SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உபி.யில் காங். முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?: ராகுல் முன்னிலையில் சூசக அறிவிப்பு

2022-01-22@ 00:12:25

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை  7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் பாஜ, எதிர்க்கட்சியான சமாஜ்வாடி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அதனால், இந்த தேர்தலில் இழந்த பெருமையை மீட்டு விட வேண்டும் என்பதில் அக்கட்சி   தீவிரமாக உள்ளது. இதற்கான பொறுப்பை தனது மகளான பிரியங்கா காந்தியிடம், கட்சியின் தலைவரான சோனியா காந்தி ஒப்படைத்துள்ளார். இதற்காக, பல ஆண்டுகளாக பிரியங்கா காந்தி  உபி.யில் முகாமிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளையும், தேர்தலுக்கான பணிகளையும்  தொடர்ந்து செய்து வருகிறார். இதனால், கட்சியின் பலம் இங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2017  தேர்தலில் சமாஜ்வாடியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், படுதோல்வியை சந்தித்தன. பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனால், இந்த தேர்தலில் சமாஜ்வாடியும், காங்கிரசும் தனித்தே போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 166  தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. மேலும், இம்மாநிலத்தில் பாஜவின் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்தும், சமாஜ்வாடியின் முதல்வர் வேட்பாளராக அகிலேஷ் யாதவும் களமிறங்கி உள்ளனர். ஆனால், காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உபி இளைஞர்களுக்காக தனி தேர்தல் அறிக்கையை பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லியில் நேற்று கூட்டாக வெளியிட்டனர். அப்போது, ‘காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார்?’ என பிரியங்காவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த  அவர், ‘‘எல்லா இடங்களிலும் என்னுடைய முகம்தான்  காணப்படுகிறது. ஏன்... உங்களுக்கு அது தெரியவில்லையா?’’ என பிரியங்கா சிரித்தப்படி  திருப்பி கேட்டார்.  இதனால், நிருபர்கள் குழம்பினர். அதை உறுதிப்படுத்த, பிரியங்காவிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டனர். அதற்கு பதிலளித்த பிரியங்கா, ‘உபி தேர்தல் பிரசாரத்தில் என்னை தவிர வேறு எந்த காங்கிரஸ் தலைவர்களின் முகத்தையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால், உபி.யில் என் முகத்தை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம்,’’ என்றார் சூசகமாக. அப்படி என்றால், பிரியங்கா தான் உபியின் முதல்வர் வேட்பாளர் என்பதை உணர்ந்த நிருபர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுவது போல், ‘முதல்வர் வேட்பாளர் பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.  கட்சி அப்படி ஏதாவது முடிவெடுத்தால், அப்போது உங்களிடம் தெரிவிப்போம்,’ என்று பிரியங்கா முற்றுப்புள்ளி வைத்தார்.

கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜ வெற்றி பெற்று  யோகி ஆதித்யநாத் முதல்வரான போது, அவர் எம்எல்ஏ.வாக இல்லை.  அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு பெற்று முதல்வர் பதவியில் தொடர்ந்தார். அதேபோல், அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிடாமல் சட்டமேலவை உறுப்பினராக முதல்வர் பதவியில் இருந்தார். ஆனால், இந்த தேர்தலில் இந்த 2 பேரும்  போட்டியிடுகின்றனர். ஆதித்யநாத் கோரக்பூரிலும், அகிலேஷ் கர்ஹால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 2 தலைவர்களும் தேர்தலில் குதித்திருப்பதால் பிரியங்காவுக்கும் களத்தில் இறங்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது கட்டாயமில்லை. தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸ் வெற்றி பெற்றால் சட்டமேலவை மூலமாக அவர் முதல்வராக வாய்ப்புள்ளது.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணியா?
‘தேர்தலுக்கு பின் பாஜ.வை ஆட்சி அமைக்காமல் தடுப்பதற்காக வேறு கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?’ என்ற கேள்விக்கு, ‘தேர்தலுக்கு பிறகு ஒருவேளை  அப்படிப்பட்ட சூழ்நிலை  உருவாகினால், இந்த திட்டம் குறித்து பரிசீலிப்போம். எந்த கட்சியின் ஆட்சியானாலும் பெண்கள், இளைஞர்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,’ என பிரியங்கா பதிலளித்தார்.

20 லட்சம் பேருக்கு வேலை
உபி இளைஞர்களுக்காக பிரியங்காவும், ராகுலும் நேற்று வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* இளைஞர்களின் பலத்தில் புதிய உபி.யை உருவாக்குவோம்.
* அரசு, பொது துறைகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அதில், 8 லட்சம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
* மாநில வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
* தேர்தலில் 40 சதவீத டிக்கெட்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
* உபி.யில் 2017ல் நடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து 105 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 7 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 47 இடங்களில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தேர்தலில் போட்டியிட 12 விவசாயிகளுக்கு பாஜ வாய்ப்பு
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை  பாஜ நேற்று வெளியிட்டது. 34 பேர் அடங்கிய இந்த பட்டியலில் 13 பேர் சீக்கியர்கள். இதில், முன்னாள் அமைச்சர் மனோரஞ்சன் காலியா, ராணா குர்மீத்சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்எல்ஏ அரவிந்த் கன்னா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பேசிய  கட்சியின் பொது செயலாளர் தருண் சுக், ‘‘சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 12 பேர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள், 8 பேர் தலித்துகள் ஆவர்’’  என்றார்.

பாஜ பிரசார பாடல்
உத்தர பிரதேச தேர்தல் பிரசாரத்தில் தற்போது, ஒவ்வொரு கட்சியும் பாடல்களை வெளியிட்டு கலக்கி வருகின்றன. அந்த வகையில் தனது ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக, ‘மீண்டும் பாஜ ஆட்சி தேவை’ என்ற தலைப்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பாடலை வெளியிட்டார்.

பாஜ.வில் இணைந்த அபர்ணா முலாயமிடம் ஆசி பெற்றார்
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ், கடந்த புதனன்று பாஜவில் இணைந்தார். இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜ,வில் சேருவதை தடுக்கவும், சமாதானம் செய்யவும் முலாயம் சிங் முயற்சி செய்தும் முடியவில்லை. அபர்ணாவுக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்கனவே வாழ்த்து  தெரிவித்து விட்டார். இந்நிலையில், டெல்லியில் இருந்து லக்னோ திரும்பிய அபர்ணா, நேராக தனது மாமனார் முலாயம் சிங்கின் வீட்டுக்கு சென்று, அவருடைய காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த  புகைப்படத்தை அவர் தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்