உடன்குடியில் அனல்மின் நிலையம் துறைமுகம் அமைக்கும் பணி தீவிரம்
2022-06-30@ 12:36:36

* தொழில் வளம் பெருகும் * மக்களின் வாழ்க்கை தரம் உயரும்
உடன்குடி: உடன்குடி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையம், துறைமுகம் அமைக்கும் பணி விரைந்து நடைபெறுவதால் தொழில் வளம் அசூர வளர்ச்சி பெறும். இத்திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது மக்களின் வாழ்வாதாரம் உயரும் நிலை உருவாகியுள்ளது. உடன்குடி கல்லாமொழி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 3 கட்டங்களாக அனல்மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரு கட்டங்களில் 660 மெகாவாட் கொண்ட 4 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பகுதி கடல் நீர்மட்டத்தை விட குறைவாக இருப்பதால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு அந்த மண்ணை கொண்டு தரையை உயர்த்தும் பணி நடந்து முடிந்துள்ளது. மேலும் அனல்மின் நிலைய வளாகத்தை சுற்றி சுமார் 25 அடி உயரத்திற்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் கட்டிடங்கள் கட்டும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
தொடர்ந்து அனல்மின் நிலையத்தின் கிழக்கு பகுதியையொட்டி கடல் பகுதியில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் பணியும், சுமார் 1.50 கோடி டன் நிலக்கரி கையாளும் வகையில் நடந்து வருகிறது. இங்கு நிலக்கரி இறங்குதளம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடற்கரையில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவிற்கு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக பெரிய அளவிலான பாறாங்கற்கள் சாத்தான்குளம், பேய்க்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு வரப்பட்டு கடலில் குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் கப்பலில் கொண்டு வரப்படும் நிலக்கரியை ராட்சத குழாய் மூலம் அனல்மின் நிலைய வளாகத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. ராட்சத கன்வெயர் பெல்ட் மூலம் கடலில் இருந்து அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்ல ராட்சத கம்பிகள் மூலம் பாலங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல கடல்நீரை கொண்டு குளிர்விக்க ராட்சத குழாய் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது.
துறைமுக பணிக்காக கடலில் நடைபெறும் கட்டுமானப் பணி, அனல்மின் நிலைய வளாக பணிகளுக்கு தேவையான கான்கீரிட் கலவைகள் அங்கேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஏராளமான ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் வேளையில் நேரடியாக 3 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 7 ஆயிரம் பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும். அனல்மின் நிலையம், துறைமுகம் தொடர்புடைய தொழில்கள் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இப்பகுதியில் அமைக்கப்படும். இதன் மூலம் தொழில் வளம் பெருகும். மேலும் உடன்குடி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், தட்டார்மடம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனியை வீசி பாஜகவினர் அராஜகம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!
செய்யூர் அருகே அதிமுக தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் திடீர் சாலை மறியல்
திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி; பயணிகள் கோரிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!