SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் புது சாம்பியன் கிடைக்கலாம்...: சோம்தேவ் கணிப்பு

2022-05-19@ 01:32:54

புதுடெல்லி: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் பிரிவில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு உள்ளதாக  இந்தியாவின் முன்னாள் நட்சத்திரம் சோம்தேவ் தேவ்வர்மன் தெரிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 22ம் தேதி  பாரிசில் தொடங்குகிறது. தற்போது தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போட்டி தமிழ், ஆங்கிலம்,  தெலுங்கு, இந்தி மொழிகளில் சோனி டிவியில் நேரடி ஒளிபரப்பாகிறது. இதையொட்டி, இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சோம்தேவ் நேற்று ஆன்லைன் மூலம் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அமெரிக்காவில் இருந்தபடி   சோம்தேவ் கூறியதாவது:
பிரெஞ்ச் ஓபனை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாக நடாலின் ஆதிக்கமே கொடிகட்டி பறந்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு காயங்களால் அவதிப்பட்டார். இப்போதும் காயத்தால் பிரச்னை. இருப்பினும் அவருக்கென தனி ஸ்டைலும், ஆட்டத்திறனும் இருக்கிறது. பங்கேற்பதை உறுதி செய்திருந்தாலும், போட்டிக்கு முன்பாக அவர் முழுமையாகக் குணமடைவது  கஷ்டம்தான்.

இந்திய வீரர்கள் இரட்டையர் பிரிவில் சாதித்தாலும், ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவதே அரிதாக உள்ளது. ராம்குமார் ராமநாதன் நன்றாக விளையாடுகிறார். டேவிஸ் கோப்பையல் சிறப்பாக விளையாடினார். அதனால் அவர் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார் என்ற  நம்பிக்கை உள்ளது. இளம் வீரர்கள்  இந்த முறை அதிகம் சாதிப்பார்கள் என்று நினைக்கிறேன். அதிலும்   ஸ்பெயினின் கார்லோஸ்  அல்கராஸ் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். மாட்ரிட் ஓபனில் நடால், ஜோகோவிச் என முன்னணி வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கிறார். கிராண்ட் ஸ்லாம் போட்டி மாறுபட்டது என்றாலும்  கார்லோஸ் போன்றவர்கள் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

மகளிர் பிரிவில் ஆஷ்லி ஓய்வு பெற்றது மிகப் பெரிய இழப்பு. நடப்பு சாம்பியன் கிரெஜ்சிகோவா இந்த ஆண்டு அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போதைய நம்பர் 1 இகா ஸ்வியாடெக், பியான்கா ஆண்ட்ரீஸ்கு, மரியா சாக்கரி என போட்டி கடுமையாகவே இருக்கிறது. சபலென்காவையம் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில்  புதுப்புது சாம்பியன்கள்தான் உருவாகி வருகின்றனர். இந்த முறையும் புதிய சாம்பியன் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவ்வாறு சோம்தேவ் கூறினார்.

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் இளம் வீராங்கனைகளுக்கு நல்ல வாய்ப்பு
தமிழக அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் இணைந்து முதல்முறையாக சர்வதேச மகளிர்  டென்னிஸ் போட்டியை   சென்னையில்  செப்டம்பர், அக்டோபரில் நடத்த உள்ளன. இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ள இப்போட்டி குறித்து சோம்தேவிடம் கேட்டபோது, ‘இது மிகவும் அற்புதமானது. இந்திய டென்னிசுக்கு வலு சேர்க்கும் நல்ல விஷயம். சர்வதேசப் போட்டி இந்தியாவில் நடப்பது இந்திய வீராங்கனைகளுக்கு வசதியாக இருக்கும்.

என்னதான் கடினமாக உழைத்தாலும் நமது வீராங்கனைகளுக்கு வெளிநாடுகளில் சென்று விளையாடுவதில்  செலவு உள்ளிட்ட பல  காரணிகளால் சிரமம் இருக்கிறது. அதனால் டபிள்யூடிஏ போட்டி நமது நாட்டிலேயே நடப்பது நல்ல முயற்சி. இளம் வீராங்கனைகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். சென்னையில் ஏற்கனவே  ஏடிபி  டென்னிஸ் போட்டி  பல ஆண்டுகள் நடந்த வரலாறு இருக்கிறது. இப்போது டபிள்யூடிஏ போட்டியும் சிறப்பாக நடக்கும்’ என்றார்.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்