SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டார் கோத்தபய ராஜபக்சே: இலங்கை அதிபர் பதவி ராஜினாமா எப்போது?...

2022-07-14@ 15:17:26

மாலே: மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டார். இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதால் அவர் சிங்கப்பூருக்கு தப்பி செல்கிறார். இன்னும் அவர் ராஜினாமா செய்யாததால் இலங்கையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இலங்கையில் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய ராஜபக்சே திடீரென தனது குடும்பத்துடன் இரவோடு இரவாக ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி சென்றார். இதன் காரணமாக மீண்டும் மக்கள் கொந்தளித்துள்ளதால், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தபட்டது. அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தையும் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முன்னேறி உள்ளனர். இதற்கிடையே, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதால் குழப்ப நிலை நீடிக்கிறது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேக்கு எதிராக அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இந்நிலையில், தலைமறைவான கோத்தபய ராஜபக்சே, ஜூலை 13-ம் தேதி பதவி விலகுவதாக கடந்த 9-ம் தேதி அறிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் பதவி விலக தயாராக இருப்பதாக கூறினார். ஆனாலும், கோத்தபய முறைப்படி பதவி விலகிய பிறகுதான் புதிய அரசு பொறுப்பேற்க முடியும். அதுவரை பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதே சமயம், அனைத்து கட்சிகள் கூடி, கோத்தபய பதவி விலகினால், வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்வதென முடிவு செய்தன. இந்நிலையில், அதிபர் பதவியை நேற்று ராஜினாமா செய்ய வேண்டிய கோத்தபய ராஜபக்சே, அதிகாலையில் தனது குடும்பத்துடன் விமானப்படை விமானம் மூலமாக மாலத்தீவுக்கு தப்பி சென்றார். இதை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையே, இலங்கை அரசியலமைப்பு சட்டம் 37(1)ன்படி, பொறுப்பு அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தனா அறிவித்தார். அதோடு, வன்முறையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாகவும், வன்முறையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் ராணுவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார்.

அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் இல்லம் அமைந்துள்ள காலி முகத்திடல் பகுதியில் அவசரநிலை உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். இதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். பிரதமர் அலுவலகத்தையும் நேற்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், அடுத்ததாக நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறினர். இதை தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இதனால் தலைநகர் கொழும்புவில் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள இந்தியர்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேன உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், பொதுச் சொத்துக்களை சேதம் விளைவிக்காமல் அமைதி காக்குமாறும், புதிய அரசு அமையும் வரை மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் முப்படை தளபதிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

ஆனாலும், கோத்தபய, ரணில் அதிகாரப்பூர்வமாக பதவியில் இருந்து விலகும் வரை ஓய மாட்டோம் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய இன்னும் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்காத நிலையில், தலைநகரில் வன்முறை வெடித்ததை அடுத்து, இலங்கையில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கிடையில், மாலத்தீவில் கோத்தபய இருப்பதை அறிந்த மக்கள், அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

மக்களின் போராட்டத்தை அடுத்து, சிங்கப்பூர் தப்பி சென்றதாகவும், அங்கிருந்து துபாய் செல்ல இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்களில் நேற்று தகவல்கள் கசிந்தன. ஆனால் கோத்தபவுக்கு துபாய்கான அனுமதி கிடைக்கவில்லை என்று  கூறப்படுகிறது. இதனால்  சிங்கப்பூர் செல்ல திட்டம் போட்டுள்ளார். இந்தியா, துபாய், சிங்கப்பூர்  ஆகிய 3 நாடுகளுக்கான டிக்கெட் கோத்தபாய ராஜபக்சே வசம் உள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.

ஆனால் சிங்கப்பூர் செல்லும் எஸ்கியூ437 என்ற விமானத்தையும்  அவர் தவறவிட்டார். மாலத்தீவு தூதரக அதிகாரிகள் இமிக்ரேஷனுக்காக  இவரின் அறைக்கு செல்ல மறுத்துள்ளனர். இதனால் அவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சிங்கப்பூர் இமிக்ரேஷனுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுவும் ஆபத்து என்பதால் போராட்டக்காரர்களுக்கு அஞ்சி தனது அறையிலேயே முடங்கியுள்ளார். போராட்டக்காரர்கள் தாக்கலாம் என்ற  அச்சத்தில் சிங்கப்பூர் செல்லும்  விமானத்தை அவர் கடைசி நேரத்தில் தவற விட்டுள்ளார். மேலும் மாலத்தீவு  அரசிடம் தனி விமானம் ஏற்பாடு செய்ய கோத்தபய கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தற்போது தனியார் ஜெட் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழர்கள் நிறைய பேர் இருப்பதால்  அங்கும் இவரை அரசு ஏற்றுக்கொள்ளுமா, அங்கு மக்கள் போராடுவார்களா என்ற  கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் ரணிலை இடைக்கால அதிபராக நியமனம் செய்தது மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் பதவி கைவசம் இருந்தால் மட்டுமே உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் ஏதேனும் ஒரு நாட்டில் பாதுகாப்பாக தஞ்சமடைந்த பிறகே ராஜினாமா கடிதத்தை முறைப்படி கோத்தபய வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்