SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியூகம் தேவை

2022-05-23@ 23:59:32

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த அரிய வாய்ப்பை ஒன்றிய அரசு நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குவாட் மாநாட்டில் உக்ரைன்- ரஷ்யா போர் விவகாரத்தை அமெரிக்கா எழுப்ப வாய்ப்பு உள்ளது. எனவே அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனத்துடன் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும்.

ரஷ்யாவுக்கு எதிராக இந்தியாவை திருப்பி விடும் வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அதற்கான பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. ஆகையால், குவாட் மாநாட்டில் முக்கிய பேச்சாக உக்ரைன்- ரஷ்யா போர் விவகாரம் இருந்து விடக்கூடாது. இது தேவையில்லாத மனக்கசப்பை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தி விடும். அமெரிக்கா அதற்கான சூழலை ஏற்படுத்தினாலும், ராஜதந்திர முறையை ஒன்றிய அரசு கையாள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பிறநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. ஆனால், குறிப்பிட்ட எல்லைக்குள் பிற நாடுகளின் முதலீடு உள்ளிட்ட விஷயங்கள் இருக்க வேண்டியது கட்டாயம்.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். குவாட் மூலம் சீனாவுக்கு மறைமுகமாக கடிவாளம் போடும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்க வேண்டியது அவசியம். அப்போது தான் சீனாவுக்கு அச்சம் ஏற்படும். பொருளாதாரம், பாதுகாப்பு ரீதியாக சீனாவுக்கு செக் வைக்க குவாட் அமைப்பை ஒன்றிய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் சீனா முன்னேறி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. எனவே சீனாவுக்கு எதிராக அமெரிக்காவை களத்தில் இறக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

லடாக் எல்லையில் சீனா தொந்தரவு கொடுத்து வருகிறது. ஆக்கிரமிப்பு பகுதியில் பாலம் கட்டும் பணியிலும் சீனா இறங்கியுள்ளது. இதன் மூலம் சீனாவின் நோக்கம் என்ன? எல்லையில் மீண்டும் மோதல் போக்கை ஏற்படுத்த சீனா விரும்புகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எக்காலத்திலும் இந்தியாவுக்கு சீனா நண்பனாக இருக்க போவதில்லை என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் சீனாவுக்கு எதிரான மன நிலையில் பல்வேறு நாடுகள் உள்ளன.

ஆனால், அந்நாடுகள் நேரிடையாக சீனாவை எதிர்க்க தயக்கம் காட்டி வருகின்றன. உலக அரங்கில் சீனாவை இந்தியா நேரிடையாக எதிர்க்கும் போது தான், நமக்கு உண்மையான நட்பு நாடுகள் எவை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். சீனாவின் பெயரை சொல்லி, அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தால் தான் எல்லையில் சீனாவின் மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். குவாட் உச்சி மாநாடு மூலம் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் வலுவான உறவை மேலும் வலுப்படுத்த முடியும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்