SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூர் அருகே பயங்கரம் தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்டது கணவனா? கள்ளக்காதலனா?

2022-05-24@ 00:04:15

திருப்பூர்: திருப்பூர் அருகே தாய் மற்றும் 2 மகன்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது கணவனா, கள்ளக்காதலனா என போலீசார் விசாரிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி (எ) பூமாரி (38). இவர் மகன்கள் தர்ணீஷ் (9), நித்திஷ் (6) ஆகியோருடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, திருப்பூர் அருகே சேடர்பாளையம், மொட்டுவாதோட்டத்தில்  வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். முத்துமாரி அருகில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 3 நாட்கள் மட்டும் வேலை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாக முத்துமாரியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது முத்துமாரி, மகன்கள் தர்ணீஷ், நித்தீஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தகவலறிந்து திருமுருகன்பூண்டி போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முத்துமாரியின் பின் பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு  ஏற்பட்டுள்ளது. தர்ணீசுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கு எந்த வகையான ஆயுதங்களும்  கைபற்றப்படவில்லை. எனவே 3 பேரும் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மோப்ப நாய் வெற்றி, சிறிது தூரம் ஓடி சென்று பின்னர் நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இந்த கொலை வழக்கு குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் பத்மாவதியிடம் விசாரித்தபோது அவர், ‘‘கடந்த 15 நாட்களுக்கு முன்பு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்களை அழைத்து வந்தார். பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். முன்பு இருந்த வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்கு இடவசதி இல்லாததால் இங்கு குடியேற வந்ததாக தெரிவித்தார். அதனை நம்பி வாடகைக்கு வீட்டை கொடுத்தேன். தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் சண்டையிட்டு வந்தனர். எனவே நான் வீட்டை காலி செய்யும்படி கூறினேன்’’ என தெரிவித்தார்.

இதன்மூலம் அந்த நபர்தான் 3 பேரையும் கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார்  உறுதிபடுத்தியுள்ளனர். இது பற்றி போலீசார் கூறும்போது, ‘‘முத்துமாரியின் வீட்டுக்கு வந்து சென்றவர் அவரது கணவரா? அல்லது கள்ளக்காதலனா? என்பது குறித்து விபரம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த நபர் பணியாற்றியதாக கூறப்படும் பனியன் நிறுவனத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் தினசரி சென்று வந்த இடங்களின் விபரங்களை சேகரித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறோம்’’ என தெரிவித்தனர். அந்த நபர் பிடிபட்டால்தான் தாய், 2 மகன்கள் கொலைக்கான காரணம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 உடல்களும் பெட்சீட்டால் மூடல்
3 பேரையும் கொடூரமாக அடித்துக் கொலை செய்த கொலையாளி மூவரின் உடலையும் ஒரு பாயில் வைத்து பெட்சீட்டால் மூடிவிட்டு தப்பித்துள்ளார். போலீசாரால் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் எப்போதும் தலையில் தொப்பி  அணிந்திருப்பார். முகக்கவசம் அணிந்திருப்பார். அக்கம்  பக்கத்தில் தன்னுடைய பெயரை கார்த்தி என கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்