SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்சி ஆபீசை கட்சிக்காரர்களே இடித்து தரைமட்டமாக்கிய கதையை கூறுகிறார் wiki யானந்தா

2022-01-07@ 01:02:16

‘‘கட்சி ஆபீசை கட்சிக்காரர்களே இடித்ததாக பேசிக்கொள்கிறார்களே... என்ன விஷயம்..’’ என ஆர்வத்தோடு கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
 ‘‘சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அப்பகுதி அதிமுகவினர் கடந்த 50 வருடங்களாக அண்ணா மறுமலர்ச்சி மன்றம் என்ற பெயரில் மன்றத்தை நடத்தி வருகின்றனர். அந்த இடத்தில் கட்சிப் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை என  பல பணிகளை செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்திற்கு பின் பகுதியில் உள்ள அரிசி வியாபாரி அதிமுக மன்றம் உள்ள முன்பகுதி இடத்தை தனக்கு தந்துவிட்டு நீங்கள் பின் பகுதியில் உள்ள இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அதிமுகவை சேர்ந்த 4 பேர் யாருக்கும் தெரியாமல் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து சில லட்சங்களை பெற்றுக் கொண்டு அந்த இடத்தின் முன்பகுதியை இரவோடு இரவாக இடித்து விட்டு பின் பகுதியில் அரிசி வியாபாரியின் இடத்தில் மன்றத்தை மாற்றியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக வெளியூர் சென்று இருந்த அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் வந்து பார்த்தபோது மன்றம் இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு விசாரித்துப் பார்த்ததில் அதே பகுதியில் மாவட்ட செயலாளருக்கு எதிராக செயல்படும் ஒரு கோஷ்டியினர் மன்றத்தை 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசி முன்பணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியது தெரிந்தது. அந்த ஏரியாவின் பகுதி செயலாளர் இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளாராம். மன்றத்தை இரவோடு இரவாக இடித்த அதிமுகவினர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பகுதி செயலாளர் புகார் மனு அளித்துள்ளாராம். எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்சித் தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். வழக்கம்போல அதிமுக தலைமை இந்த விஷயத்திலும் மவுனம் காத்து வருவதாக அப்பகுதி அதிமுகவினர் முணுமுணுத்து வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வீரமான முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  
‘‘தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் பல்வேறு மாவட்டங்களில் நடந்து  முடிந்துள்ளது. ஆனால் இன்னும் முறையான அறிவிப்பு தலைமை அறிவிக்கவில்லை.  வெயிலூர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  மாவட்டம், மாநகரம் என்று இரு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தேர்தல்  நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும்  நபர்களுக்கு தான் வட்ட செயலாளர், கிளை, பேரூர் செயலாளர்கள் போஸ்டிங் கிடைக்கும்  என்று நேரடியாகவே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த  காலங்களில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் என்று  அடையாளங்களுடன் செயல்பட்டவர்கள் எல்லாம் தற்போது கட்சியிலும், பதவியிலும்  ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். முன்பு ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கே முன்னாள்  அமைச்சர் கே.சி.வீரமணி கைகாட்டும் நபர்களுக்கு தான் பதவி வழங்கப்பட்டு  வந்தது. தற்போது எனது மாவட்டத்திற்கு நான் தான் ராஜா என்று கூறி மாவட்ட  செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மூத்த நிர்வாகிகள்  முன்னாள் அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவரோடு, நான் எல்லாம்  பஞ்சாயத்து பண்ண முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் பேரூராட்சி தலைவர் உட்பட பல நிர்வாகிகள் கூண்டோடு கட்சி மாறினர். மேலும் சிலர் கட்சி மாற தயாராகி  வருகின்றனர். இனி அதிமுக கட்சியில் இருந்தால் பயன் இல்லை. மாவட்ட செயலாளர்  தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே உடன் வைத்துக்கொண்டு இருக்கிறாராம். கட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே பதவிகளை வாங்கிக்கொள்ள வேண்டும், பெரிய  ஆளாக வர வேண்டும் என எண்ணுகின்றனர். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள்  எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர். அவர்களை கட்சி தலைமை  கண்டுகொள்ளுவது இல்லை என்று புலம்புகின்றனர் கட்சியினர்’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘போலீஸ்காரர் பாக்கெட்டுக்குள் கையை விட்டாராமே தாமரை தொண்டர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘தாமரை  கட்சிக்காரங்க செய்யும் அலம்பல்கள் அவ்வப்போது பெரும் சர்ச்சைகளை உருவாக்கி  விடுவது வழக்கமான ஒன்றுதான். இந்தவகையில் மாங்கனி மாவட்டத்தில் நடந்த  சம்பவம் பப்ளிக்கை சிரிப்பாய் சிரிக்க வச்சதாம். இந்த மாவட்டத்தில் உள்ள  நீர் கண்ட புரத்தில் தாமரை கட்சிக்காரங்க திடீர்ன்னு ஒரு கான்கிரீட் பீடம்  போட்டு, அவங்க கட்சி கொடியை நடுவதற்கு ஏற்பாடு செஞ்சிட்டாங்க. ஆனால்  பேரூராட்சிகாரங்க, இதற்கு அனுமதியில்லைன்னு சொல்லி தடுத்து  நிறுத்திட்டாங்க. நாங்க 2013லேயே இங்க, கம்பம் வச்சிருந்தோம் என்று சொன்னவர்களிடம், ஆதாரம் கேட்டதுக்கு அந்தர்பல்டி அடிச்சு ஆர்ப்பாட்டம்  நடத்தப்போறதா 50 பேர் திரண்டுட்டாங்க. அதில் ஒரு தொண்டர், பாதுகாப்பு  பணியில் இருந்த போலீஸ்காரரின் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு, பர்சை  எடுத்திட்டாரு. பதறிப்போன போலீஸ்காரரு, அவரோட கைய தட்டிவிட்டுட்டாரு.  இப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பிக்கிட்டு  இருக்கு. இது ஒருபுறமிருக்க, இதற்கு முக்கிய நிர்வாகி அளித்த விளக்கமும் புதிய சர்ச்சையாக வெடிச்சிருக்காம். மத்த கட்சிக்காரங்களை விட, எங்க  தொண்டர்களுக்கு எப்பவுமே கொலைமிரட்டல் அதிகமாக இருக்கு. அந்த வகையில்  சந்தேகத்திற்கிடமான போலீஸ்காரரின் பாக்கெட்டுக்குள், ஆயுதம் இருக்கான்னு  எங்க தொண்டரு சோதனை செஞ்சாருன்னு விளக்கம் கொடுத்தாரு பாருங்க.  அப்படிபோடு.. நல்ல நிர்வாகி, சூப்பர் தொண்டரு என்று கைகொட்டி சிரிக்குதாம்  பப்ளிக்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்