SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு ஓட்டம்: ராணுவ விமானத்தில் தப்பி சென்றார்; அதிபர் பொறுப்பை ஏற்றார் ரணில்; பிரதமர் மாளிகை முற்றுகையால் பதற்றம்

2022-07-14@ 00:32:54

கொழும்பு: இலங்கையில் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய ராஜபக்சே திடீரென தனது குடும்பத்துடன் இரவோடு இரவாக ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதன் காரணமாக மீண்டும் மக்கள் கொந்தளித்துள்ளதால், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தையும் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முன்னேறி உள்ளனர். இதற்கிடையே, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதால் குழப்ப நிலை நீடிக்கிறது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், தலைமறைவான கோத்தபய ராஜபக்சே, ஜூலை 13ம் தேதி பதவி விலகுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறினார். ஆனாலும், கோத்தபய முறைப்படி பதவி விலகிய பிறகுதான் புதிய அரசு பொறுப்பேற்க முடியும். அதுவரை பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவை தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதே சமயம், அனைத்து கட்சிகள் கூடி, கோத்தபய பதவி விலகினால், வரும் 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்வதென முடிவு செய்தன.

இந்நிலையில், அதிபர் பதவியை நேற்று ராஜினாமா செய்ய வேண்டிய கோத்தபய ராஜபக்சே, அதிகாலையில் தனது குடும்பத்துடன் விமானப்படை விமானம் மூலமாக மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இதற்கிடையே, இலங்கை அரசியலமைப்பு சட்டம் 37(1)ன்படி, பொறுப்பு அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தனா அறிவித்தார். அதோடு, வன்முறையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாகவும், வன்முறையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் ராணுவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார்.

அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் இல்லம் அமைந்துள்ள காலி முகத்திடல் பகுதியில் அவசரநிலை உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். இதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். பிரதமர் அலுவலகத்தையும் நேற்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், அடுத்ததாக நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறினர். இதை தடுக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. இதனால் தலைநகர் கொழும்புவில் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேன உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், பொதுச் சொத்துக்களை சேதம் விளைவிக்காமல் அமைதி காக்குமாறும், புதிய அரசு அமையும் வரை மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டுமெனவும் முப்படை தளபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும், கோத்தபய, ரணில் அதிகாரப்பூர்வமாக பதவியிலிருந்து விலகும் வரை ஓய மாட்டோம் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இலங்கையில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது.

* 17 ஆண்டுக்குப்பின் கனவு நிறைவேறியது
ரணில் விக்ரமசிங்கேவின் அதிபர் கனவு 17 ஆண்டுக்குப் பின் நிறைவேறி உள்ளது. அவர் கடந்த 1993ல் இருந்து 1994 வரையிலும், 2001ல் இருந்து 2004 வரையிலும், 2015ல் இருந்து 2019 வரையிலும் பிரதமராக பதவி வகித்துள்ளார். ஆனாலும், இலங்கை அதிபர் ஆக வேண்டுமென ரணில் விரும்பினார். இதற்காக கடந்த 2005ம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் தோல்வி அடைந்தார். அதன் பின் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கோத்தபய தப்பி ஓடியதால், இடைக்கால அதிபர் பொறுப்பு ரணிலை தேடி வந்துள்ளது.

* டிவி சேனலையும் சிறைப்பிடித்தனர்
கொழும்புவில் போராட்டக்காரர்கள் இலங்கை அரசு ரூபவாஹினி தொலைக்காட்சி சேனல் அலுவலகத்திலும் நேற்று நுழைந்தனர். அங்கு, நேரடி ஒளிபரப்பின் போது இடைமறித்து பேசிய போராட்டக்காரர்கள் இருவர், அரசு தொலைக்காட்சி நடுநிலைமையான செய்திகளை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும், போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவும் வலியுறுத்தினர். இதனால் சிறிது நேரம் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த பிறகு, மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • france-123

  பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

 • sydney-world-record

  புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

 • padmavathi-kumbabhishekam-17

  சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

 • fredddyyy326

  தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

 • dubai-helipad

  துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்