SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 வாரங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசரநிலை வாபஸ்: மாணவர்கள் பேரணியில் தடியடியால் பரபரப்பு

2022-05-22@ 02:17:41

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் 2 வாரங்களுக்குப் பிறகு நேற்று வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் போராட்ட களத்திற்கு செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் தலைநகர் கொழும்புவில் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை நாசமாக்கிய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர். நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்ததால், அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் 2ம் தேதி முதல் முறையாக அவசர நிலையை அமல்படுத்தினார். ஓரிரு நாளில் அவசரநிலை வாபஸ் பெறப்பட்டது.

ஆனாலும், தலைநகர் கொழும்பு காலி முகத்திடலில் பிரதமரின் தலைமைச் செயலகம் முன்பாக பொதுமக்கள் முகாமிட்டு அமைதிப் போராட்டம் நடத்தினர். இதனால் கடந்த 6ம் தேதி மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, கடந்த 9ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், அவரது ஆதரவாளர்கள், காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் கடும் வன்முறை வெடித்தது. நாடு முழுவதும் பரவிய வன்முறையில் ஆளுங்கட்சி எம்பி உட்பட 9 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்ட படுகாயமடைந்தனர். ராஜபக்சே மற்றும் எம்பி, அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை கண்டதும் சுட ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு, பொருளாதாரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், இலங்கையில் போராட்டங்கள் சற்று ஓய்ந்துள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டங்களும் வலுவிழந்துள்ளன. இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பும் நிலையில், 2 வாரங்களுக்குப் பிறகு அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அதிபரின் தலைமைச் செயலகம் நேற்று அறிவித்தது. நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்படுத்தவே அவசர நிலை கொண்டு வரப்பட்டதாகவும் தற்போது நிலைமை சீராகி இருப்பதால், அது வாபஸ் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, தலைநகர் கொழும்புவில் மாணவர் அமைப்பினர் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற தடையை மீறி போராட்டம் நடத்திய அவர்கள், காலி முகத்திடலை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் தலைநகர் கொழும்புவில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.

* தமிழக நிவாரண பொருட்கள் இன்று கொழும்பு அடையும்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி பொருட்கள் அனுப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 9000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர், 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துகள் உட்பட ரூ.45 கோடிக்கான நிவாரண பொருட்களுடன் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட கப்பலை கடந்த 18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடையும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.

* இந்தியா, ஜப்பான் உதவி
பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அந்த வகையில், கடன் உதவி திட்டத்தின் கீழ், இந்தியா அனுப்பிய 40,000 மெட்ரிக் டன் டீசல் நேற்று இலங்கையை சென்றடைந்தது. இதே போல, இலங்கையில் உணவு பாதுகாப்பிற்காகவும், அங்குள்ள பள்ளிகளில் உணவு திட்டத்திற்காகவும், ஐநாவின் உலக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.11,250 கோடி அவசரகால நிதி உதவி வழங்குவதாக ஜப்பான் அரசு நேற்று அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்