SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியின் நிலையை நினைத்து தேம்பி அழுத மாஜி அமைச்சர் யாரு என்ற ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2022-06-27@ 00:49:12

‘‘இலை கட்சியில் தீர்மானம் நிறைவேற்றும் பணி வேகமாக நடக்குதாமே... யார் போடச் சொன்னாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரரை பொதுச்செயலாளராக தேர்வுசெய்ய பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக அவங்க தரப்பு சொல்றாங்க. அதேபோல எங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்குனு தேனி தரப்பில் இருந்து கொளுத்தி போடுறாங்க. இந்த நிலையில் தான், மாவட்டம்தோறும் இலை கட்சியில் உள்ள தனித்தனி அணிகளின் கூட்டத்தை போட்டு, அதில் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்புங்க என இருதரப்பிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விஷயத்திலும், தேனிகாரர் அணி பின்தங்கிவிட்டதாம். கோவையில் இருந்து இலை கட்சியின் மகளிர் அணி, இளைஞர் அணி, வக்கீல் அணி, விவசாய அணி என எந்த அணியினரும் தேனிக்காரருக்கு ஆதரவாக தீர்மானம் போடலையாம். அதே நேரத்தில் சேலம்காரருக்கு ஆதரவாக தீர்மானம் போட்டு அனுப்பும் பணி வேகம் எடுத்துள்ளதாம். வக்கீல்கள் அணி முதலாவதாக தீர்மானம் போட்டு, சென்னைக்கு அனுப்பியுள்ளது. இந்த அணியை தொடர்ந்து பிற அணியினரும் களம் இறங்கி, தீர்மானம் நகலை, கட்சியின் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். அடுத்த பொதுக்குழு கூடுவதற்குள் எல்லா மாவட்டங்களில் இருந்தும் தீர்மானம் நகல் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மினிட் புத்தகங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் அதிகளவில் இடம்பெறுகிறது. இதனால தேனிக்காரர் வேறு மூவ் எடுத்துள்ளதாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சி நிலைமையை நினைத்து தாரைதாரையாக கண்ணீர்விட்டு அழுத மாஜி அமைச்சர் யாருங்க...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர மாவட்டத்தில் 3 மாவட்டச் செயலாளர்கள் இருக்காங்க. இதுல புறநகர் மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர் உதயமானவரும், மக்கள் பிரதிநிதியான செல்லமானவரும், சேலம்காரருக்கு பகிரங்கமாக ஆதரவு அறிவித்துவிட்டாங்க. அதேசமயம், இலை கட்சியின் பொதுக்குழு கூடுவதற்கு முன்புவரை நடுநிலை வகித்தார் தெர்மோகோல் புகழ் மாஜி மந்திரி. பொதுக்குழுவில் ஏற்பட்ட மோதலால், இரண்டு அணி மட்டுமே உள்ளது. நடுநிலை என்ற அணியே இல்லை என்பதை லேட்டாக புரிந்து கொண்டாராம். ஏதாவது ஒரு அணியை ஆதரித்தாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், தற்போது தத்தளித்து வருகிறார். யாரை ஆதரிப்பது என ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறாராம். உறுதியான முடிவு எடுக்க முடியவில்லையாம். சாதிரீதியாகவும், தென்மாவட்டத்தில் முக்கியமானவர் என்பதாலும், தேனிகாரருக்கு ஆதரவு கொடுக்கலாமா அல்லது சேலம்காரரை ஆதரிப்பதா என முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறாராம். நேற்று முன்தினம் 80 சதவீதம் தொண்டர்கள் யாருக்கு ஆதரவோ அவருடைய கையில்தான் இலை கட்சி இருக்கும் என்றாராம். பின்னர், சேலம்காரரை கலகக்காரர் என்று மறைமுகமாக தாக்கி பேசினாராம். நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், ‘கட்சி இப்படி போய்விட்டதே என அழுதபடியே போனாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வருவாய் இல்லாமல் தவிக்கும் பழம்கட்சியின் மாஜி தலைவர் பற்றி கட்சிக்காரங்க வருத்தப்படறாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பழம்கட்சியில் மாஜி மாநில தலைவர் பொறுப்பை வகித்த தீ என துவங்கும் மூன்று எழுத்து பெயரைக் கொண்டவரை, தற்போது டம்மி பொறுப்பு கொடுத்து அக்கட்சி ஓரங்கட்டிவிட்டதாம். கருத்து வேறுபாடு காரணமாக இலை கட்சியில் ஐக்கியமானார். நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை வழங்கியதால் தினசரி கூட்டங்களில் பேசுவதும், கட்சியில்  முக்கியத்துவம் கொடுத்ததால் நல்ல வருவாய் கிடைத்ததாம். இப்போது தாய் கழகமான பழம் கட்சிக்கே வந்துட்டாராம். தற்போது, தேர்தல் பொறுப்புக்குழு என்ற பதவியை வழங்கி அக்கட்சி தலைமை ஓரங்கட்டி வச்சிருக்காம். இதனால், அன்றாட செலவுக்குக்கூட வருவாயின்றி தவித்து வருகிறாராம். பேசாம இலை கட்சியிலேயே ஒட்டியிருந்தால் ஏதாவது சேலம், தேனி என ஏதாவது ஒரு அணி மூலம் நல்ல வருவாய் கிடைச்சிருக்கும். கடைசி காலத்தில்  கஷ்டபடாம காலத்தை ஓட்டியிருக்கலாம் என்று மூத்த நிர்வாகிகளிடம் புலம்பி  வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சம்பளத்தை நம்பல நான் வேறு ஒன்றை நம்பி தான் வந்தேன்னு அடித்து சொல்லும் அதிகாரி யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ளூர் திட்டக்குழும இணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் உயர் பதவியை பிடிக்க, கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து முயற்சி செய்கின்றனர். தற்போது இங்கு பணியாற்றும் உயரதிகாரி, இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெற உள்ளாராம். அதனால், வந்த வரைக்கும் லாபம் என வாரி சுருட்டுகிறாராம். பல்வேறு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், நில உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் என ஒருவர் விடாமல்  கோடிக்கணக்கில் வசூல் தட்டி எடுத்து விட்டாராம். இவரை, ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் உயரதிகாரிகள் நேரில் வரவழைத்து கண்டித்துள்ளனர். ஆனாலும், தட்டி எடுக்கிறார். வைட்டமின் `சி’ கொடுக்காமல் எந்த கோப்புகளும் நகராது. உடனடியாக கையெழுத்தும் கிடைக்காது. ஒரு பக்கம் கரன்சி, மறுபக்கம் பச்சை இங்க் கையெழுத்து என டீல் பலமாக  உள்ளது. இவர், ஏற்கனவே சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பித்தவராம்... மேலும் நான் சம்பளத்தை நம்பி இந்த வேலைக்கு வரல... என் ரூட்டே தனி என்று சொல்லி சிரிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்