SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக அரசின் ஓராண்டு சாதனை அனைத்துக்கட்சி தலைவர்கள் வாழ்த்து

2022-05-08@ 00:24:51

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு சாதனையையொட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டி பேசினர். அது வருமாறு: செல்வபெருந்தகை (காங்கிரஸ்): எட்டாவது முதல்வர், எவரும் எட்டாத சாதனைகளை செய்து  கொண்டிருக்கின்றார். சமூகநீதியின் நூற்றாண்டுக் கனவுகள் கனியும்  தருணம் இது. அற்புதமான தமிழகம் உருவாக அடித்தளம் அமைக்கும் இந்த ஓராண்டு  ஆட்சி, தமிழகத்தின் ஆட்சி ஓர் இனத்தின் அடையாள ஆட்சி.

ஜி.கே.மணி (பாமக): எல்லா சட்டமன்ற  உறுப்பினர்களின் தொகுதிகளுக்கும் கல்லூரிகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை  வழங்கியிருப்பது, முதல்வரின் பரந்த நோக்கத்தைக் காட்டுகிறது.
வானதி சீனிவாசன் (பாஜ): அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ஒரு நீடித்த  நிலையான வளர்ச்சியாக இருக்கும் என்கின்ற உங்கள் உணர்விலே நாங்கள்  ஒன்றுபடுகிறோம்.
சிந்தனைசெல்வன் (விசிக): இது திராவிட மாடல் அரசு. அன்னை தமிழில் அர்ச்சனை என்பது ஒரு வடிவ மாற்றம்.  இங்கே நடக்கிற உரையாடல்களெல்லாம் இந்து மதத்திற்குள் நிகழக்கூடிய சீர்திருத்தம்தானே தவிர, இந்து மதத்திற்கு எதிரானது அல்ல. சந்திரமுகி படத்திலே ஒரு காட்சி வரும். (மணியடிக்கப்பெற்றது) ஜோதிகா அலறுகிறபோது எழுந்துநின்று அந்த கதாநாயகன் அதட்டி ஒரு சொல்லைச் சொல்லுவார். அப்படி ஓர் அதட்டலைப்போன்று இது திராவிட மாடல் அரசு என்று சொல்கிற அந்த அற்புதத்தை நான் பார்க்கிறேன்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூ): கொரோனா  பெருந்தொற்றில் இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ஆக்சிஜன்  பற்றாக்குறையால் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருந்த இக்கட்டான சூழலில் நமது  முதல்வர் தலைமையில் பதவியேற்ற திமுக அரசு இரண்டாவது அலையையும், அதனைத்  தொடர்ந்து மூன்றாவது அலையையும், சமாளித்து மாபெரும் வெற்றிபெற்றது.
ராமச்சந்திரன் (இந்திய கம்யூ):  தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்த  பாடல், நம்முடைய முதல்வர் பெயரைச் சொல்லி, ‘தளபதிதான் வராரு, தமிழகத்தில்  விடியல்தான் தராரு’ என்ற பாடலுக்கேற்ப, இன்றைக்கு தமிழகத்தில் இந்த  ஓராண்டுக்காலத்தில் ‘ஒரு விடியல் ஆட்சி’ நடந்து கொண்டிருக்கின்றது. இந்த  ஓராண்டுக்கால ஆட்சி என்பது விடியலின் ஒளி கீற்றாக அமைந்திருக்கிறது.
ஜவாஹிருல்லா (மமக): இந்த ஆட்சியில் இரண்டு விஷயங்கள். ஒன்று, கனிவு, மற்றொன்று துணிவு. ஒரு ஆட்சியாளருக்கு கனிவும் இருக்க வேண்டும், துணிவும் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த ஆட்சி கனிவான ஆட்சியாக இருந்து வந்திருக்கின்றது.

சதன் திருமலைக்குமார் (மதிமுக): 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஓராண்டு முடிவடைவதற்குள்ளாகவே முனைந்து நின்று நிறைவேற்றிய ஓய்வறியா உழைப்பாளியாம் நம் முதல்வரின் செயல்திறனை நாடும், ஏடும், நல்லவர்களும், மாண்பமை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் பாராட்டி, புகழ் மாலை சூட்டியிருப்பது திராவிட இயக்கத்திற்கு பெருமை சேர்க்கின்றது.
ஈஸ்வரன் (கொமதேக): ஆட்சியை  ஆரம்பிக்கும்போதே, இது நமது அரசு, மக்கள் அரசு என்று சொல்லித்தான்  ஆரம்பித்தார். அது வாய்வார்த்தையல்ல; ஓராண்டு காலமாக அப்படி வாழ்ந்து  காட்டியிருக்கிறார் என்பதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நான்  பாராட்டுகிறேன்.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி):  பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு தந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு  பொற்கால ஆட்சியை சேர, சோழ, பாண்டியர்களுக்குபின் எங்கள் தலைவர் கலைஞரின்  அன்பு வாரிசு இந்த மண்ணில் உருவாக்க முடியும் என்பதை இன்றைக்கு  நிரூபித்து காட்டியிருக்கிறார்.

* சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி உங்களில் ஒருவனாக இருந்து என் கடமையை ஆற்றுவேன்
திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், கடந்த ஓராண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டார். கூட்டணி கட்சி தலைவர்களும் முதல்வரை பாராட்டி பேசினர். இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வாழ்த்திய அத்தனை பேருக்கும் நான் இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை அரசின் சார்பிலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ‘பதவியை பதவியாக பார்க்காதே. பதவியை பொறுப்பாக பார். அப்போதுதான் பொறுப்போடு பணியாற்ற முடியும்’ என்று தலைவர் கலைஞர் அடிக்கடி எனக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.

ஆகவேதான், அதை பொறுப்போடு, பொறுப்பை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.  இந்த இடத்திலே முதல்ராக இருந்து, ஆட்சியை நடத்தி, சமுதாயத்திற்காக, இந்த நாட்டிற்காக உழைத்திருக்கக்கூடிய காமராஜராக இருந்தாலும், அண்ணாவாக இருந்தாலும், நம்முடைய தலைவர் கலைஞராக இருந்தாலும், அவருடைய இனிய நண்பராக இருந்த எம்.ஜி.ஆராக இருந்தாலும், அவர்களெல்லாம் ஆற்றியிருக்கக்கூடிய அந்த பணிகளை நான் ஒருக்காலும் மறந்திடமாட்டேன். ஆகவே, அவர்கள் வழிநின்று என்றைக்கும் நான் என்னுடைய கடமையை ஆற்றுவேன். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ‘உங்களில் ஒருவனாக’ இருந்து என்னுடைய கடமையை ஆற்றுவேன். எனவே, வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண ஆலோசனை குழு
சட்டப்பேரவையில் நேற்று வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது: பல ஆண்டுகளாக முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல் உள்ளிட்ட நீண்ட கால தீர்வுகளை வழங்க ஆலோசனை குழுக்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் நலனை பேணிடவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.317.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலங்கையில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

* அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் நலன் பாதுகாக்க புதிய சட்டம்
பேரவையில் நேற்று சட்டமசோதா ஒன்றை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  குடியிருப்பு உரிமையாளர்களின் நல அமைப்பை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது வீட்டுவசதி தொழிலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தின்படி, முந்தைய சட்டத்திற்கு இணங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை திறம்பட வரையறுப்பதற்காகவும், குடியிருப்பு சமூகத்தினை திறம்பட நிர்வகித்து பராமரிக்கவும் 1994-ம் ஆண்டு சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை இயற்ற பரிசீலித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்