SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுகாப்பில் உறுதி

2022-01-17@ 00:19:26

கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல் இரவு நேர முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. நேற்று 2வது வாரமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிய நிலையில், பொதுமக்கள் கொரோனாவின் தீவிரம் உணர்ந்து செயல்பட்டனர். பொதுமக்களின் வாழ்வாதாரம் முடங்காத நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்று வந்த நிலையில், அவர்களுக்கும் வகுப்புகள் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் கடந்த சில தினங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவத் தொடங்கிய காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற புதிய அரசு எவ்வளவு விரைவாக செயல்பட்டு நோய் பரவலை வேகமாக குறைத்ததோ, அதே அளவுக்கு தற்போதும் அரசு இயந்திரம் முழுமையாக களமிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி நேற்றோடு, ஓராண்டு நிறைவடைகிறது. இதில் தமிழகத்தில் மட்டுமே 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டனர் என்பது நமக்கெல்லாம் பெருமையாகும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து தடுப்பூசி பணிகளை விரைவுப்படுத்தியதோடு, தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாரம்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி போடாத நபர்களை தேடி கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது 3ல் ஒருவர் தடுப்பூசி செலுத்தியவராக உள்ளார்.

தமிழகத்தில் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்திலும், 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்கள் பட்டியலில் நீலகிரி மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது. சிறார்களுக்கான தடுப்பூசி, முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் ஆகியவற்றிலும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் 3வது அலையில் நோய் பரவலின் வேகம் அதிகரித்திருந்தாலும் பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த மாதத்தில் கொரோனா 3வது அலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் பொதுமக்களும் அரசோடு கைகோர்த்து செயல்படுவது அவசியமாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்