வளர்ச்சியா... வீழ்ச்சியா...
2022-01-04@ 00:01:50

நாடு வளர்ச்சியை நோக்கி பயணித்து வருவதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. முக்கியமாக, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகவும், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் நிலைமை தலைகீழாக இருப்பது தான் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சியில் ஒவ்வொரு மாநிலங்களும் இலக்கை எட்டினால் தான், நாட்டை வல்லரசாக மாற்ற முடியும். எனவே மாநிலங்கள் கேட்கும் நிதியை ஒன்றிய அரசு உடனே அளிக்க வேண்டியது மிக அவசியம். நிதி ஒதுக்குவதிலும், அளிப்பதிலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் திட்டங்களை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவீன ஆயுதங்களை அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தயாரித்து வருகின்றன. அவற்றை பல ஆயிரம் கோடி கொடுத்து இந்தியா வாங்கி வருகிறது. இது வியாபாரம் தான். பிற நாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி வருகிறது. ரஷ்யாவின் ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருந்தாலும், இந்தியாவுக்கான நம்பிக்கையான நட்பு நாடு என்பதால், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு ஆயுதங்களை வாங்கலாம். முக்கியமாக ஆயுதங்கள், வேளாண்துறை, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான பொருட்களை பிறநாடுகளில் இருந்து வாங்குவதை படிப்படியாக குறைக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து பல்வேறு பொருட்கள் பிறநாடு ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்போது தான் சர்வதேச அரங்கில் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். மக்கள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும். வெளிநாட்டு பொருட்களை புறக்கணியுங்கள் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. அதற்கான சூழலை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நாடு அதீத வளர்ச்சி அடைய வேண்டும். நாட்டில் வறுமை ஒழிய வேண்டும். அப்போது தான் வல்லரசு என்ற இலக்கை அடைய முடியும். புதிய திட்டங்களை உருவாக்கி வறுமையை ஒழிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்க வேண்டும். வறுமை ஒழியும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்வாதாரத்தில் முன்னேறி விடுவார்கள்.
‘‘2020ம் ஆண்டில் வளர்ந்த வல்லரசு நாடாக இந்தியா திகழ வேண்டும்...’’ இதுதான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் தீராக்கனவு. அவர் கண்ட கனவு பலித்ததா?, நாடு வளர்ச்சியில் தன்னிறைவு அடைந்துள்ளதா?, வல்லரசு என்ற இலக்கை அடைய இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கு உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்து அச்சம் கொள்ள வைக்கிறது. இனி வரும் காலங்களிலாவது அனைத்து துறைகளிலும் 100 சதவீதம் இலக்கை அடையும் வகையில் புதிய திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!