SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழலின் பின்னணி

2021-11-29@ 00:01:43

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் ஊழலே வியாபித்து இருந்தது. அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் ஊழல்கள், முறைகேடுகள் மலிந்த மாநிலமாக தமிழகம் மாறியது. கல்வித்துறையில் இலவச பொருட்கள் வாங்குவதில் தொடங்கி, சத்துணவு திட்டத்தில் சத்துமாவு, முட்டை, காவல்துறையில் வாக்கி டாக்கி என எந்த துறையை எடுத்து கொண்டாலும் ஏதாவது ஒரு முறைகேடு பூகம்பமாக அடிக்கடி கிளம்பிக் கொண்டே இருந்தது. சுகாதாரத்துறையில் குட்கா ஊழல் சந்தி சிரித்தது. உலகத்தையே உலுக்கிய கொரோனாவிலும் கூட அதிமுக அரசு கொள்ளை லாபமே அடிக்க முயன்றது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அரசின் ஊழல்களை முறையாக விசாரிப்போம் என தேர்தல் வாக்குறுதிகளில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. அதுபோலவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாலியல் வழக்கில் மணிகண்டன், வேலுமணியின் டெண்டர் முறைகேடுகள் என பல அமைச்சர்களின் வண்டவாளங்கள் சமீபகாலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம். நெடுஞ்சாலைத்துறையை தொடர்ந்து கையில் வைத்திருந்த எடப்பாடி, தார் கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்த பணிகளை முறைகேடாக எடுத்ததில் அவரது உறவினர்களும் ஊழல் புரிந்த குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் ஊழல் என அவரது தலைமையிலான ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை போனதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர், 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளதும் புகார்களின் வழியே தெரிய வந்துள்ளது. சேலம் குற்றப்பிரிவு போலீசார் தற்போது எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் நடுப்பட்டி மணியை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டுமே அவர் மீது 10க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளன. அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அவர் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். இவ்வாறு பெற்ற பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

 முன்னாள் முதல்வரின் உதவியாளர் இப்படி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பது, அவரை அருகே வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. முன்னாள் முதல்வரின் ஆசி இல்லாமல், அவரது உதவியாளர் ஆட்டம் போட்டிருக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வரின் உதவியாளர்கள் மற்றும் பினாமிகளை முழுமையாக விசாரித்தால் இன்னமும் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் பூதாகரமாக எழக்கூடும். மழைக்காலம் நிறைவு பெற்றதும் திமுக அரசு அமைக்கும் விசாரணை கமிஷன், அதிமுக அரசின் ஊழல்களை வெட்டவெளிச்சமாக்கும் என உறுதியாக நம்பலாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்