செவிசாய்க்க வேண்டும்
2022-06-21@ 00:05:04

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலை கிடைக்காமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முக்கியமாக, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாக ஒன்றிய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் நிலைமை தலைகீழாக இருப்பது தான் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஒன்றிய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைத்தால், நாடு வளர்ச்சி என்ற இலக்கை எளிதாக எட்டி விடும். ஆனால், வேலையில்லா பிரச்னையை தீர்க்கும் வகையில் அதீத முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை ஒன்றிய அரசு அறிவிப்பது கிடையாது. நாட்டில் படித்த அனைவருக்கும் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் மட்டும், வேலைவாய்ப்பு பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக கூறி விட்டு, வெற்றி பெற்ற பிறகு வேலையில்லா பிரச்னைகள் குறித்து ஒன்றிய அரசு பேசுவது கிடையாது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் சமூகத்தில் வன்முறை சம்பவங்கள் குறையும். கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். நாட்டில் ஒவ்வொரு துறையும், மாநிலங்களும் வளர்ச்சியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே நாடு வல்லரசு என்ற இலக்கை அடைய முடியும் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அறிவுக்கூர்மை வாய்ந்த இளைஞர்களின் திறமையை ஒன்றிய அரசு கச்சிதமாக பயன்படுத்தினால், உலகில் பல்வேறு துறைகளில் நாம் முதன்மை இடத்தை பிடிக்கலாம்.
நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்று பொதுமக்கள் சொல்ல வேண்டும். இது தான் உண்மையான வளர்ச்சி. வார்த்தைகள் மூலம் மட்டும் நாடு வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியாது என்பதை ஒன்றிய அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து திட்டங்களை அறிவிக்க வேண்டும். அவ்வப்போது ஒன்றிய அரசின் திட்டங்களை எதிர்த்து மக்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். போராடுபவர்களை நேரிடையாக அழைத்து அவர்களின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவிசாய்ப்பது கிடையாது. இது நல்ல அணுகுமுறை கிடையாது.
தற்போது அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அக்னி பாதை திட்டம் குறித்த கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதிலை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்விஷயத்தில் மவுனமாக இருப்பது நல்லதல்ல. நாட்டில் நிலவும் பிரச்னையை திசைதிருப்ப இது போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றிய அரசின் செயல்பாடு மற்றும் ஒன்றிய அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு உள்ளிட்டவைகளை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கடந்த காலங்களை மக்கள் மறந்து விடுவார்கள் என ஒன்றிய அரசு நினைக்க வேண்டாம். மக்கள் எதையும் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டார்கள். இனியாவது, இளைஞர்கள் வரவேற்கும் வகையில் திட்டங்களை அறிவிக்கலாம். முக்கியமாக, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
உரிமை கோராத டெபாசிட்
தொடரும் ரெய்டு
ஆரோக்கியமான சமுதாயம்
தமிழகம் ஒளிர்கிறது
தமிழர் பெருமை
வழக்காடு மொழி தமிழ்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!