எப்படியாவது கூட்டம் சேருங்கப்பா... அதற்கு ஆகும் செலவை நானே கொடுத்துவிடுகிறேன் என கெஞ்சியுள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி கார்ப்பரேசன்ல இலை கட்சியினர் சாப்பிட்டு ரிலாக்ஸ் செய்ய தனி அறையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கார்ப்பரேசன் இலைக்கட்சியின் பிடியில் இருந்தபோது, எதிர்கட்சி கவுன்சிலர்களை நெஞ்சு பதறும் வகையில் தாக்கின சம்பவங்கள் கூட நடந்துச்சு. இந்த கொடுமைய பார்த்த பொதுமக்கள், உள்ளாட்சி தேர்தல்ல இலைக்கட்சிய விரட்டி விட்டுட்டாங்க. ஏழு பேர் கொண்ட இலைக்கட்சி கவுன்சிலர்கள், எங்களுக்கும் ஒரு அறை வேண்டுமென மேயர்கிட்ட கேட்டாங்களாம். அதுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காம, உடனே அறை ஒன்றை ஒதுக்கிக்கொடுத்திட்டாராம். ஆனா பாருங்க, அந்த அறை எதுக்கு வாங்கினோமுன்னு இலைக்கட்சி கவுன்சிலர்களே முணுமுணுக்க தொடங்கிட்டாங்களாம். மக்கள் பிரச்னைகளை மன்றத்துல எப்படி பேசுவது, நமது கருத்துகளை எப்படி சொல்வது என்று டிஸ்கசன் செய்யணும். ஆனா இலைகட்சி எதிர்கட்சி தலைவர் அந்த வேலையில ஈடுபடுவதே இல்லையாம். வாயில் வடை சுட்டுக்கிட்டே இருக்கும் அவர், வருவோம், உட்காருவோம், வடை சாப்பிடுவோம், ரிலாக்ஸ் செய்வோம்... அப்புறம் போயிட்டே இருப்போமுன்னு இருக்காராம். இப்படி இருக்குறப்போ, எதுக்கு நமக்கு அறைன்னு இலைக்கட்சி கவுன்சிலர்கள் புலம்பல் ஒரு பக்கம்... இப்படியே போனால் சிட்டியில நம்ம கட்சியே இருக்காதுன்னு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அழையா விருந்தாளியா இருந்தாலும்... பிரிந்து இணைந்தாலும் பிரச்னை எப்படி இருக்கும்...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘ஹனிபீ’ நகருக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள குக்கர் தலைவர் வந்திருந்தார். இவரை, மாவட்ட எல்லையில் சேலத்துக்காரரால் மாவட்டச் செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேனிக்காரரின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி சந்தித்து வரவேற்பு அளித்தார். இந்த விஷயம், ஆலோசனைக் கூட்டம் நடந்த அரங்கில் கூடியிருந்த குக்கர் கூட்டத்தினருக்கு தெரியவந்தது. உடனே, குக்கர் கூட்டத்தில் விசில் பறந்தது. குக்கர் தலைவர் வந்து  பேசியபோது, ‘‘திருடர்கள், பொய் சொல்வோர் திருந்த முடியும். துரோகிகள் திருந்த மாட்டார்கள். நான் என்றைக்கும் துரோகிகளுடன் சமரசம் செய்ய  மாட்டேன்..’’ என்றார். ‘‘துரோகிகளுடன் எப்போதும் சமரசம் கிடையாது...’’ என்றது தேனிக்காரரைத்தான் என குக்கர் தரப்பு கூட்டத்தினர் கூட்ட அரங்கிலேயே பேசத்தொடங்கியதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவி இருந்தபோது, குக்கர் தலைவரை வரவேற்காமல் அலட்சியம் செய்ததுடன், சொந்த ஊரான ‘பிக் பாண்டில்’ வைத்து,  குக்கர் தலைவருக்கு எதிர்ப்பு காட்டியவர்கள் இன்றைக்கு தனியாளான பிறகு, வரவேற்க காத்திருப்பது எதற்காக என ஏளனத்துடன் பேசினர். குக்கர் காரர்களின் இந்த இளக்கார பேச்சைக் கேட்டு, தேனிக்காரரின் ஆதரவாளர்கள் மனம் நொந்து  போயிருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வாடகை நாற்காலி வாங்கித்தான் கூட்டம் நடத்தும் கும்பல் யாராம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் வாசி தொகுதிக்குட்பட்ட 3 எழுத்து பெயர் கொண்ட பேரூர் ஆட்சியில பெண் செயல் அலுவலராக ஜெயமானவர் இருக்காரு. இவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் வரை அனைத்து விதமான செலவுகளையும் தங்குதடையின்றி செய்தாராம். கிரிவலம் நகர்ல உள்ள ஒரு எலக்ட்ரிக்கல்ஸ் கடையின் பில் கொண்டு பல லட்சங்களை செலவு செய்ததாக கிளைம் செஞ்சாராம். ஆனா தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுத்ததற்கு பிறகு எந்தவிதமான செலவுகளும் செய்யாமல் பத்திரமாக பார்த்துக் கொள்கிறாராம். பேரூர் ஆட்சி தலைவர் கவுன்சிலர்கள், அலுவலகத்துக்கு வந்தால் உட்கார இருக்கைகள் கூட இல்லையாம். இருக்கைகள் இருந்தால் அதிக நேரம் பேசுவார்கள், இல்லாமல் இருப்பதுதான் நல்லது என சக ஊழியர்களிடம் கூறி நாற்காலி வாங்குவதையே தவிர்த்து வர்றாராம் அந்த செயல் அலுவலர். கவுன்சிலர் கூட்டமே வாடகை நாற்காலி வாங்கித்தான் நடத்தப்பட்டதாம். பெண் செயல் அலுவலரிடம் இதுகுறித்து யாராவது கேட்டால், கண்ணீர் வடித்து காரியம் சாதிக்கிறாராம். உயர் அதிகாரிகள் விசாரணைக்கு போனாலும் அங்கும் கண்ணீர் வடிக்கிறாராம். இதனால, எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாம தவிக்கிறாராம் சம்பந்தப்பட்ட பேரூர் ஆட்சி தலைவர். தன் பழைய ஊழல்களில் இருந்து தப்பிக்க தான் இந்த தந்திரம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்