SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரு நாய்களை சுடும்போது குண்டு பாய்ந்து பெண் மரணம் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2022-01-14@ 17:44:24

சென்னை: பெரம்பலூர் மாவட்டம் எறையூரை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2016ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எறையூர் பஞ்சாயத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை சுட்டுத்தள்ளுவதற்காக பஞ்சாயத்து தலைவர் குளஞ்சி, துணை தலைவர் சின்னதுரை, கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் சேர்ந்து விஜயகுமார் என்ற நரிக்குறவரை நியமித்தனர். அவர் அந்த நாய்களை குறிவைக்காமல் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டிருந்த போது, வீட்டு வேலை செய்து கொண்டிருந்த எனது தாய் விஜயாவின் காலில் குண்டு பாய்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய மூன்று நாட்களில் எனது தாய் இறந்துவிட்டார்.

 மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது குண்டு பாய்ந்ததை பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 3 பேரும் தெரிவிக்காமல் வெறும் காயத்திற்கு மட்டும்  சிகிச்சை கொடுக்க சொல்லியுள்ளனர். பிரேத பரிசோதனையின்போதே காலில் இருந்த நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட குண்டு எடுக்கப்பட்டது.  அந்த குண்டு சிறிதளவு நச்சுத்தன்மை உடையது. இந்த நச்சுத்தன்மைதான் எனது தாயின் மரணத்திற்கு காரணம். இதுகுறித்து மூவருக்கும் எதிராக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பின்னர் வழக்கு பதிவு செய்த நிலையில் இழப்பீடு வழங்குவதாக கூறினர். ஆனால், இழப்பீடு தராமல் ஏமாற்றி விட்டனர்.

எனவே, நாய் பிடிக்கும்போது அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘விஜயா உயிரிழந்ததற்கு நாய்களை சட்டவிரோதமாக சுட்டுப்பிடித்ததே காரணம் என்பதற்கான முகாந்திரம் உள்ளது. தெருவில் திரியும் நாய்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டதே சட்ட விரோதம்தான்.

 எனவே, விஜயா மரணத்திற்கு காரணமான மூவரும் சேர்ந்து விஜயாவின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவில்லை என்பதால் தமிழக அரசும் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மொத்த இழப்பீடான 10 லட்ச ரூபாயை விஜயாவின் வாரிசுகளுக்கு எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்