SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

2022-05-19@ 02:23:37

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் விபரம் வருமாறு:  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி(அதிமுக): கடந்த 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த திரு. பேரறிவாளன் அவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிமுகவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மற்றும் 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடித்தளமாகும். இது முழுக்க, முழுக்க அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி. பேரறிவாளனை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவரை உடனே விடுதலை செய்யவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேர்களை உடனடியாக விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

 வைகோ(மதிமுக): தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, பேரறிவாளனை விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கடந்தபோதிலும், முந்தைய ஆளுநரும், இன்றைய ஆளுநரும் அந்தக் கோப்பை கிடப்பில் போட்டு வைத்து இருந்தது மிகப்பெரிய அநீதி ஆகும். எந்தத் தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது. இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருப்பது மகிழ்ச்சி. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

கி.வீரமணி(திராவிடர் கழகம்): மனித உரிமை வரலாற்றில் இது மறக்கப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத ஓர் நல்ல தீர்ப்பு. அரசமைப்புச் சட்ட அமைப்பின் மீது வெகுமக்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் பெருத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மனிதநேயம் பொங்கும் தீர்ப்பு இது. ஆளுநர்கள், அவர்களை இயக்கும் அதிகார வர்க்கம் அரசமைப்புச் சட்டத்தின்படி நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற பாடத்தை, அதை மறந்தவர்களுக்கு நினைவுபடுத்திடும் அருமையான அரசமைப்புச் சட்டத்திற்கான விளக்கத்தைத் தந்துள்ள தீர்ப்பு இது.
ராமதாஸ்(பாமக): குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இனி பேரறிவாளன் அவரது இயல்பு வாழ்க்கையையும், இல்லற வாழ்க்கையையும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் தொடங்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டி மற்ற 6 பேரின் விடுதலைக்கான ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து தமிழக அரசே பெற முடியும். அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அண்ணாமலை(பாஜக): பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. ஒற்றுமை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டை சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்.

விஜயகாந்த்(தேமுதிக):  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது  செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து  உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். தனது பாதி காலத்தை  சிறையிலேயே அவர் அனுபவித்து விட்ட நிலையில் பேரறிவாளனின் விடுதலை அவரது  தாயார் அற்புதம்மாள் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அவரை விடுதலை  செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  அதேபோன்று கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரையும்  விடுவிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்திற்குட்பட்ட தீர்ப்பாகவே தமாகா கருதுகிறது. முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): நீதிபரிபாலன மகா சமுத்திரத்தில்  பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காக அமைந்துள்ள  உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மகிழ்ச்சியோடு  வரவேற்கிறோம்.

இந்தத் தீர்ப்பின் வெளிச்சத்தில் இதே வழக்கில்  சிறைபடுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், ஜெயகுமார், ராபர்ட், பையாஸ்,  ஜெயச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோரை விடுதலை
செய்யுமாறு கேட்டுக்  கொள்கிறது. திருமாவளவன்(விசிக): ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின்  உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும்  வெற்றி. அனைத்து ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய  ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்.

 இதேபோன்று, சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்