SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடநாடு பிரச்னையில் இருந்து தப்பிக்க வேல் பூஜை செய்த இலை கட்சி நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-07-06@ 01:02:02

‘‘தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் போல...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் பொதுச்செயலாளர் பதவிக்கு துடியாய் துடிக்கும் மாங்கனி மாஜியின் கண் அசைவில் நிழலானவர், அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பதில் வல்லவராம். அவரின் நேர்மை மாங்கனியாருக்கு பிடிச்சுப்போனதால் சமீபத்தில் மா.செ. பதவி கொடுத்து அழகு பார்த்தாராம். இதற்கிடையில் மம்மியின் கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு சூடு பிடிச்சிருக்காம். தேனிக்காரரின் ஆதரவாளர்கள் எல்லோர் பார்வையும் கொடநாடு பக்கம் போயிருக்காம். இதில் நிழலானவரு பெயரும் பலமா அடிபடுதாம். இது மாங்கனியாருக்கும் நிழலானவருக்கும் பெரும் தலைவலியை கொடுத்திருக்காம். இதிலிருந்து ரெண்டு பேரும் தப்பிக்க நிழலானவரு வேல் பூஜை செஞ்சிருக்காரு. இந்தியாவிலேயே மிகப்பெரிய முருகன் கோயில் மாங்கனி மாவட்டத்துல இருக்குதாம். அங்கதான் நிழலானவரு சிறப்பு பூஜை செஞ்சிருக்காரு. எல்லா பிரச்னையில் இருந்தும் ரெண்டு பேருக்கும் விடுதலை தா முருகான்னு மனமுருக வேண்டியிருக்காரு. பூஜை முடிந்ததும் அவரது கையில வேலை கொடுத்து பரிவட்டம் கட்டியிருக்காங்க. வேல் அவரது கைக்கு வந்ததும், மனம் அமைதி அடைஞ்சதாம்... ஆனால் சட்டம் இன்னும் தன் வேலையை செய்து கொண்டிருப்பதால், இரவு கனவிலும் கொடநாடு பிரச்னைதான் அவர் கண் முன்னே வந்து போகுதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமியுடன் ஒட்டி உறவாடி கரன்சி குவிக்க நினைக்கும் அதிகாரியை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் புல்லட்சாமியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் போட்டி நிலவுகிறதாம். முதல்வரின் சிறப்பதிகாரியாக இருக்கும் வெற்றிக்கும், கட்சியின் செயலாளர் பதவி வகிக்கும் ஜவகருக்கும் கடும் போட்டியாம். புல்லட்சாமியை போட்டோகிராபர்கள் படம் எடுத்தால், தலையை லாவகமாக உள்ளே விடுவது எப்படி என்று பிஎச்டி முடித்துவிட்டார்களாம். குடியரசு தலைவர் வேட்பாளர் முர்மு வருகையின் போது, புல்லட்சாமி நினைவுப்பரிசு வழங்க அதனை தாங்கிப்பிடித்தவாறு போஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. யார் நினைவுப்பரிசை வழங்கினார்கள் என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு மாறிவிட்டதாம். இருவரின் இந்த செயல்பாடு, முதல்வர் அலுவலகத்தை சுற்றி வரும் மற்ற புல்லட்சாமியின் ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளதாம். முதல்வரிடம் பொருளை எடுத்துக் கொடுத்துவிட்டு விலக்கிச் செல்வதையே பிறமாநிலங்களில் பார்க்கலாம். ஆனால் எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்த இருவர் இல்லாமல் நிகழ்ச்சி நடக்காதாம். கனகச்சிதமாக புல்லட்சாமியுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். இதில் ஒருவர் வருங்கால எம்எல்ஏ கனவிலும், மற்றொருவர் வாரிய தலைவர் பதவி கனவிலும் சுற்றுகிறார்களாம்... நிலைமை இதுமாதிரி இருந்தா, உண்மையான அரசியல்வாதிகள் நிலை என்னவாகும் என்று பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டம்மி பொறுப்பு கொடுத்ததால் எந்த மாம்பழ நிர்வாகி அதிருப்தியில் இருக்கிறாராம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட மாம்பழ கட்சியின் முக்கிய பொறுப்பில் ‘பாஸ்’ என தொடங்கும் பெயரை கொண்டவர், மாம்பழம் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அந்த கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மாநில துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாம். இதையடுத்து மாவட்ட பொறுப்பில் இருப்பவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டதோடு ஓவர் ஆட்டம் போட்டாராம். இதனால் இவர் மீது இருந்த கடும் அதிருப்தி காரணமாக, கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி மாற்று கட்சிக்கு அணிவகுத்து சென்றார்களாம். இவரது இந்த செயல்பாடு, அனைத்திலும் தலையீடு குறித்தும் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அவரிடம் இருந்து மாநில துணை செயலாளர் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, சாதாரண செயற்குழு உறுப்பினர் பொறுப்பு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டதாம். இதனால் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தாராம். டம்மி பொறுப்பு வழங்கப்பட்டதால் அவரை கட்சி முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாமல் அடிமட்ட தொண்டர்கள் கூட கண்டுகொள்ளவில்லையாம்... இதனால அவரு அதிர்ச்சியில இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியின் உண்ணாவிரதம் தடபுடலாக நடந்தது எந்த மாவட்டத்துல...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் சிட்டியில, பூ கட்சிக்காரங்க சார்பில நேற்று பந்தல் போட்டு உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தினாங்க. இந்த போராட்டத்துக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வந்து கலந்துகிட்டாங்க. காலையில பத்து மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம், நேரம் போகபோக கூட்டம் குறைஞ்சிக்கிட்டே போச்சாம். கூட்டம் தான் குறையதுன்னு பார்த்தா.. ஒரு கட்டத்துல உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்திருந்த தாமரை கட்சிக்காரங்க, வந்த வேலைய மறந்துட்டு, பக்கத்துல இருக்குற கடைகளுக்கு சென்று டீ, காபி, ஜூஸ், மீல்ஸ்சுன்னு ஒரு பிடிபிடிச்சாங்களாம். அதுல சிலபேரு, பசியால, போராட்டத்தை பாதியிலயே கைவிட்டுட்டு, வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்களாம்... இதை பார்த்த பொதுமக்கள் தாமரை கட்சியினர் உண்ணாவிரதத்தை உண்ணும் விரதமாக மாற்றிட்டாங்களாம். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை வெற்றிகரமா நடத்தி, டெல்லி தலைமையிடம் நல்ல பெயர் வாங்கணும்னு அண்ணாமாலையார் திட்டமிட்டாராம்.. இதற்காக வெளி மாவட்டங்களில் கலந்துகொண்டால், மீடியாவில் நாம் காணாமல் போய்விடுவோம்னு கருதி சென்னையில நடந்த போராட்டத்தில் கலந்துக்கிட்டாரு. ஆனா, இந்த போராட்டத்தை பற்றி யாரும் பேசாமல், சென்னை போராட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, பாஜவில் 2 அக்யூஸ்ட்டுகள் உள்ளனர். ஒன்னு மோடி, இன்னொன்னு அமித்ஷான்னு பெரிய குண்டுபோட்டதுதான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. இதனால, அண்ணாமலையார் நொந்தே போயிட்டாராம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்