SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடிகோடியா சுருட்டினவங்க இருக்க... நாங்க ஏன் செலவழிக்கணும்னு குமுறும் இலைக்கட்சி பிரமுகர்கள்பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-05-21@ 00:17:30

‘‘செலவழிக்க ஆளில்லாம வீக்காகி போன கட்சி மாவட்டத்தில் மேலும் மேலும் பலவீனமடைந்து வருவதுபற்றி தெரியுமா’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் கடந்த இலைக்கட்சி கால ஆட்சியில் பலர், கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததாக புகார்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில சைக்கிளில் சென்ற இலைக்கட்சிக்காரர்களில் பலரும், தற்போது விலை உயர்ந்த சொகுசு கார்களில் பறக்கின்றனர். இலைக்கட்சி ஆட்சியை இழந்ததும், பணத்தை சுருட்டினவங்க எல்லாம் தலைமறைவாகிட்டாங்களாம்.. குறிப்பா, முன்னாள் பால்வளக்காரர் ஆதரவாளர்களையும், அவருக்கு எதிர்தரப்பில் களமிறங்கி காசு பார்த்தவர்களையும் இப்போது கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காணவில்லையாம்.. மெடல் மாவட்டத்தில் செலவழிக்க ஆளில்லாமல் இலைக்கட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் காற்றாடுகின்றன. சில நாட்களுக்கு முன்னால மாவட்டத்திற்கு வந்த சேலத்துக்காரருக்கு உரிய வரவேற்பு வழங்கப்படவில்லையாம்.. கூட்டம் கூட்டி, கொடி தோரணம் கட்டி வரவேற்கக்கூட நிர்வாகிங்க எந்த ஏற்பாடுகளும் செய்யாததால, சேலத்துக்காரர் ‘‘என்னய்யா இப்படி?’’ன்னு புலம்பியபடியே கிளம்பிட்டாராம்.. பணம் செலவழித்தால் வருமான வரித்துறை சோதனையில சிக்க வேண்டியிருக்குமேன்னு இலைக்கட்சி காலத்துல பணம் குவிச்சவங்க அப்படியே ஒருபுறம் ஒதுங்கிக் கிடக்க, ஆளுங்கட்சியா இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவித்தவங்க இருக்கும்போது, நாங்க ஏன் செலவழிக்கணும்னு மற்ற இலைக்கட்சி பிரமுகர்களும் குமுறுறாங்களாம்.. இதனால ஏற்கெனவே மாவட்டத்தில் வீக்காகி போன கட்சி மேலும் பலவீனமடைந்து வருகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘இலை ஆட்சியில் பணி நடக்காமலேயே நடந்ததா பில் போட்டு பணம் சுருட்டியது அம்பலமாகி இருக்காமே...’’ அதுபற்றி தெரியுமா என்றார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன், மயில், கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 3 மாவட்டங்களுக்கு, கடலோர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு ஆபீஸ் இருக்கு... கடந்த இலை ஆட்சியில் 350 பள்ளிகளுக்கு புனரமைப்பு பணி செய்ய டெண்டர் விடப்பட்டதாம்... இலை கட்சியின் ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேற்கொண்டார்களாம்... ஆனால், பள்ளிகளில் பணிகளை முடிக்காமல் பணிகள் முடிந்து விட்டதாக பில் போட்டு கணக்கு காட்டியுள்ளார்களாம்... இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ‘‘ரூ.3 எல் முதல் ரூ.10 எல் வரை’’ செலவழிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு இருந்ததாம்... இதில், பெரிய அளவில் நடந்த இந்த முறைகேடு தற்போதுதான் அம்பலாகியுள்ளதாம்.. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த 2 பேரின் சப்போர்ட்டில் தான் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருந்ததாகவும், முறைகேடுக்கு செயற்பொறியாளரான கடைசி எழுத்தில் முடியக்கூடிய சுந்தரமானவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளாராம்... இலை ஆட்சியில் நடந்த இந்த முறைகேடு குறித்த டாப்பிக்க தான் 3 மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குள் அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சோக கீதம் இசைக்கும் மாங்கனி மாஜி பற்றி சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில ரெண்டு எம்பி பதவிய பிடிக்க முக்கிய தலைகள் எல்லாம் முட்டி மோதிக்கிட்டிருக்கு.. சவுத் மாவட்டத்துக்கு வேணுமுன்னு ஒரு கோஷ்டியும், நார்த் மாவட்டத்துக்கு வேணுமுன்னு ஒரு கோஷ்டியும் முஷ்டியை முறுக்கிக்கிட்டிருக்கு.. இதுல மாங்கனி மாவட்டத்தை சேர்ந்த மாஜி ரெட் கில்ஸ், கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லைன்னு அந்த காலத்து சோகப்பாட்டை பாடிட்டு இருக்காராம்.. கூவத்தூரில இருந்து ஓடி வந்தவர் தேனி பக்கம் சாஞ்சாரு. பின்னர் மாங்கனி மாஜி கை ஓங்கிய நிலையில் இந்த பக்கமே இருந்துட்டாராம்.. எம்பியாக இருந்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு. சட்டம் படிச்சிருக்கிற நான் இங்கிலீசுல பேசுனா அனல்
பறக்கும்.

 இப்படித்தான் கல்விக்கடன், ரயில்வே தேர்வுல தமிழ்மொழியை சேர்க்கணும், லோக்ஆயுக்தா சட்டத்தை மாநில அரசுதான் கொண்டு வரணுமுன்னு பேசி அதுல வெற்றி கண்டிருக்கேன். கேள்வி, துணை கேள்வின்னு துளைச்சு எடுத்துருக்கேன். இவ்வளவு அனுபவம் கொண்ட என்னை எம்பியாக்குனா இன்னும் வேலைய நல்லா செய்வேன்னு அடிப்பொடிகள்கிட்ட சொல்லி புலம்பிக்கிட்டிருக்காராம். அதே நேரத்துல கடைசி வாய்ப்பா எனக்கு கொடுங்கன்னு ரெண்டு தலையோட இல்லாம துணைகளையும் சந்திச்சு கோரிக்கை வச்சிருக்காராம். எல்லோரும் உங்களுக்கு நல்ல எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு. உங்களை கட்சி பயன்படுத்துமுன்னு சொல்லியிருக்காங்களாம். ஆனா அவருக்கு இருந்த நம்பிக்கை படிப்படியா குறைஞ்சு போனதால இப்ப சோக கீதத்தை இசைச்சிக்கிட்டிருப்பதாக ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள் விம்முறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆன்லைன்ல ஹைடெக்கா ஆயிருக்காமே காட்டன் சூதாட்டம்..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான்.. வெயிலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் சர்வசாதாரணமா நடந்து வருகிறதாம். முன்பெல்லாம் நோட்புக் வைத்து பெயர் விவரங்கள் எழுதிக் கொண்டு வருவார்கள். இப்போ தகவல் தொழில்நுட்ப வளர வளர காட்டன் தொழிலிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை புகுத்தி தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. புதிய டெக்னாலஜியாக ஒவ்வொரு பகுதிக்கு என்று தனித்தனியாக வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நுழைவு கட்டணமாக ரூ.500 செலுத்திவிட்டு உறுப்பினராக சேர்ந்து கொள்ள வேண்டுமாம். பின்னர் தினந்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை பணத்தை கட்டி காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடுறாங்களாம். பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விடுகின்றனர். இதனால் பல கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி வருகிறது. குறிப்பா வெயிலூர், குடியான நகரங்களில் குறிப்பிட்ட சிலர் ஏஜென்சிகளாக செயல்பட்டு வர்றாங்களாம். இவர்களுக்கு உள்ளூர் காவல்துறையினரின் உதவி இருப்பதால் யாரும் ஒன்று செய்ய முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க காவல்துறை உயர்அதிகாரிகள் அதிரடியான நடவடிக்கையில் இறங்கினால் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்’’ என்றார் சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்