அலட்சியம் வேண்டாம்
2022-01-10@ 00:55:45

தமிழகத்தில் 3வது அலையாக பரவ ஆரம்பித்துள்ள கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவித்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா குறித்த அச்சத்தை மக்கள் மறந்து விட்டதாகவே தெரிகிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடினர். மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பலர் மறந்தே விட்டனர். கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு முழுவதும் போகவில்லை. தற்போது 3வது அலையாக வந்து உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு முதலில் நினைவுபடுத்துவதற்காக தமிழக அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது நல்ல முடிவாகவே தெரிகிறது. இதனால் கொத்துக்கொத்தாக பரவும் கொரோனா பரவலை தவிர்த்திட முடியும். பெருநகரங்களில் ஞாயிறு அன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஞாயிறு ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தியதும் மக்கள்தொகை நெருக்கமுள்ள நகரங்களில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் நல்ல பலனளிக்கும்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவும் பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்வதை குறைத்துக் கொள்வதன் மூலமும் மேலும் தொற்றுப் பரவாமல் தடுக்க முடியும். மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தில் கொரோனா குறைவாக இருப்பதாக நினைத்து மக்கள் வெளியே வரக்கூடாது. தமிழகத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, நாள்தோறும் பதிவான கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்னும் தீவிரமாக கட்டுப்பாட்டை பின்பற்றினால், கொரோனா பரவல் குறையும் நிலையை அடையலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறையவே உள்ளது என்றும் கொரோனா பரவல் மீண்டும் கட்டுப்பாடற்ற நிலையை அடைந்தால் அது முழு ஊரடங்கை நோக்கியே செல்லும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அடுத்த சில நாட்கள் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. வீட்டின் அருகிலேயே கிடைக்கும் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். கூட்டம் அதிகமுள்ள மார்க்கெட் போன்ற இடங்களை தேடிச் செல்வதை தவிர்க்கலாம். கொரோனா வைரஸ் ஏதாவதொரு வடிவத்தில் எப்போதும் உலகில் தொடர்ந்து இருக்கும் என்று பிரிட்டன் அரசின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள். தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டாமல் உடனே செலுத்திக் ெகாள்வதும், வழிகாட்டு நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதுமே 3வது அலையின் வேகத்தை தடுக்க உதவும்.
மேலும் செய்திகள்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!