SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

2022-05-19@ 00:17:39

சென்னை: பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த நிலையில், வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவு கூரத்தக்க தீர்ப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு. தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில் - மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது.

இது இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும். ‘மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை’ என்று நீதிபதிகள் சொல்லியிருப்பது மிகமிக முக்கியமானது ஆகும். ‘ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும்’ என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள். ‘இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் கேட்கத் தேவையில்லை’ என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதியாகி இருக்கிறது. இது தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 2018ம் ஆண்டு தமிழக அமைச்சரவை கூடி, எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. அதற்கு தமிழக ஆளுநர், உடனடியாக ஒப்புதல் வழங்கி இருக்கவேண்டும். ஆனால் அதனை அளவுக்கு மீறி தாமதம் செய்தார் தமிழக ஆளுநர்.

ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக ஆட்சி அமைந்ததும், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தோம். ஆளுநர் உங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு விளக்கம் தாருங்கள் என்று விளக்கம் கேட்டோம். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருந்ததால், குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. அதேநேரத்தில், பேரறிவாளன் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குத்தான் அனைத்து உரிமைகளும் உள்ளது என்று வாதிட்டோம். கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்தி, மாநில அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள 161 ஆவது பிரிவு உரிமையை நிலைநாட்டினோம். இதனையே தங்களது மையக் கேள்வியாக உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவும் எழுப்பினார். ‘’இது அமைச்சரவையின் முடிவு. அதில் ஆளுநருக்கு முடிவெடுக்கும் சுதந்திரமான இடம் உள்ளதா? ஏன் ஒன்றிய அரசுக்கு அனுப்பினார்? அவர் மாநில அரசின் பிரதிநிதியா? ஆளுநருக்கு சில விலக்குகள் உள்ளன. இதுபோன்ற விஷயங்களில் எந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு சுதந்திரமான விருப்புரிமை ஏதேனும் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார் நீதிபதி நாகேஸ்வரராவ். அந்த வகையில் மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் இறுதி வெற்றி கிடைத்துள்ளது. இது முப்பது ஆண்டுகளை கடந்த சட்டப் போராட்டம் ஆகும். சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2000ம் ஆண்டு முதல்வர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அரசியல் சட்டம் 161வது பிரிவின் படி மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி அவர்களது விடுதலைக்கு தொடர்ந்து திமுக குரல் கொடுத்து வந்தது.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளும் கட்சியாக ஆனபோதும் ஒரே நிலைப்பாட்டை திமுக எடுத்தது. ஆளும்கட்சியாக ஆனபிறகும் குடியரசு தலைவருக்கு கடிதம் ஆளுநருக்கு அழுத்தம், ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல் உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்கள் என நாலா பக்கமும் முனைப்புடன் திமுக அரசு இயங்கியது. இறுதித் தீர்ப்பு இந்த அடிப்படையில் கிடைக்க இவை மிக முக்கியமான அடித்தளத்தை அமைத்திருந்தது. சிறையில் இருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சட்ட உரிமையின் அடிப்படையில் பரோல் கேட்டார். மனிதாபிமான அடிப்படையில் அரசு அவருக்கு அந்த உரிமையை 10 முறை வழங்கியது. பரோலில் இருந்தபடியே தனது சட்டப் போராட்டத்தை நடத்தி முதலில் பிணையில் வந்தார். இப்போது விடுதலை ஆகியிருக்கிறார்.

முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன். தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம். பெண்மையின் திண்மையை அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன், ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக் காலம் காட்டி இருக்கிறது. அற்புதம்மாளுக்கு என் வாழ்த்துகள். பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலையாக மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்துவிட்ட இத்தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்