SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூரில் இருந்து ரூ.1 கோடி கேட்டு குவாரி அதிபரை லாரியில் கடத்தி சரமாரி வெட்டி படுகொலை: சேலம் அருகே சடலம் மீட்பு

2021-12-09@ 00:47:59

க.பரமத்தி: ரூ.1 கோடி கேட்டு டிப்பர் லாரியில் கடத்திச்சென்று கரூர் குவாரி அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் அருகே அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மங்களப்பட்டியை சேர்ந்தவர் சாமிநாதன்(65). இவர், கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கூனம்பட்டி கிராமத்தில் கல்குவாரி வைத்துள்ளார். இவரது மனைவி பானுமதி(60). இவர்களுக்கு 3மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில், சாமிநாதன் அடிக்கடி குவாரிக்கு வந்து அங்குள்ள அலுவலகத்தில் தங்குவது வழக்கம். கடந்த 6ம்தேதி இரவு குவாரிக்கு வந்த சாமிநாதன், அலுவலக அறையில் தங்கி இருந்தார்.

நேற்றுமுன்தினம் அதிகாலை அவரது அறையின் கதவு வெளியே தாழிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே சாமிநாதன் இல்லை. குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியையும் காணவில்லை. இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள், சாமிநாதனுக்கு போன் செய்தபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாயமான சாமிநாதனே, உறவினர் செல்லமுத்து என்பவருக்கு போன் செய்து தன்னை 2 பேர் கடத்தி சென்றுள்ளதாகவும், ரூ.1 கோடி எடுத்து வர வேண்டும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டாராம்.

இதுகுறித்து சாமிநாதனின் மனைவி பானுமதி அளித்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர். செல்போன் அழைப்பு வந்ததை ஆய்வு செய்தபோது அது சேலம் மாவட்டத்திலிருந்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், தென்னிலை போலீசாரும் சேலம் விரைந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு இல்லம் அருகில் புறவழிச்சாலையில் ஒரு டிப்பர் லாரி நின்றிருந்தது. அவ்வழியாக சென்ற தலைவாசல் போலீசார் விசாரித்தனர்.

உடனே லாரி அருகே நின்ற 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் முத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன்கள் நவீன்(21), விஜயகுமார்(25) என தெரிந்தது. லாரியில் சோதனையிட்டபோது டிரைவர் சீட்டுக்கு அருகில் தலை மற்றும் உடலில் வெட்டு காயங்களுடன் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து தென்னிலை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நவீன், விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுபற்றி போலீசார் தெரிவித்ததாவது: கைதான விஜயகுமார், நவீன் ஆகியோர் சாமிநாதனின் குவாரியில் டிரைவர்களாக வேலை பார்த்துள்ளனர். அவரிடம் பணப்புழக்கம் அதிகம் இருந்ததால், அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அவரது லாரியிலேயே கடத்தி சென்று, உறவினருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்கும்படி மிரட்டியுள்ளனர். அவரும் போன் செய்து பணம் கேட்டுள்ளார். பின்னர் இருவரும் போனை வாங்கி இணைப்பை துண்டித்து விட்டனர். பின்னர் சாமிநாதனை உயிரோடு விட்டு சென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து, உடலை காட்டுப்பகுதியில் வீசுவதற்காக லாரியில் வைத்திருந்த போது சிக்கினர். இவ்வாறு கூறிய போலீசார், கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதாக என்றும் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்