SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் சூறைக்காற்றால் கடல் சீற்றம் அழிக்காலில் வீடுகளுக்குள், கடல்நீர் புகுந்தது

2022-07-03@ 15:29:25

குளச்சல்:  அழிக்காலில் கடல்சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தன. 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். குமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குமரி கடலில் பேரலைகள் எழும்பும் எனவும், மீனவர்கள் 3 நாட்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை அறிவுறுத்தியது. இதனால் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன் பிடிக்க செல்லவில்லை. அதுபோல் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது.

ராட்சத அலைகள் எழுந்து கடற்கரை மணற்பரப்பையும் தாண்டி விழுகின்றன.  நேற்று வெள்ளிச்சந்தை அருகே அழிக்காலில் எழுந்த ராட்சத அலைகளால் மேற்கு தெருவில் கடல் நீர் புகுந்தது. இதனால் அங்கு 50 க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது. கடற்கரையின் முன் வரிசை வீடுகளுக்குள் கடல் நீருடன் மணலும் சேர்ந்து புகுந்தது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாயின. வீட்டிற்குள் கடல் நீர் புகுவதை தடுக்க மீனவர்கள் மணல் மூடைகளை அடுக்கி வாசலில் வைத்துள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த நீரும், வீடுகளை சூழ்ந்த நீரும் வடியாததால் மீனவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட பகுதிகளை விஜய்வசந்த் எம்.பி.விரைந்து சென்று பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஆர்டிஓ சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் வருவாய் துறையினரும் விரைந்து சென்றனர். கணபதிபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜெ.சி.பி.ஏந்திரம் மூலம் வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி விடும் பணி நடந்தது. இதுபோல் குளச்சலில் கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதியிலேயே கரை திரும்பின. நேற்று பெரும்பான்மையான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. நேற்று மதியம் குளச்சல் சிங்காரவேலர் காலனி பகுதியில் ராட்சத அலைகள் எழுந்து அங்குள்ள தெருக்களுக்கு செல்லும் சாலையில் போடப்பட்டுள்ள அலங்கார கற்களை தாண்டி விழுந்தது.

இதனால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிறுவர்களின் சப்தம் கேட்டு வெளியே வந்த பெற்றோர்கள் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலையை தாண்டி  விழுந்த கடல் நீரை கண்டு பதட்டமடைந்தனர். இந்த காலனியில் சுமார் 40 வீடுகள் உள்ளன. ராட்சத அலையினால் வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம் உள்ளது என அப்பகுதியினர் கூறினர். தகவலறிந்த குளச்சல்  கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டியன், குளச்சல் பங்குத்தந்தை டைனிசியஸ் லாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், பனிக்குருசு   ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு கடலரிப்பு தடுப்பு சுவர் விரைவாக அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்காரவேலர் காலனி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்