SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஏற்காட்டில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தது: 67 மலை கிராமங்களும் இருளில் மூழ்கியதால் மக்கள் அவதி

2022-04-19@ 11:49:31

ஏற்காடு: ஏற்காட்டில் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்ததால் மலைகிராமங்கள் இருளில் மூழ்கியது. போக்குவரத்து பாதித்து கிராமங்கள் தனித்தீவாக மாறிய நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மலைவாசஸ்தலமான ஏற்காடு, தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 5,326 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டிற்கு 20 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். வானுயர்ந்த மரங்கள், பசுமை போர்த்திய புல்வெளிகள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என்று ரம்மியமாக காட்சியளிக்கும் ஏற்காடு, சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக திகழ்கிறது. ஆனால் நிரந்தரமாக அங்கேயே வசிக்கும் மக்களுக்கு இன்னல்கள் நிறைந்த பகுதியாகவே ஏற்காடு இருக்கிறது.

 குறிப்பாக மழைக்காலங்களில் மலைப்பாதையில் ஏற்படும் மண்சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் தனித்தீவாக ஏற்காடு மாறி விடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டித்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற நேரங்களில் பலத்த மின்வெட்டும் ஏற்பட்டு மக்களை நிலை குலையச் செய்கிறது. இந்தவகையில் ஏற்காட்டில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டத்திலும் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8.45 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஏற்காட்டில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பிகளும் மரங்களும் சாலையில் ஆங்காங்கே உடைந்து விழுந்தன. இதனால் ஏற்காட்டில் உள்ள 67 மலைகிராமங்களிலும் மின்தடை ஏற்பட்டது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை மற்றும் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பலமணி நேரமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கிராமங்களுக்கு செல்லும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வெளியே எங்கும் செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.  கிட்டத்தட்ட 30 கிராமங்களுக்கு மேல் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நகரியத்தில் நம்பிக்கைமேரி என்பவரின் வீட்டின் மேல் மரம் முறிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள் இருந்த நம்பிக்கை மேரி உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகளும் உரிய நேரத்தில் ஊர் செல்ல முடியாமல் தவித்தனர்.

இது குறித்து ஏற்காடு மலைகிராம மக்கள் கூறுகையில், ‘‘ஏற்காடு மலைகிராமங்களில் பெரும்பாலான இடங்களில் பழுதடைந்த மின்கம்பங்களும், நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத மின்கம்பங்களும் அதிகளவில் உள்ளது. இவை இயற்கை பேரிடர் காலங்களில் உடைந்து மரங்களின் மீது விழுவதும், இதனால் தொடர்ந்து கிராமங்கள் இருளில் மூழ்கி தவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பலனில்லை,’’ என்றனர். மழை அளவு: மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை அளவு வருமாறு- எடப்பாடி 50 மி.மீ., ஏற்காட்டில் 45.2, மேட்டூரில்  33.5, ஆத்தூரில் 31.4, தம்மம்பட்டியில் 18,  சேலம் நகரில் 17.8, ஓமலூரில் 16.2, வீரகனூரில் 12, கரியகோவிலில் 8,  பெத்தநாயக்கன்பாளையத்தில் 7, சங்ககிரியில்  6.4, கெங்கவல்லியில் 6,  ஆனைமடுவில் 6, காடையாம்பட்டியில்  5 என்று மழை பதிவாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் மின் ஒயர்கள் உரசி வெடித்ததால் பரபரப்பு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,642 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கைகளுக்கான உறைகள், தலையணை உறைகள், போர்வைகள் தினமும் மருத்துவமனை சலவையகத்தில் சலவை செய்யப்படும். பணியாளர்கள் நேற்றும் வழக்கம் போல் சலவை பணியில் ஈடுபட்டனர். சலவையகத்திற்கான மின்வசதி தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒயரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றி அமைத்தனர். அதேநேரத்தில் மூடப்படாமல் வெளியில் தெரியும்படி இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழைநீர் மின் ஒயர் முழுவதையும் மறைத்து நிலத்திற்குள் சென்றுள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி திடீரென பட்டாசு வெடிப்பது போல் படபடவென வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாதிப்பு ஏற்படாத வகையில் சரிபார்த்தனர். ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மாநகரிலும் பெரும் சிரமம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மாநகர பகுதிகளிலும் வழக்கம் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாராயணநகர், சித்தேஸ்வரா, பச்சப்பட்டி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, கிச்சிப்பாளையம் உள்பட பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதேநேரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது மக்களை ஆசுவாசப்படுத்தியது.

தர்மபுரியில் 2 டன் மாம்பிஞ்சு உதிர்ந்தது
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம், சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, மல்லுப்பட்டி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 டன் மாங்காய், மாம்பிஞ்சுகள் உதிர்ந்தன. உதிர்ந்த மாங்காய்களை சேகரித்து வெள்ளிச்சந்தை, ராயக்கோட்டை மண்டியில் மிகக் குறைந்த விலைக்கு விற்றனர். இதனால் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகள், மிகவும் கவலையடைந்துள்ளனர். அதேபோல், வெண்ணாம்பட்டி, கடத்தூர், ஜக்கசமுத்திரம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில், மழையின் போது சூறைக்காற்று வீசியதில் 80க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை, மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுடன் வந்து சேதமடைந்த மின்கம்பங்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்