திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
2022-07-02@ 00:50:58

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் ரயில்நிலையம் அருகே உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் கம்பெனி காவலாளி. இவரது மனைவி ராமரோஜா என்கிற ராணி(50). இவர்களது மகன் ஏழுமலை. இவரது மனைவி அம்சா(22). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. அம்சா செவ்வாத்தூரில் மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு செல்வராஜ் காவல் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டின் வராண்டாவில் ராணியும், அறையில் மருமகள் அம்சாவும் தூங்கினர்.
நேற்று முன்தினம் காலை ராணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் அம்சாவிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அம்சாவின் செல்போனை கொண்டு அதில் வந்த எண்களை ஆய்வு செய்தபோது, அம்சா அடிக்கடி ஒரே நபரிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. கிடுக்கிபிடி விசாரணையில் ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:குனிச்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த அம்சா பள்ளியில் பிளஸ்2 படித்தபோது, 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்த குனிச்சி கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(20) என்பவருடன் நட்பாக பழகினார். இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இதற்கிடையில் அம்சாவுக்கு ஏழுமலை என்பவருடன் திருமணமானது. பின்னர் ஏழுமலை சென்னைக்கு சென்றுவிட்டதால், மாமியாருடன் வசித்து வந்த அம்சா அடிக்கடி கார்த்திகேயனுடன் போனில் பேசுவதை மாமியார் ராணி கண்டித்துள்ளார்.
அதேபோல் அம்சா தினமும் காலை தாமதமாக எழுந்துள்ளார். இதனால் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் சாணி தெளித்து கோலம் போடமாட்டாயா? என்று ராணி திட்டியுள்ளார். இதுகுறித்து அம்சா தனது ஆண் நண்பரான கார்த்திகேயனிடம் போனில் கூறியுள்ளார். மேலும் மாமியார் தன்னை அடிக்கடி கொடுமை செய்வதாகவும், சுதந்திரமாக பேச அனுமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு ராணி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியாரை தீர்த்துக்கட்ட இருவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு கார்த்திகேயனுக்கு போன் செய்த அம்சா வீட்டில் யாரும் இல்லை என்பதை கூறியுள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் அம்சாவின் வீட்டிற்கு கார்த்திகேயன், 17 வயதான பிளஸ் 2 மாணவரும் வந்துள்ளனர். அங்கு அம்சாவும், கார்த்திகேயனும் சேர்ந்து வராண்டாவில் படுத்திருந்த ராணியை கட்டையால் அடித்து, கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர் அம்சாவின் துப்பட்டாவை ராணியின் கழுத்தில் இறுக்கி கொன்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அம்சா, கார்த்திகேயன் மற்றும் 17 வயது சிறுவனையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் 17 வயதுள்ள நபர் பிளஸ் 2 படித்து தற்போது நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்சா 10 மாத குழந்தையுடன் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!