SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கலைஞரின் திட்டங்களால் பயன்பெற்றவராக இருப்பார்கள்: கலைஞர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

2022-05-29@ 01:52:38

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கலைஞர் தீட்டிய  திட்டங்களால் பயன்பெற்றவராகத்தான் இருப்பார்கள். அனைத்து  மக்களின் தலைவராக இருந்தவருக்குத்தான் இன்றைக்கு சிலை  அமைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

 சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 வாழ்வில் ஒரு பொன்நாள் என்று என்னாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை, இந்த தமிழ் இனத்தை, இந்த தமிழ் நிலத்தை வான் உயரத்துக்கு உயர்த்திய கலைஞருக்கு நம்முடைய நன்றியின் அடையாளமாக தமிழின தலைவரின் இந்த மாபெரும் சிலை எழுப்பப்பட்டுள்ளது. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையிலே நம்முடைய கலைஞர் சிலை அமைந்திருக்கிறது. இது மிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது.

 கலைஞரால் இந்த ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த மாபெரும் கட்டிடம் (புதிய தலைமை செயலகம்). தமிழ்நாடு சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடம் இது. தற்போது மருத்துவமனையாக செயல்பட்டு கொண்டிருந்தாலும் அது கம்பீரமாக கலைஞரின் கனவு கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. அதனால்தான் அங்கு கலைஞருக்கு சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. விழாவுக்கு மகுடம் வைத்ததைபோல இந்திய அரசின் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வருகை தந்து, கலைஞர் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.

நம்முடைய நட்புக்குரிய இனிய நண்பராகதான் இந்திய குடியரசு துணை தலைவர் எப்போதும் இருந்து வருகிறார்.  கலைஞர் சிலையை திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று நாங்கள் சிந்தித்த நேரத்தில் துணை குடியரசு தலைவர் முகம்தான் எங்கள் நெஞ்சிலே தோன்றியது. அவரை நேரில் சந்தித்து கேட்ட நேரத்தில் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் திருவுருவ படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் திறந்து வைத்தார். தலைவர் கலைஞரின் சிலையை குடியரசு துணை தலைவராக உள்ள வெங்கய்யா நாயுடு இங்கு வந்து திறந்து வைத்துள்ளார்.

 எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அந்த துறையில் கோலோச்சியவர் கலைஞர். இலக்கியமா... எத்தனை எத்தனை. குறளோவியமும், தொல்காப்பிய பூங்காவும், பொன்னர் சங்கரும் காலத்தால் அளிக்க முடியாத காப்பியங்கள். திரையுலகமா... இன்றும் பராசக்தி, மனோகரா, பூம்புகார் வசனங்கள் நாட்டிலே ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

 என்னுடைய பாசமிகு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வருகை தந்திருக்கிறார். அவருக்கு நன்கு தெரியும். திரையுலகத்திற்குள் வரக்கூடியவர்கள் கலைஞரின் வசனத்தை பேசி, அதில் தங்களை நிரூபித்து உள்ளே நுழைந்தவர்கள் என்பதுதான் வரலாறு. அரசியலா... ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்று ஏறக்குறைய 50 ஆண்டுகள் அதை வழி நடத்திய ஒரே தலைவர் கலைஞர். ஆட்சியா... இன்றைக்கு நாம் காணக்கூடிய நவீன தமிழ்நாடு கலைஞரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தொலைநோக்கு பார்வை அவருக்கு இருந்தது.

அதற்கான உள்ளார்ந்த அக்கறை அவருக்கு இருந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கினார். அத்தகைய மக்களின் உயர்வுக்காக எழுதினார், அவர்களுக்காக பேசினார். அவர்களுக்காக போராட்டம் நடத்தினார். அவர்களுக்காக சிறையில் இருந்தார். ஆட்சி அதிகாரம் கிடைத்ததும், அவர்களுக்காக திட்டங்களை தீட்டினார். அந்த திட்டங்களால் உருவானதுதான் இந்த தமிழ்நாடு. அதனால்தான் அவரை, நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 அவர் உருவாக்கிய கல்லூரிகளில் படித்தவர்கள், அவரால் வேலைவாய்ப்பை பெற்றவர்கள், அவர் காப்பாற்றி கொடுத்த சமூக நீதியால் உயர்வு பெற்றவர்கள், மகளிருக்கு சொத்துரிமை தரப்பட்டதால் சொத்துக்களை பெற்ற மகளிர்கள், சுயஉதவி குழுக்களால் வாழ்க்கை தரம் உயர்ந்த மகளிர்கள், பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் என தாய் திருநாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் நலத்திட்டங்கள் மூலமாக கோடிக்கணக்கானவர்களுக்கு பயனளித்த வான்போன்றும் வள்ளல்தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

 தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் அவரால் பயன்பெற்றவராக, அவர் தீட்டிய திட்டங்களால் பயன்பெற்றவராகத்தான் இருப்பார்கள். அந்த வகையில், அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்குத்தான் இன்றைய நாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சமுதாயத்துக்காக உழைத்த எத்தனையோ பெருமக்களுக்கு சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்கள் அமைத்தவர் கலைஞர். அவருக்கு எத்தனை சிலை அமைத்தாலும் ஈடாகாது. அண்ணா சாலையில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் இந்த சிலை ஈடுஇணையில்லாதது.

இதே அண்ணா சாலையில் பெரியார் விருப்பப்படி திராவிடர் கழகத்தால் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால் அது சிலரால் கடப்பாரையை கொண்டு இடிக்கப்பட்டது. அப்போதும் கலைஞருக்கு கோபம் வரவில்லை, கவிதைதான் வந்தது. என்ன கவிதை எழுதினார் என்றால், ‘உடன்பிறப்பே... செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்ன தம்பி என்னுடைய முதுகிலே குத்தவில்லை, நெஞ்சியில்தான் குத்துகிறான். அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க... வாழ்க...’ என்று எழுதி காட்டியிருக்கிறார்.

 அதே கலைஞர், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். அப்படி வாழப்போகிற தலைவரின் தலைமை தொண்டன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லும் முழக்கம் என்னவென்று கேட்டால், வாழ்க வாழ்க வாழ்கவே, கலைஞர் புகழ் வாழ்கவே.
இவ்வாறு அவர் பேசினார். கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்