SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நஞ்சு ஆனது பஞ்சு

2022-05-14@ 00:10:33

நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறைதான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இத்தொழிலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஜவுளித்தொழில் நலிவடைந்து வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஜவுளித்துறை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தற்போது, பஞ்சு விலை மற்றும் அதைத்தொடர்ந்து நூல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே போவதால், இத்தொழிலுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி ேமல் பருத்தி நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ‘பருத்தி ஆண்டு’ என கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு பருத்தி ஆண்டிலும் தமிழக நூற்பாலைகள் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான பஞ்சு பேல்களை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வாங்கி வருகின்றன. ஆனால், தற்போது பஞ்சு கொள்முதல் பெரும் சவாலாகிவிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ₹45 ஆயிரமாக இருந்த ஒரு கண்டி பஞ்சு விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.

இந்த விலை ஏற்றம் காரணமாக, நூல் விலையும் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 200 ரூபாய்க்கு (கிலோ) விற்கப்பட்ட நூல், இன்றைய நிலவரப்படி 395 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 95 சதவீத விலை உயர்வு ஆகும். இந்த விலை உயர்வு காரணமாக, ஆலைகளை இயக்கமுடியாத சூழலுக்கு ஜவுளித்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர். பல ஜவுளி தொழிலதிபர்கள் இத்தொழிலை கைவிட்டுவிட்டனர். பல ஆலைகள் மூன்று ஷிப்டுகளுக்கு பதிலாக, ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்குகின்றன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பின்னலாடை,  ஆயத்தஆடை உள்ளிட்ட ஜவுளித்துறைக்கான ஆர்டர்கள் வழக்கத்துக்கு மாறாக 25 சதவீதம்  சரிந்துள்ளன. இந்த நிலை நீடித்தால் போட்டி  நாடுகளான கம்போடியா, பங்களாதேஷ், வியாட்நாம் போன்ற நாடுகளுக்கு ஆர்டர்கள்  சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட  தமிழகம் முழுவதும் ஜவுளித்தொழில் அடியோடு அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது.  பஞ்சு விலை நஞ்சாக மாறிவிட்ட பின்னரும், ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இத்துறையினரை வேதனை அடையச்செய்துள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடியில் நெசவாளர்கள் ஒரு வார வேலை நிறுத்தத்தை நேற்று முன்தினம் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், நெசவாளர்களின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. மக்கள் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதார நலனுக்காகவும் செயல்பட வேண்டிய ஒன்றிய அரசு நெசவாளர்களுக்காக இறங்கி வந்து நல்லது செய்யாமல் மவுனம் காத்து வருவது நெசவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விரைவில் இதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைவரது விருப்பம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்