அனைவருக்கும் மானியம்
2022-05-23@ 03:35:08

கொரோனா காலத்தில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலையேற்றமும், காஸ் விலை உயர்வும் சம்மட்டி அடியாகவே இருந்தன. அதன் பின்னரும் விலையேற்றம் தொடர்கதையாகவே இருந்தது. இவற்றின் உச்சமாக 5 மாநில தேர்தல்கள் முடிந்த பின்னர், ரஷ்யா- உக்ரைன் போரை காரணம் காட்டி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்தது. இதையடுத்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் இப்போது விலை குறைப்பு நடந்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்றாலும், எரிவாயு மானியம் அறிவிப்பில் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சமையல் எரிவாயு மானியம் தற்போது ரூ.200 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மானியம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் 30 கோடி எரிவாயு இணைப்புகளில் 22 கோடி இணைப்புகளுக்கு இந்த மானியம் கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த சில மாதங்களாகவே சிலிண்டர் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான ஒரு சிலிண்டர் விலை கூட ஆயிரத்தை தாண்டி காணப்படுகிறது.
ஒரு காஸ் சிலிண்டர் விலை ரூ.1018.50 ஆகவும், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.2507 ஆகவும் உள்ளது. ஏழை, நடுத்தர கூட்டு குடும்பங்கள் மாதம்தோறும் இரு சிலிண்டர்கள் வரை பயன்படுத்தும் நிலையில், ரூ.2 ஆயிரம் வரை செலவிட வேண்டியதுள்ளது. இந்நிலையில் வறுமைக்கோடு என்கிற ஒரு கோட்டை உருவாக்கி கொண்டு, ஒன்றிய அரசின் மானியம் குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது மற்றவர்களை அதிகளவு பாதிக்கும்.
இறக்குமதி சம விலை என்னும் முறையில் சமையல் காஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. காஸ் விலையை பொருத்தவரை சவுதி அரம்கோ நிறுவனத்தின் விலையே பெருஞ்சந்தை விலையாக இருக்கிறது. மூலப்பொருள், போக்குவரத்துக் கட்டணம், துறைமுக கட்டணம், கஸ்டம்ஸ் வரி உள்ளிட்டவற்றை சேர்த்தே இறக்குமதி சம விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு உள்நாட்டு போக்குவரத்து, சிலிண்டர்களில் நிரப்பும் கட்டணம், மார்க்கெட்டிங் கட்டணம், லாபம், டீலர் கட்டணம் இவற்றுடன் ஜிஎஸ்டி சேர்ந்த பிறகு நமக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்தியாவுக்கு தேவையான சமையல் காஸ் தேவையில் பாதி அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்கிறோம். மீதம் உள்நாட்டிலே தயாராவதால் இறக்குமதி சம விலையை அடிப்படையாக கொண்டு ஒட்டுமொத்த சில்லறை விற்பனை விலையை எப்படி நிர்ணயம் செய்ய முடியும் என்று கேள்வி எழுகிறது. விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பங்களின் நிதி நிலைமை ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும்போது இதுபோன்ற சிலிண்டர் விலை உயர்வும், அதற்கு மானியம் எல்லோருக்கும் கிடைக்காது என்பதும் சரியான தீர்வல்ல. சிலிண்டருக்கான மானியத்தை அனைத்து குடும்பங்களுக்கும் நீட்டிப்பதே சிறந்ததாக இருக்கும்.
மேலும் செய்திகள்
தொடரும் அதிரடி
பெருமையான தருணம்
புதிய போர் தந்திரம்
தொழில்துறையில் அபாரம்
திடீர் போர்க்கொடி
தாய்மொழியை நேசிப்போம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!