SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டம் காணும் சேனா

2022-06-22@ 00:02:29

மராட்டிய மாமன்னர் சிவாஜியின் படை என்று குறிக்கும் வகையில் சிவசேனா என்று கட்சிக்கு பெயர் வைத்தார் பால் தாக்கரே. படையும் அப்படித்தான் இருந்தது. கட்சித்தொண்டர்கள் தான் முதலிடம். அப்படித்தான் இரண்டு முறை முதல்வர் பதவி மனோகர் ஜோஷி, நாராயண் ரானேவுக்கு வழங்கப்பட்டது. இந்த முறை அதிகாரத்தில் உத்தவ் தாக்கரே அமர்ந்ததும் கட்சியில் விரிசல். அது இப்போது ஆட்சியையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறது.வலுவான தொண்டர்படை, வலதுசாரி கட்டமைப்பு. இதுதான் சிவசேனா. பால்தாக்கரேவின் கண் அசைவுக்கு பணி செய்ய காத்திருக்கும் பெரும் படை அது. ராஜ் தாக்கரே விலகலால் சற்று அதிர்ந்தது. ஆனால் சேதாரம் இல்லை. 1989 முதல் பா.ஜவுடன் நெருங்கிய கூட்டணி. 25 ஆண்டுகள் நீடித்த கூட்டணியில்  விரிசல். 2019 சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கேட்டார் உத்தவ் தாக்கரே. பா.ஜ மறுத்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உதவியுடன் காங்கிரசுடன் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர்.
இதுவரை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. இப்போது பிரச்னை சிவசேனாவின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே வடிவில் வந்து இருக்கிறது. கட்டுப்பாடுகள் மிகுந்த கட்சி, விசுவாசிகளின் கட்சி என்றார்கள்.

இப்போது மிகப்பெரிய பிளவை எதிர்நோக்கி சிவசேனாவும் காத்திருக்கிறது. உத்தவ் தாக்கரேவுடன் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிறிது காலமாக மனம் வருத்தம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குறிப்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே மகனும் மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கும், ஷிண்டேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த விரிசலுக்கும், விலகலுக்கும் காரணம் என்கிறார்கள். ஷிண்டேவின் மகன் காந்த் ஷிண்டே கல்யாண் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே மிகவும் திறமையானவர். கடினமாக உழைக்கும் தலைவர். சட்ட மேலவையில் பல காலம் பணியாற்றியிருக்கிறார். இரவு பகல் பாராமல் உழைத்தவர். முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அப்படிப்பட்டவர் திடீரென எம்எல்ஏக்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் தஞ்சம் அடைந்து இருப்பது பிரச்னையின் தீவிரத்தை காட்டியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை தேர்தல் தான் இந்த பிரச்னையை முதலில் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இந்தத் தேர்தலில் பாஜ தனது 5 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலா 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் காங்கிரஸின் ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் சந்திரகாந்த் ஹண்டோர் தேர்தலில் தோல்வியடைந்தார். இங்குதான் பிரச்னை ஏற்பட்டு இப்போது சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியை கவிழ்க்க இப்போது நடக்கும் முயற்சி 3வது முறை. இருப்பினும் இது சிவசேனாவின் பிரச்னை. அதை முதல்வர் உத்தவ் தாக்கரே பார்த்துக்கொள்வார் என்று அசால்ட்டாக சொல்லி கடந்து செல்கிறார் சரத்பவார். ஆட்சிக்காக காத்திருக்கும் பா.ஜ இந்த வாய்ப்பை விட்டு வைக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்