SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிறும் எதிர்பார்ப்பு

2022-01-16@ 00:15:39

நா டாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி துவங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31ம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  2022-2023ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்த பிறகு தாக்கல் செய்யப்படும் நான்காவது பட்ஜெட் இதுவாகும்.  இந்த பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள்,  சுகாதாரத்துறை மற்றும் விவசாய மேம்பாட்டுக்கு கூடுதல் நிதியுதவி உள்ளிட்டவைகள் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்பதும், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்து விடாமல் புதிய திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் தர வேண்டும் என்பதும் அனைவரின் விருப்பமாக உள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் அதிகரித்து ஊரடங்கு நீடித்தால் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.

அதனால் இந்த பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வருமா என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டம், அதை சுக்கு நூறாக உடைத்தெறிந்தது. இந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு பிறகு ஒன்றிய அரசு பின்வாங்கியது. இது விவசாயிகளை தன் பக்கம் கொண்டு வருவதற்கான ஒன்றிய அரசின் திட்டமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த பட்ஜெட்டிலும் விவசாயிகளை கவர வேளாண்மை துறைக்கு ஒன்றிய அரசு புதிய திட்டங்களை அறிவிக்கலாம் என தெரிகிறது. விரைவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. எனவே இந்த பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் ஓட்டு வங்கியை பெறவும் ஒன்றிய அரசு முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 ஆக, இந்த பட்ஜெட்டில் ஒன்றிய அரசு, எந்த வகையான திட்டங்களை அறிவிக்கப்போகிறது, எந்த வகையான விமர்சனங்களை எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு மிக குறுகிய  நாட்களே உள்ள நிலையில், தனியார் துறை வல்லுனர்களிடம் ஒன்றிய அரசின்  நிதித்துறை நிபுணர்கள் ஆலோசனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒன்றிய  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த டிசம்பர் 15ம் தேதி முதலே, பட்ஜெட்  தொடர்பாக பொருளாதார வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்