SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை பிரபல மாலில் நடந்த மது விருந்தில் அதிர்ச்சி சம்பவம் அதிக போதையில் மயங்கி விழுந்து பலியான ஐ.டி. ஊழியர்: போதைப்பொருள் குறித்து போலீஸ் விசாரணை

2022-05-23@ 05:22:02

சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் நேற்று முன்தினம் இரவு, உரிய அனுமதியின்றி மது விருந்து  நடத்தப்பட்டது.  இதில், மதுபோதையில்  ஐடி ஊழியர் மயங்கி விழுந்தது பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, இவ்விருந்தில் வழங்கப்பட்ட மதுவில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் போதைபொருள் ஏதேனும் கலக்கப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில், பெரும்   அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை திருமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல மால் உள்ளது. இந்த மாலில் தியேட்டர், வணிக வளாகம், பார் மற்றும் கிளப்புகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு அடிக்கடி மதுவிருந்து நடக்கும். இதற்காக, ஒருவருக்கு ரூ.1500 கட்டணமாக ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படுகிறது.  இந்நிலையில்,  இங்குள்ள பாரில், நேற்று முன்தினம் இரவு மது விருந்துடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், இதில், 900க்கும் மேற்பட்டோர் போதையில் ஆட்டம், பாட்டம் என்று ஒரே சத்தமாக இருப்பதாகவும், பிரேசில் நாட்டின் பிரபல பாடகர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்  அரும்பாக்கம்  மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அரும்பாக்கம் மதுவிலக்கு ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை சுமார்  2 மணி அளவில், அந்த மாலில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மது விருந்தில் ஆண்கள்,  பெண்கள் என ஏராளமானோர் மேற்கத்திய இசை, பாட்டுக்கு ஏற்றவாறு,  போதையில் தள்ளாடியபடி நடனமாடி கொண்டிருந்தனர். போலீசார் அரங்கில் சோதனை செய்வது கூட தெரியாத புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு  போதையில் தள்ளாடியபடி ஆடிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து, போலீசார் மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அரசிடம் முறையான அனுமதி பெறாமல் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சட்ட விரோதமாக நிகழ்ச்சி நடத்தியவர்களை அழைத்து போலீசார் எச்சரித்துக்கொண்டிருந்தனர். அப்போது, தரையில் வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்,  அவரை போலீசார் எழுப்பியபோது,  சுயநினைவின்றியும் அசைவற்றும் கிடந்தார். இதனால், அந்த நபரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் முலம் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தார். தகவலறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் நடத்திய விசாரணையில்,  உயிரிழந்தவர் சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்குமார்(22) என்பதும்,    அதிக போதையில் இருந்த இவர் திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததும், அவருடைய நண்பர்களும் போதையில் இருந்ததால், அவர்களுக்கு பிரவீன்குமார் கீழே விழுந்த விஷயமே தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர்களும் ஓவர் போதையில் இருந்ததால், பிரவீன்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுவிருந்து நடைபெற்ற பாருக்கு சீல் வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த விக்னேஷ்சின்னதுரை, மார்க், பரத் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

900க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மது விருந்தில் 900க்கு மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வெளிநாட்டு மதுபானங்கள் என்று தெரிகிறது. போதையில் வாலிபர் மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளதால் மதுவில் போதை பொருட்கள் கலந்து  இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, இந்த பார்ட்டியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதா என்றும் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

 • same-sex-27

  மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்