SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலத்தில் சுயாட்சி அமைந்தால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படும்: சென்னை விழாவில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2022-07-19@ 01:22:16

சென்னை: மாநிலத்தில் சுயாட்சி அமைந்தால்தான், இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படும் என்று சென்னை விழாவில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். மாநிலத் திட்டக் குழு, துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில், கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆழி செந்தில்நாதன், வாலாசா வல்லவன், முனைவர் ம.ராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்  மருத்துவர் நா.எழிலன்  ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.

விழாவில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா என்ற தொற்றால் பாதிக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று(நேற்று) காலையில் தான் இல்லம் திரும்பினேன். மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பது, தள்ளி வைப்பதுபோல, தமிழ்நாடு திருநாளை தள்ளி வைக்க இயலாது என்பதால், காணொலி மூலமாகவாவது பேசி விடுவது என்று நான் முடிவெடுத்தேன். தமிழ்நாடு நாளில் பேசுவது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. காணொலி மூலமாகப் பேசுவது உடல்சோர்வு நீங்கிவிட்டதாகவே நான் உணர்கிறேன். “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என்று பேரறிஞர் அண்ணா, 1967ம் ஆண்டு ஜூலை 18ம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக, என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது.  

நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல, உலகளாவிய இனம். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். “உலகில் முதலில் பிறந்த குரங்கு - தமிழ்க்குரங்குதான்’’ என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள்.  அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.  நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம். சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா. அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18ம் நாள். அவமானம் துடைக்கப்பட்ட நாள் மட்டுமல்ல, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதன் மூலமாக, தாழ்ந்து கிடந்த தமிழினத்தை, தலைநிமிர வைத்த நாள்தான் இந்த ஜூலை 18ம் நாள்.  

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார். இந்நேரத்தில் தியாகிகளையும், தலைவர்களுக்கும் தலைதாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உருவாக்கித் தந்த தமிழ்நாட்டில்தான் நாங்கள் வாழ்கிறோம். நீங்கள் உருவாக்கித் தந்த தமிழ்நாட்டைத்தான் நாங்கள் ஆள்கிறோம். உங்களது தியாகத்தை எந்நாளும் காப்போம் என்று நான் உறுதி அளிக்கிறேன். அத்தகைய உறுதிகொண்ட திராவிட மாடல் ஆட்சியைத் தான் நாங்கள் நடத்தி வருகிறோம்.

 நம்முடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நமக்கு இருக்கும் மொழிப்பற்றும்-இன உணர்வும் - மாநில சுயாட்சிக் கொள்கையும்தான். இன்றைக்கு தமிழ்நாட்டையும் தாண்டி வாழும் பல அறிஞர்களும், இதனை நிரூபிக்கும் வகையில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள்,தமிழ் மொழிப்பற்றையும், தமிழின உரிமை வேட்கையையும், மாநில சுயாட்சித் தத்துவத்தையும் எந்தச் சூழலிலும் யாருக்காகவும் விட்டுத் தந்துவிடக் கூடாது. தமிழ் என்று சொல்வதால் மற்ற மொழிக்காரர்களுக்கு, நாம் எதிரிகள் அல்ல. தமிழன் என்று சொல்வதால் மற்ற தேசிய இனத்தவர்க்கு, நாம் எதிரிகள் அல்ல. மாநில சுயாட்சி பேசுவதால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்துவது அல்ல.

இன்னும் சொன்னால், மாநிலத்தில் சுயாட்சி அமைவதுதான், இந்தியாவின் ஒருமைப்பாட்டையே காப்பாற்றும். இந்தியா ஒற்றுமையாக விளங்க வேண்டும். இந்த ஒற்றுமையை எப்படி உருவாக்க முடியும். இங்கு வாழும் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள் கொண்ட மக்களை, சமமாக மதிப்பதன் மூலமாகத்தான் இந்திய  ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும்.  பரந்து விரிந்த இந்த நாட்டில் எனது மொழியும், எனது இனமும், எனது மாநிலமும் மேன்மை அடையவேண்டும்! இதேபோன்ற மேன்மையை அனைத்து மொழிகளும், அனைத்து இனங்களும், அனைத்து மாநிலங்களும் அடைய வேண்டும்!

இத்தகைய பரந்த பெருந்தன்மையுடன்தான், மொழி, இனம், மாநில சுயாட்சி ஆகிய அனைத்தையும் பேசுகிறோம். இந்த மூன்று தத்துவம்தான் நம்மை உயர்த்தும். நம்மை வாழ வைக்கும். நம்மை மேம்படுத்தும். மொழிவாழ, இனம் வாழ, மாநில சுயாட்சி வெல்ல, இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி உருவாக எந்நாளும் உழைப்போம் என்பதை தமிழர் திருநாளாம் இந்தத் தமிழ்நாடு திருநாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்