SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தர பிரதேசத்தில் ஆபரேஷன் தாமரை ஆரம்பமா?...யோகியுடன் சமாஜ்வாடி எம்பி திடீர் சந்திப்பு

2022-04-16@ 02:16:42

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 2வது முறையாக வெற்றி ஆட்சியை பிடித்தது. இத்தேர்தலில் பாஜ.வுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்திய ஒரே கட்சியாக சமாஜ்வாடி விளங்கியது. ஒரு கட்டத்தில் இக்கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உருவானதாகவே கருதப்பட்டது. இக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் பிரசாரமும், செயல்பாடும் அந்தளவுக்கு பிரமிப்பாக இருந்தது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தனக்கு போட்டியாக விளங்கும் கட்சிகளின் முக்கிய தலைவர்களை இழுத்து, அக்கட்சியை பாஜ பலவீனப்படுத்துவதை பாஜ வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால், உத்தர பிரதேச தேர்தலில் இது நேர்மாறாக இருந்தது.

அடுத்தது சமாஜ்வாடி ஆட்சிதான் என்ற பேச்சு பலமாக அடிபட்டதால், பாஜ.வை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், மூத்த தலைவர்கள் பலர் அக்கட்சிக்கு தாவினர். அதே நேரம், சமாஜ்வாடியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் யாரையும் பாஜ.வால் இழுக்க முடியவில்லை. சமாஜ்வாடி தலைமை பாஜ.வில் இருந்து வந்தவர்களை எல்லாம் வளைத்து போட்டு சீட் கொடுத்தது. ஆனால், தேர்தலில் இவர்கள் எல்லாம் தோல்வியை தான் தழுவினார்கள்.

இந்நிலையில், தேர்தல் ஆட்டம் முடிந்த நிலையில், உபி.யில் தனக்கு போட்டியாக உள்ள ஒரே பலமான கட்சியான சமாஜ்வாடியை பலவீனப்படுத்தும் விளையாட்டில் பாஜ. இறங்கி விட்டதாக கருதப்படுகிறது. இதன் முதல் கட்டமாக, இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது வீட்டில் சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை எம்பி சுக்ராம் சிங் யாதவ் நேற்று முன்தினம் தனது குடும்பத்தோடு சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது சமீபத்தில் பாஜ.வில் இணைந்த சுக்ராம் சிங்கின் மகன் மோகித் உடனிருந்தார்.  இது தொடர்பாக எம்பி சுக்ராம் சிங் யாதவ் கூறுகையில், “கடந்த மார்ச்சில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து அவரை நான் சந்திக்கவில்லை. எனவே, தற்போது அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்றேன்” என்றார். ஆனால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் சுக்ராம் சிங் யாதவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் பாஜ.வுக்கு தாவ தயாராவதாக சந்தேகிக்கப்படுகிறது.

 இது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க சுக்ராம் சிங் மறுத்துவிட்டார். ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை கர்நாடகா ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு பாஜ. வேறு எங்கும் பிரயோகம் செய்யவில்லை. இந்த முறை உபி.யில் சமாஜ்வாடியை பலவீனப்படுத்த, பாஜ இந்த அஸ்திரத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாஜ.விடம் சாய்ந்த அகிலேஷ் சித்தப்பா
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர் சிவபால் சிங் யாதவ். தனது  அண்ணனுடன் இணைந்து செயல்பட்டு வந்த இவர், கட்சியின் தலைமை பொறுப்பை அகிலேஷ் யாதவ் ஏற்ற பிறகு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தார். பின்னர், ‘பிரக்திசீல் சமாஜ்வாடி கட்சி - லோகியா’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். பாஜ.வுக்கு எதிராக செயல்பட்டு வந்த இவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அகிலேஷ் யாதவின் அழைப்பை ஏற்று சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்தார்.

மேலும், ஜஸ்வந்த் நகர் தொகுதியில் சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு நடந்த தனது கட்சியின் முதல் எம்எல்ஏ.க்கள் கூட்டத்துக்கு கூட, தனது சித்தப்பாவான இவரை அகிலேஷ் அழைக்கவில்லை. இதனால், அகிலேஷின் நடவடிக்கையை வெளிப்படையாகவே விமர்சித்தார்.

இந்நிலையில், இவரும் தற்போது பாஜ.வின் பக்கம் சாய்ந்துள்ளார். யோகி முதல்வராக பதவியேற்ற பிறகு சமீபத்தில் அவரை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, டிவிட்டரில் யோகியை இவர் பின்தொடர்ந்து வருகிறார். இதனால், விரைவில் இவர் தனது கட்சியை கலைத்து விட்டு பாஜ.வில் இணைய இருப்பதாக  கருத்துகள் உலாவி வருகிறது. ஆனால், சிவபால் மட்டும் இது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இவருடைய கட்சி சார்பில் விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய சிவபால், ‘உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது அம்பேத்கர், ராம் மனோகர் லோகியாவின் கனவு. இதை நிறைவேற்றுவதற்காக போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன்,’ என்று தடாலடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பொதுச் சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது பாஜ.வின் மிகப்பெரிய திட்டம். இதற்கு ஆதரவாக சிவபால் குரல் கொடுத்திருப்பது, பாஜ.வின் பக்கம் அவர் முழுமையாக சாய்ந்து விட்டதையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்