SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் ரவுடி கும்பலின் பின்னணியில் குளங்களில் சட்ட விரோதமாக வளர்க்கப்படும் தாமரை: இலைகளை பறித்து விற்பனை செய்ய கடும் போட்டி

2022-01-29@ 12:29:53

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குளங்களில் தாமரை வளர்க்க தடை உத்தரவு இருந்தும், சட்ட விரோதமாக ரவுடி கும்பலின் பின்னணியில் தாமரை வளர்க்கப்பட்டு இலைகள் பறிப்பதில் கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் விபரீதங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டம் நீர் நிலைகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குளங்கள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் ஆக்ரமிப்புகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், பஸ் நிலையங்கள் என கட்டப்பட, குளங்கள் அழிந்தன. குளங்கள் அழிந்ததால் விவசாய நிலங்களும் சுருங்கி போனது.

தற்போது மாவட்டத்தில் சுமார் 2000 குளங்கள் உள்ளன. இந்த குளங்களை நம்பி தான் சாகுபடி பணிகள் நடக்கின்றன. குளங்களின் நீர்பிடிப்பு தன்மையை தாமரை தண்டுகள், வேர்ப்பகுதிகள் குறைப்பதாக கூறி குளங்களில் தாமரை வளர்க்க உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறை சார்பில் தாமரை வளர்க்க எந்த வித குத்தகையும் விடப்படுவதில்லை. ஆனால் பிளாஸ்டிக் தடைக்கு பின் வாழை இலை, தாமரை இலைக்கு மவுசு அதிகரித்துள்ளது. இறைச்சி கடைகள், பூ கடைகள், ஓட்டல்கள் என எல்லா இடங்களிலும் தாமரை இலையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சமீப காலமாக தாமரை இலை பறிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

சாதாரணமாக இருந்த தாமரை தற்போது, குமரி மாவட்டத்தில் லட்சங்களை குவிக்கும் தொழிலாக மாறி உள்ளது. இதனால் ரவுடி கும்பல்கள் இதில் நுழைந்துள்ளன. பல்வேறு கோஷ்டிகளாக பிரிந்து குளங்களில் தாமரை வளர்த்து இலைகளை பறித்து விற்பனை செய்து வருகிறார்கள். சுசீந்திரம், நல்லூர், தேரூர், அஞ்சுகிராமம், இரணியல் பகுதிகளில் இவை அதிகரித்துள்ளன. அடிக்கடி ரவுடி கும்பல் இடையே மோதல்களும் நடந்து வருகின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களிலும் இவர்கள் தாமரை விதையை தூவி, வளர்த்து நள்ளிரவில் பறித்து வருகிறார்கள். இது தொடர்பாக பொதுப்பணித்துறை, வனத்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்ற பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய ஆளுங்கட்சியினரின் உதவியுடன் இவை நடத்தப்பட்டன. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதனால் தாமரை பூ வளர்ப்பது தொடர் கதையாகி உள்ளது. தாமரை பூ வளர்ப்பதால் குளங்களில் நீர் பிடிப்பு பாதிக்கப்படுவதுடன், தண்ணீர் திறக்கும் சமயங்களில் மடைகளில் சிக்கி இவை தண்ணீர் செல்ல இடையூறாக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். விவசாயிகள் குறை தீர் கூட்டங்களிலும் இந்த பிரச்னை எதிரொலிக்கிறது. மாவட்ட கலெக்டர் முன்னிலையில், குளங்களில் தாமரை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளிக்கிறார்கள்.

ஆனால் அதன் பின்னர் எந்த வித மேல் நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தாமரை பூ வளர்ப்பவர்கள் தொடர்ந்து சட்ட விரோதமாக குளங்களில் தாமரை பூ வளர்த்து, அதன் மூலம் லாபம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை முறையாக கண்காணித்து சட்ட விரோதமாக தாமரை பூ வளர்ப்பவர்கள் மீது, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் தொடர்ந்து நீடித்தால் இந்த பிரச்னையில் ஏற்படும் மோதல், விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று விவசாய சங்க பிரதிநிதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மீன் குஞ்சுகள் வளர்க்கவும் தடை வருமா?
குளங்களில் சட்ட விரோதமாக மீன்கள் வளர்ப்பவர்கள் இரவோடு இரவாக கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மீன் வளத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு இதற்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மாமூலும் கொடுத்து வருகிறார்கள். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். இதனால் கோடை காலங்களில் குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலை உள்ளது. எனவே சட்ட விரோதமாக மீன் குஞ்சுகள் வளர்ப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்