SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் எங்களுக்கு சீட்டு கொடுத்துராதீங்கன்னு அதிமுக நிர்வாகிகள் சண்டை போட்ட விசித்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-11-30@ 00:08:48

‘‘வாக்கி டாக்கி கோரிக்கை வந்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ காவல் துறையில் பயன்படுத்தப்படும் வாக்கி டாக்கிகள் அனைத்தும் மிகவும் பழமையானது. இதனை மாற்றி தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வாக்கிடாக்கி வாங்க பல காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். இதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் வாக்கி டாக்கி கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இதில் பெரும் முறைகேடு நடந்தது. பல போலீஸ் உயரதிகாரிகள் இந்த வாக்கிடாக்கி ஊழலில் சிக்கினர். இதனால் போலீசார் கைக்கு கடைசிவரை வாக்கி டாக்கி சென்றடையவில்லை. தற்பொழுது காவல்துறையினர் ரோந்து பணிக்கு செல்லும்போது தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை பயன்படுத்தலாம் என டிஜிபி அறிவித்திருந்த நிலையில் பெரும்பாலான போலீசார் வாக்கி டாக்கியை சரி செய்து காவல் நிலையங்களுக்கு கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். குறைந்தது ஒரு காவல் நிலையத்திற்கு 15 வாக்கி டாக்கி வரை தேவைப்படுகிறது. ஆனால் இப்பொழுது ஒரு காவல் நிலையத்திற்கு மூன்று அல்லது நான்கு வாக்கி டாக்கிகள் மட்டுமே உள்ளன. அதுவும் மிகவும் பழமையானது. இதனால் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் தொடர்ந்து போலீசாருக்கு சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த வாக்கி டாக்கி ஊழலால் இன்று வரை தரமான வாக்கி டாக்கி போலீசார் கைகளுக்கு கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுவதால் இந்த விவகாரத்தை உடனடியாக களைந்து, போலீசாருக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாக்கிடாக்கிகளை வழங்க வேண்டும் என பல போலீசாரும் விரும்புகின்றனர். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கும் தங்களது கோரிக்கையை வைத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசு உத்தரவுகளை மதிக்காமல் ஆபீசில் நொறுக்கு தீனிகளை சாப்பிடுறாராமே பிடிஓ..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு முழுவதும் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பம்பரம் போன்று சுழன்று மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்.  மாவட்ட அதிகாரிகளையும் முடக்கிவிட்டு மீட்பு பணிகளை அவர் தீவிரப்படுத்தி வருகிறார். ஆனால் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் பிடிஓ மோகனமாக ராஜ் அரசு உத்தரவுகளை மதிக்காமல் வெளியே ஆய்வுக்கு செல்லாமல் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு வருவதாக பரபரப்பு புகார்கள் வந்துள்ளது.  கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் 57 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 30க்கும் ஊராட்சி மன்றங்கள் கொள்ளிடகரையோரம் அமைந்துள்ளது. மாவட்டத்திலேயே குமராட்சி ஒன்றியம் தாழ்வான பகுதி என்பதால் கனமழை பெய்வதால் இப்பகுதி வழியாக வடிந்து கடலுக்கு செல்லும். ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் பல கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது. வாய்க்கால் தூர்வாருதல் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குமராட்சி பிடிஓ மோகனமாக ராஜ், நடவடிக்கை எடுக்கவில்லை பல ஊராட்சி மன்ற தலைவர்கள் குமுறுகின்றனர். சாலைகள், தண்ணீர்தொட்டிகள், அரசு தொகுப்பு வீடு கட்டுதல் போன்றவகைளில் கமிஷன் வாங்குவதில் தான் முதன்மையாக செயல்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர்களே குற்றம்சாட்டுகின்றனர். மழை, வெள்ளத்தின் போது அலுவலகத்தை விட்டு வெளியே செல்லாமல் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டதாக குமராட்சி ஊராட்சி ஒன்றிய ஊழியர்களே கூறுகின்றனர்.  தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாவும், கிராமங்களில் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்படுகிறது. எள்ளேரி கிராம மக்கள், குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவிட்டு எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றனர்’’ என்றார் விக்கியானந்தா.  

‘‘தேர்தலில் சீட்டு வேணாம்னு அதிமுக நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டாங்களாமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘தேர்தலில்  போட்டியிட சீட்டு வேணும்னு கேட்டு மோதலில் ஈடுபட்டதைத்தான் இதுவரைக்கு  கேள்விப்பட்டிருக்கோம். ஆனால், திருவண்ணாமலை நகராட்சித் தேர்தலில்  போட்டியிட மாட்டேனு அதிமுக நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டிருப்பது அந்த  கட்சிக்குள் புது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கு. திருவண்ணாமலை நகராட்சி  தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும், மாஜி மந்திரியுமான  அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்திருக்கு. அதுல,  முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் கலந்துகிட்டாங்க. இந்த கூட்டத்தில நகராட்சி  வார்டுகளுக்கு யாரையெல்லாம் நிறுத்தலாம்னு பேச்சு வந்திருக்கு.  ஆனா  பெரும்பாலான வார்டுகளில் போட்டியிட யாரும் முன்வரலை. பெண்களுக்கு  ஒதுக்கிட்டாங்க, இப்ப சூழ்நிலை சரியில்லைனும் பலரும் பல காரணங்களை  அடுக்கியிருக்காங்க. அதனால் நொந்துபோன அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி  தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவதுனு கேள்வி கேட்டிருக்காரு. எல்லா  நிர்வாகிங்களும் ஒட்டுமொத்தமா ஒதுங்கிக்கொண்டதோடு, நகர நிர்வாகியா கடந்த 10  வருஷமாக பதவி சுகத்த அனுபவித்து செல்வத்தை குவித்த நபர்  போட்டியிடனும்னு கை நீட்டினாங்க. அதனால பதற்றம் அடைந்த அந்த நிர்வாகி,  ‘‘என்னோட வார்டு பெண்களுக்கு ஒதுக்கிட்டாங்க’’ன்னு நழுவியிருக்காரு.  உடனே  குறுக்கிட்ட மாவட்ட நிர்வாகி ஒருத்தரு, அவரு மனைவியை தேர்தலில்  நிறுத்தலாமேனும் ஆலோசனை சொல்லியிருக்காரு. இதில் ஆத்திரம் அடைந்த நகர  நிர்வாகி, டேபிள் மீதிருந்த ஜெயலலிதா படத்தையும், தண்ணீர் பாட்டிலையும்  எடுத்து வீசியிருக்காரு. அதனால், கூட்டத்துல முட்டல் மோதல் வெடித்திருக்கு.  அதோடு, அங்கிருந்து கிடுகிடுனு அந்த நிர்வாகி வெளிநடப்பு செஞ்சிட்டாரு. தேர்தல்னு  அறிவிப்பு வந்ததும் நான் நீனு சீட்டு கேட்டு தகராறு பண்ணும் நிலைமை மாறி,  சீட்டு வேணாம்னு தகராறு பண்ணும் நிலைக்கு கட்சி போயிடுச்சேனும் அதிமுக  தொண்டர்கள் புலம்புறாங்க. அட நீங்க ஒன்னு, திருவண்ணாமலையில மட்டுமில்லை,  தமிழ்நாடு முழுதும் இதே நிலைதானு கட்சியின் முக்கிய நிர்வாகியே  புலம்பியிருக்காரு’’என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

 • Republic Day Chennai

  சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

 • tamil-mozhi-25

  தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்