கலாச்சார சீரழிவு
2022-01-12@ 00:01:16

இப்படியும் இருக்குமா என்று கேள்வி கேட்டால் அப்படித்தான். ஜஸ்ட் லைக் தட் போல் கிளம்பியிருக்கிறார்கள். 1000 தம்பதிகள் என்றார்கள். அப்போதே மனது பதற்றமானது. இப்போது சுமார் 6 ஆயிரம் தம்பதிகள் வரை இந்த தளத்தில் இருக்கக்கூடும் என்கிறார்கள் காவல்துறையினர். அதான் கேரளாவில் நடந்த தம்பதிகள் மாற்றி பாலியல் உறவு வைக்கும் கலாச்சாரம்தான் இப்போது பற்றி எரியும் பிரச்னையாக மாறி இருக்கிறது. மிக எளிதாக மனைவியை கணவனும், கணவனை மனைவியும் மாற்றி விட்டு வேறு ஒருவருடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. எல்லாவற்றையும் விட இந்த கலாச்சார சீரழிவில் பணம் முக்கியமாக இருந்திருக்கிறது.
சமூகத்தின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை அத்தனை பேரும் இந்த நாசக்கார விளையாட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நவீன செயலிகள் இவர்களுக்கு உதவி இருக்கிறது. ஜோடி மாற்ற விரும்பும் நபர்கள் ஷேர்சாட், டெலிகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளில் தொடர்பு கொண்டு பின்னர் வாட்ஸ்ஆப், டெலிகிராமில் தனி குழுவை உருவாக்கி தொடர்ந்து பழகி வருகிறார்கள். அதன்பின் நேரில் சந்தித்து அவரவர் மனைவிகளையும், கணவன்களையும் பறிமாறிக்கொள்கிறார்கள். இது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. சில சமயம் ஒரே பெண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் உறவு வைத்துள்ளனர். இந்த இடத்தில் மனைவியை பகிர்ந்தவர் வைத்ததுதான் கட்டணம் என்ற அளவில் இருந்துள்ளது.
தம்பதிகள் தான் இதில் கலந்து கொள்ள இயலும் என்ற நிபந்தனை பல இடங்களில் தளர்த்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இளைஞர்களுக்கு கூட இங்கு வந்து செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்திருக்கிறது. தனிநபர் வீடுகள் மட்டுமல்லாமல் சுற்றுலா மையங்கள், ரிசாட்டுகள் உள்ளிட்ட பல இடங்களிலும் இவர்களது சந்திப்புகள் தொடர்ந்து வந்துள்ளன. ஒருபுகாரில் இத்தனை விஷயங்கள் வெளியே வந்துள்ளன. இன்னும் விசாரிக்க பூதம் கிளம்பலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சார மரபு மீறப்பட்டுள்ளது என்பதை விட மக்கள் மனம் எப்படி, இந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டிய அவசியம். பக்கத்து மாநிலம் தான்என்றாலும் கலாச்சார சீரழிவின் கொடூரங்கள் என்பதால் தமிழகத்தில் அதிக அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கு தொலைந்தது குடும்ப கலாச்சாரம் என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.
இப்படி பகிர்வது அதிகரித்தால் குடும்பங்கள் என்ற கூடு எப்படி நிலைத்திருக்கும்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எதற்கெடுத்தாலும் எளிதில் விவாகரத்து பெறும் காலம் இது. அதிகரிக்கும் விவாகரத்தால் நீதிமன்றங்களில் மலைபோல் வழக்குகள் குவிந்து வருகின்றன. திருமணம் முடிந்த உடனேயே விவாகரத்து கேட்டு படியேறும் காலமாக மாறிவிட்டது. மன ஒற்றுமை, பொருத்தம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இணையதள தவறுகள் வந்து ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் ஆக்கிரமித்து கொண்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தம்பதிகளை மாற்றும் கேடுகள் நடப்பது கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. தனிமனித ஒழுக்கம் வீட்டில் இருந்தே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கலாச்சார சீரழிவுகள் தடுக்கப்படும்.
மேலும் செய்திகள்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!