SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வித்தியாசமாக கட்சியை கொண்டுபோகணும் என்று உத்தரவு வந்ததால் மண்டையை பிய்த்துக்கொள்ளும் தொண்டர்களின் நிலையை சொல்கிறார்: wiki யானந்தா

2022-01-08@ 00:28:25

‘‘வியாபாரிகளை மிரட்டி அடாவடி வசூல் செய்கிறார்களாமே மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘கடலோர மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் நகராட்சி எல்லையில் உள்ள தரைக்கடைகளில் வசூல் செய்ய டெண்டர் விடப்பட்டு இருந்ததாம். இந்த டெண்டரை மாஜி அமைச்சர் மணியானவர் விசுவாசிகள், ஆதரவாளர்கள் தான் எடுத்து இருந்தார்களாம். கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த டெண்டர் முடிய நாள் நெருங்கிக் கொண்டு இருப்பதால் அதற்குள் சம்பாதித்து விட வேண்டும் என்பதற்காக வியாபாரிகளை மிரட்டி அடாவடி வசூல் செய்கிறார்களாம். இதில் நாள் ஒன்றுக்கு ரூ.50க்கு பதிலாக, ரூ.100 முதல் ரூ.200 வரை வசூல் செய்கின்றார்களாம். வசூல் செய்யும் தொகைக்கும் உரிய ரசீது வியாபாரிகளிடம் கொடுப்பது கிடையாதாம். இதுகுறித்து கேட்டால் வியாபாரிகளை மிரட்டுகின்றார்களாம். இந்த விவகாரம் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் முறையிட்டுள்ளனர். இந்த அடாவடி வசூல் தொடர்பாக டெண்டர் எடுத்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள், ஆட்சி தான் மாறியுள்ளது.. டெண்டர் தொனியில் பதிலளிக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘மாற்றுத்திறனாளி ஊழியரை அவதூறாக  பேசிவிட்டு குட்டு வெளிப்பட்டதால் காலில் விழாத குறையாக மன்னிப்பு  கேட்டாராமே அறநிலையத் துறை உயர் அதிகாரி’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘ஆமா... திருச்செந்தூர்  கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊதிய நிலுவைத்  தொகை இதுவரை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். தமிழகத்தில் புதிய அரசு  அமைந்ததும் அந்தத் தலைமை ஆசிரியர் துறையின் ஆணையரை அணுகினாராம். ஆணையரும்  அந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்க, கோயில் அதிகாரி  கிஞ்சித்தும் இறங்கவில்லையாம். அந்த நிலுவைத் தொகைக்கு பரிந்துரை செய்ய பல  லகரங்கள் தனக்கு லஞ்சம் கேட்டதுடன் மாற்றுத் திறனாளி என்றும் பாராமல்  அவதூறாக பேசினாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தத் தலைமை ஆசிரியர்  நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரியிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தாராம்.  குட்டு வெளிப்பட்டதை அறிந்த அந்த கோயில் அதிகாரி தலைமை ஆசிரியரை அவரது  இருப்பிடத்திற்கே நேரடியாக தேடிச்சென்று காலில் விழாத குறையாக மன்னிப்பு  கேட்டாராம். இந்த ஆடியோ தற்போது வெளியாகி அந்த அதிகாரியின் செயலை சந்தி  சிரிக்க வைத்துள்ளது.  இருப்பினும் லஞ்சம் கேட்ட அவர் மீது நடவடிக்கை  எடுக்கும் வரை விடமாட்டேன் என்று அந்த ஊழியர் மனக்குமுறலில் உள்ளாராம்.  ஊழலை ஒழிக்க அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்து வரும் போது, இதுபோன்ற ஊழல்  பெருச்சாளிகளை அந்தக் குமரன் தான் தண்டிக்கணும் என்கின்றனர் சக  அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘ஐடியாக்களை தட்டிவிடுவதில் அடிப்பொடிகளின் டீம் ஜரூரா இருக்காமே..’’
 ‘‘மாம்பழ  கட்சி இனிவரும் தேர்தல்களில் தனிச்சுதான் போட்டியிடும் என்று நிறுவனர்  அறிவிச்சிருக்காரு. அதோட கட்சிக்காரங்க எல்லோரும் இதற்கு தயாராக இருக்கணும்  என்று ரகசிய உத்தரவு வேறு பறந்திருக்காம். இதில் முதல் வேலையா, மத்த  கட்சிக்காரர்களிடம் இருந்து நாம் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்று கறாராக  சொல்லி இருக்காங்களாம். இதனால் எப்படி வித்தியாசப்பட்டு நிக்கலாம் என்று  மாம்பழ தொண்டர்கள், மண்டையை பிய்ச்சுக்கிட்டு இருக்காங்களாம். இதில்  எம்எல்ஏக்கள், பல்வேறு கோணங்களில் யோசிச்சு, யோசிச்சு திணறிக்கிட்டு  இருக்காங்களாம். இந்த வகையில் மாங்கனி மாவட்டத்தில் இருக்கும் எம்எல்ஏ  ஒருத்தரு, தொகுதி மக்களை சந்திக்க நடமாடும் ஆபீஸ் வாகனம் ஒன்றை ஏற்பாடு  செஞ்சிருக்காராம். அதில் கம்ப்யூட்டர், பிரின்டர்ன்னு எல்லா வசதியும்  இருக்காம். அந்த வாகனத்தில் உதவியாளர் என்று ஒருத்தரையும் உக்கார  வச்சிருக்காராம். மனுக்களை வாங்கி அதிகாரிகளுக்கு அனுப்புவதுதான்  வாகனத்தில் இருப்பவரின் வேலையாம். இந்த ஐடியா ஓரளவுதான் கை கொடுக்குதாம்.  இதைவிட பெட்டரா என்ன செய்யலாம்? என்று அடிப்பொடிகளை துளைத்து எடுக்கிறாராம்  எம்எல்ஏ. இதனால் அடிப்பொடிகள் டீமும் தினசரி ஒரு ஐடியாவை  தட்டிவிட்டுக்கிட்டு இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விஷயம் இருக்கு..’’
 ‘‘கூட்டுறவு  சங்கங்களின் பதவி காலம் 3 ஆண்டுகளுடன் முடிவடையும் வகையில் கொண்டு  வரப்பட்ட சட்ட திருத்த அறிவிப்பு வெளியானதும், குமரி மாவட்ட அதிமுக  நிர்வாகிகள் பலர் மகிழ்ச்சி கடலில் மூழ்கி விட்டனராம். ஒவ்வொருவரும் மாறிமாறி போன் செய்து முதலமைச்சர் கலக்கி விட்டார் என்று பேசியதுடன் அல்லாமல்,  நாகர்கோவிலில் ஒரு சில நிர்வாகிகள் உடனடியாக லட்டு வாங்கி வர கூறி  வினியோகம் செய்துள்ளார்களாம். எல்லாம் கடந்த 8 ஆண்டுகளாக கூட்டுறவு  துறையில் பதவியில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் போட்ட ஆட்டம் தான்  முக்கிய காரணமாம். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான வாகனத்தில் டீ கடைக்கும்,  தோட்டத்துக்கும் போய் வந்தவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள் என்று நக்கலாக  பேச தொடங்கி உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்