SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்

2022-07-01@ 00:00:37

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்தலைவராக இருந்த அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

 தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக நேற்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் யஷ்வந்த் சின்காவுக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி அளவில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு யஷ்வந்த் சின்கா வந்தார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்பளித்தார். இதையடுத்து, கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, கொமதேக, மமக ஆகிய கட்சி நிர்வாகிகளிடம் யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார். அவருக்கு ஆதரவு அளிப்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.  

நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘ இந்திய ஜனநாயக அமைப்பின் உயரிய தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்கா. அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். அவரை தொடர்ந்து, யஷ்வந்த் சின்கா பேசியதாவது:   மாநில கவர்னர்கள் ஜனாதிபதியின் ஏஜென்டுகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னரின் செயல்பாடுகளை பார்க்கிறோம். அவர்கள் சட்டத்தின் ஆட்சி மீது தவறாக நடந்து கொள்ளும் போக்கைதான் பல மாநிலங்களில் பார்க்கிறோம். அந்த வகையில் தான் தமிழக கவர்னரின் செயல்பாடும் துரதிஷ்டவசமாக உள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது. அவ்வாறு உடைப்பவர்கள் வேறு யாரும் அல்ல. அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் பதவியேற்றவர்கள் தான். மராட்டிய மாநிலத்தில் பாஜ தலைவர்கள் பேச்சை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து இந்துத்துவா பற்றியே பேசி வருகிறார்கள். இந்துத்துவா மீது நம்பிக்கையில்லை என்றால் மாநில அரசை கலைத்து விடுவோம் என்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம். எந்த அரசாக இருந்தாலும் சரி, அது அரசியல் அமைப்பு சட்டத்தை நம்பி இருந்தாலும் இந்துத்துவா மீது நம்பிக்கை இல்லாதபட்சத்தில் கவிழ்க்கப்படும் என்று தான் அர்த்தம். மதசார்பின்மை மீது நம்பிக்கை இருந்தால் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜ செயல்படுகிறது. மாநில நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். எதிர்காலத்திலும் போராடுவேன்.

இது எனக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பு அல்ல. 4வது வாய்ப்பு. ஒருவேளை 10வது வாய்ப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் என்னை பொறுத்தவரை இது ஒரு போராட்டம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், அதன் மதிப்பை வலுப்படுத்தவும் இந்த தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளேன். பொதுமக்கள், கடவுளின் ஆசியோடு ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும்பட்சத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை செயல்படுத்தவும், பாதுகாக்கவும் என்றும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளிக்கிறேன். மாநில கவர்னர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் கவர்னரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர். நாடாளுமன்றம் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.

நாடாளுமன்றம் முறையாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். நாடாளுமன்ற பொது கணக்கு மற்றும் நிதிக்குழு தலைவரை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தான் வழங்கப்பட வேண்டும். இது ஒரு முக்கியமான கமிட்டி ஆகும். 2014ம் ஆண்டு வரை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தான் இந்த பதவி வழங்கப்பட்டு வந்தது. இது தான் நடைமுறை. ஆனால், தற்போது ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த பதவியை எனது மகன் வகித்து வருகின்றபோது அது தவறான நடைமுறை என கூறுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

நிதி விவகாரத்தை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சிகள் தான் பார்க்க வேண்டும். நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு, மாநில அரசுகளை பழிவாங்காத வகையில் பார்த்துக் கொள்வேன். ஒன்றிய அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை மூலம் பழிவாங்கும் நடவடிக்கையை தடுப்பேன். நமது நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. இதுபோன்றதொரு சூழல் தகர்க்கப்பட வேண்டும். தமிழகம் தனது உரிமைக்காக, மொழிக்காக, பண்பாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாநிலம். தமிழகத்தின் ஆதரவால் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ‘‘தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இன்றைய சூழலில் பொருத்தமான குடியரசு தலைவர் வேட்பாளரை அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளார்கள். நாட்டின் ஜனநாயகத்திற்கு பேராபத்து என்று அனைத்து பொறுப்புகளையும் தூக்கி எறிந்து விட்டு வந்தவர். நாட்டு மக்களுக்கு எப்போதெல்லாம் துன்பம் வருகிறதோ, அதை துணிச்சலாக எதிர்த்து குரல் கொடுக்க கூடியவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதுணையாக இருந்து அவரை வெற்றி பெற வைப்பார்’’ என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,‘‘இந்திய நாட்டிற்கே வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் ஆட்சி. இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய ஆட்சி என்று இந்தியவுக்கே அரசியலில் ஒரு திசை காட்டியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். எனது நெருங்கிய நண்பர் யஷ்வந்த் சின்கா இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடன் நாங்கள் இருக்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் உங்கள் பின்னால் நிற்கிறது. திமுக முன்னிலையில் அனைத்து கட்சிகளும் உங்களுடன் இருக்கும். இந்த தேர்தலில் நீங்கள் அபார வெற்றி பெறுவீர்கள்’’ என்றார். இதை தொடர்ந்து, மாலை 7 மணியளவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து இரவு சென்னையிலேயே தங்கிய அவர் இன்று காலை 10 மணிக்கு ராய்ப்பூர் புறப்பட்டு செல்கிறார். ன்றார். அவரது வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* தமிழகத்தில் பாஜவால் எதுவும் செய்ய முடியவில்லை
அண்ணா அறிவாலயத்தில் யஷ்வந்த் சின்கா நிருபர்களிடம் கூறுகையில்,‘‘பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை. தமிழகத்தில் பாஜவால் எதுவும் செய்ய முடியவில்லை. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம். மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி. மகாராஷ்டிராவில் புதிதாக பதவியேற்கும் அரசு நீண்ட நாள் நீடிக்காது என்பதால் பாஜவைச் சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்கவில்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்