தலைநகர் மாற்றம்
2022-01-21@ 00:05:30

உலகநாடுகள் தங்கள் நிர்வாக வசதிக்காக தலைநகரங்களை மாற்றுவது வழக்கமானது. ஆனால் காலநிலை மாற்றத்தாலும், இயற்கை பேரிடர் அச்சத்தாலும் ஒரு நாடு தனது தலைநகரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்று
வது கவனிக்க வேண்டிய அம்சமாக இருக்கிறது. அந்த பட்டியலில் தற்போது இந்தோனேசியா இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகம் முழுவதும் சுனாமி பேரழிவு ஏற்பட காரணம் என்பதை மறந்துவிட முடியாது. தீவுகள் அதிகம் கொண்ட நாடுகள் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாவதை தவிர்க்கவே முடியாது. தற்போது டோங்கா தீவில் சுனாமி பாதிக்கப்பட்டு பல தீவுகள் கடும் சேதமடைந்துள்ளதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.
அந்தவகையில், இந்தோனேசியா பாதுகாப்பை கருதி தற்போதைய தலைநகரான ஜகார்தாவில் இருந்து நுசந்தரா என்ற நகரத்தை புதிய தலைநகராக தேர்வு செய்துள்ளது. ஜகார்தா நகரம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கி வருவதால் இம்முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
இந்தோனேசியாவில் 17,508 தீவுகள் உள்ளன. மொத்தம் 34 மாகாணங்களில் 23.8 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 4வது இடத்திலும், அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் முதலிடத்திலும் உள்ளது.
குடியரசு நாடான இந்தோனேசியாவின் தற்போதைய தலைநகரம் சாவகம் தீவில் உள்ள ஜகார்தா ஆகும். உலக அளவில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால் ஆண்டுக்கு 25 செ.மீ அளவுக்கு இந்த நகரம் கடலில் மூழ்கி வருகிறதாம். மேலும் மக்கள் தொகை, மாசு ஆகியவற்றால் திணறி வருகிறதாம். இதனால் கிழக்கு களிமந்தான் மாகாணத்தில் ஜகார்தாவை விட 4 மடங்கு பெரிய நகரமான நுசந்தராவை புதிய தலைநகராக அறிவிக்க அந்நாடு தேர்வு செய்துள்ளது. 2019ம் ஆண்டே அந்நாட்டு அதிபர் ஜோகோ இம்முடிவை எடுத்திருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக தலைநகரை மாற்றும் முயற்சிகள் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இதனால் 2024ம் ஆண்டுக்கு பிறகு நுசந்தரா முழுமையான தலைநகரமாக மாறும் என்று தெரிகிறது.
இந்நகரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்குவது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட இருக்கிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் ஜகார்தாவில் இருந்து நுசந்தராவை தலைநகராக தேர்வு செய்யப்பட்டதற்கும் பருவநிலை நிபுணர்கள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த நகரமும் தீவுக்கூட்டங்களின் மத்தியில் அமைந்துள்ளதால் எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் உயரும்போது மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். தலைநகரை மாற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா முதல் நாடு அல்ல. ஏற்கனவே பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரத்துக்கு தங்கள் தலைநகரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்