SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்து வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-12-01@ 00:33:26

‘‘டொனேஷன் வாங்கியதில் லகரங்களை லபக்கிட்டாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக அரசு சார்பா எல்கேஜி முதல் பிளஸ் 2 வரைக்கும் இங்கிலீஷ் மீடியம் நடத்துற  மாடல் ஸ்கூலுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்குது. இதனால அந்த  ஸ்கூல் மேம்பாட்டு பணிக்காக ஒவ்வொரு வருஷமும் லகர கணக்குல நிதி  ஒதுக்குறாங்க. அந்த வரிசையில மாங்கனி மாவட்டத்துல இருக்குற சில ஸ்கூல்களுக்கு சமீபத்துல தலா ரூ.20 லட்சம் ஒதுக்குனாங்க. பள்ளிகள்ல பல வேல  இருந்ததால, சக ஆசிரியர்கள் மற்றும் வெளியில இருந்தும் டொனேசனா நிதி  வாங்கிக்க அனுமதி கொடுத்தாங்க. அப்படி வந்த நிதியில, ஒரு சில ஸ்கூல்ல லட்சக்கணக்குல கையாடலும் நடந்திருக்காம். குறிப்பா, வாங்குன டொனேசன மறைச்சு, கவர்மென்ட் காசுல செஞ்ச மாதிரி கணக்கு காட்டிட்டாங்களாம். அதிலும்  சந்தேகம் வராம இருக்க, கொஞ்சம் மீதி தொகையையும் கவர்மென்டுக்கு திருப்பி அனுப்பிட்டாங்களாம். சமீபத்துல இதுபோன்ற ஒரு முறைகேட்ட கண்டுபிடிச்ச மாவட்ட முதன்மை அதிகாரி, செலவு கணக்க முழுசா தயார் செய்யலன்னா, சஸ்பெண்ட்  செஞ்சிருவேன்னு வார்னிங் கொடுத்துருக்காரு. அதேசமயம், ஒருங்கிணைப்பு  அதிகாரிதான் இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருக்காரு, நம்மள ஏன் சிக்கலில் மாட்டிவிடுறாங்கன்னு வாத்தியாருங்க புலம்புறாங்களாம்’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘ஒற்றைத்தலைமை கோஷம் அதிகரிச்சுட்டு வருது போல...’’
‘‘தொடர்ந்து எம்பி, எம்எல்ஏ பதவிக்கு சீட் கேட்டு தலைமை மறுத்தததால், புரம் என முடியும் கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலைக்கட்சி மாஜி எம்பியானவர் கடும் வருத்தத்தில் இருக்கிறாராம். தனக்கு சீட் கிடைக்காததற்கு இணை தலைமையே காரணமென எண்ணுகிறாராம்... அதை வேறுவிதத்தில் கட்சி பொதுக்கூட்டம், பொதுக்குழு கூட்டத்தில் காட்டி வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். தாமரைக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் கட்சி படுதோல்வி அடைந்தது; இட ஒதுக்கீடு பிரச்னையால்தான் தென்மாவட்டங்களில் கட்சிக்கு கடும் வீழ்ச்சி; கட்சி வளர்ச்சியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என தொடர்ந்து பேசி வந்தார். உச்சக்கட்டமாக, சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சி ஆட்சியை பிடித்திருந்தால், நான்தான் அடுத்த எம்ஜிஆர் என இணை தலைமைக்காரர் பேசியிருப்பார் என கூறியது கட்சியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், தனக்கு தர்மயுத்த நாயகர் மட்டுமே ஆதரவாக இருந்து வருவதால், அவரை தூக்கி வைத்து பேசி வருகிறார். கட்சியில் ஒற்றைத்தலைமை கோஷத்தையும் இதற்காகவே முன்னிறுத்தி பேசி வருகிறாராம்... ஏற்கனவே, புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரான மணியானவரால் இலைக்கட்சிக்கு தர்மசங்கட சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாஜி எம்பியானவரின் சர்ச்சை கருத்தும் கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்களிடம் வசூல் வேட்டை நடத்துகிறாராமே கல்வி அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல அணையான வட்டத்தில் கவர்மென்ட் தொடக்க, நடுநிலை பள்ளிகள் இயங்கி வருது. இந்த பள்ளிகளுக்கு 3 வட்டார கல்வி அலுவலருங்க இருக்குறாங்க. அவங்கள்ல 3வதாக ஏழுமலையான் பெயரை கொண்டவரு இருக்காரு. இவரோட கட்டுப்பாட்டுல மலைகிராம அரசு பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகள் இருக்குது. மலைகிராமங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு ஆசிரியருங்க சரிவர வர்றதே இல்லையாம். இதனால அந்த பள்ளிகள்ல படித்த முன்னாள் மாணவர்களை வெச்சே, மாணவர்களுக்கு பாடம் எடுத்து, ஆசிரியருங்க பள்ளிக்கு வந்தது போல கணக்கு காட்டுறாங்களாம். மலைகிராமங்கள்ல  இருக்குற கவர்மென்ட் தொடக்க பள்ளிகள்ல பெண் ஆசிரியைகளே அதிகமாக பணியாற்றி  வர்றாங்களாம். கொரோனா விடுமுறைக்கு பின்னாடி, பள்ளிகள் திறந்தும் பல ஆசிரியைகள் பள்ளிக்கு வர்றதில்லையாம்.
 இதுதொடர்பா மலைகிராம மக்கள் 3வது அதிகாரிகிட்ட புகார் தெரிவிச்சிருக்காங்க. ஆனாலும், பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யாம சம்மந்தப்பட்ட ஆசிரியருங்க கிட்ட கடும், நடவடிக்கை எடுக்குற மாதிரி அதிகார தோரணைய காட்டி பணம், பொருட்கள்னு வசூல் செய்றாராம். இதை விரும்பாத சில ஆசிரியருங்க, மாவட்ட கல்வி அதிகாரிகிட்ட புகார் தெரிவிக்க முயற்சி செஞ்சிருக்காங்க. தகவல் தெரிஞ்சு சுதாரிச்சுகிட்ட அந்த 3வது அதிகாரி, அவர் கட்டுப்பாட்டுல இருக்குற பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள்ல  ஆசிரியருங்க வர்லன்னு புகார் கொடுத்து தப்பிச்சி வர்றாராம். இவர் கட்டுப்பாட்டில் உண்டு, உறைவிட பள்ளிகள் அதிமாக இருப்பதால, சமையல் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி அதிலும் நல்ல காசு பார்க்குறாராம். மலைகிராமத்துல பள்ளி இருந்தாலும் கல்வி கற்க முடியாது போல இருக்குதேன்னு விரக்தி குரல் கேட்கத்தொடங்கியிருக்குது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயில் அதிகாரியின் லவ்பேர்ட்ஸ் கதை தான் என்ன..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி சென்ட்ரல் ஜெயில்ல லவ் பேர்ட்ஸ் மீது அதிக காதல் கொண்ட அதிகாரி ஒருவர் இருக்காராம். அமைதியான சுபாவம் கொண்ட அவர், லவ் பாடல்களை அதிகமா விரும்பிக் கேட்பாராம். அதோட லவ் பேர்ட்ஸ் வளர்க்க நீண்ட நாளா ஆசையில இருந்தாராம். அப்படியே வளர்க்க வேண்டுமானாலும் கூண்டுவேணுமே.. என்ன செய்யலாம் என்ற திங்கிங்கில் இருந்தபோதுதான் ஜெயில் கைதிகளின் ஞாபகம் வந்திருச்சாம். மாங்கனி பிரிசன்ல கைதிகள் இரும்பு கட்டில், தண்ணீர் வாளி போன்றவை தயாரிச்சுட்டு  வாராங்க. உடனே தொழிற்சாலைக்கு விரைஞ்சு போன அவர், உடனடியாக லவ்பேர்ட்ஸ் வளர்க்க கூண்டு ரெடி பண்ணுங்கன்னு சொல்லியிருக்கார். இந்த ஜெயிலுக்கு நியமிச்ச எஸ்.பி. வரமறுத்துட்டதால, இவரே பொறுப்பு அதிகாரி என்பதால கைதிகளும் அவர்களின் எண்ணத்தில் அழகான கூண்டு ஒன்றை ரெடி பண்ணி கொடுத்துட்டாங்க. பின்ன என்ன... வார்டன்கள் எல்லோரும் கண் அசந்த நேரத்துல கூண்டு பறந்துபோய் அவரது வீட்டுல விழுந்துச்சாம். கைதிகள் செஞ்ச கூண்டுல இப்போ லவ் பேர்ட்ஸ் கொஞ்சுதாம். அய்யாவும் லவ் பேர்ட்ஸ்சோடு காதல் பாடல்களை ரசிச்சு கேட்டுக்கிட்டிருக்காராம். இந்த லவ் பேர்ட்ஸ் கூண்டுதான் இப்போதைக்கு வார்டன்கள் மத்தியில ஒரே பேச்சா இருக்காம்.....’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

 • Republic Day Chennai

  சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

 • tamil-mozhi-25

  தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்