SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சுறுத்தும் ஓமிக்ரான்

2021-11-28@ 00:18:09

கொரோனா அரக்கனின் பிடியில் இருந்து மீண்டுவிட்டோம் என்று உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விடத்துவங்கி, கொஞ்சம், கொஞ்சமாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. வீட்டின், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி பாதையில் மெல்ல அடி எடுத்து வைக்க துவங்கி உள்ளது. 2019 டிசம்பரில் சீனாவின் ஊகான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் 26 கோடி பேருக்கு பரவி 52 லட்சம் உயிர்களை பறித்து ஆடிய கோர தாண்டவம் நாம் அனைவரும் அறிந்ததுதான்.

கொரோனாவை தடுக்க தடுப்பூசி என்ற மிகப்பெரிய ஆயுதம் இன்று நம்மிடம் இருந்தாலும், கொரோனா வைரஸ் உருமாறி மனித குலத்தை தாக்கி வருகிறது. ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்
படுத்தியது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ்  கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகளிடம் விடை இல்லை.

பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியாவோ டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமான போக்குவரத்துக்கு இந்தியாவும் உடனடியாக தடைவிதிக்க வேண்டும். இந்தியாவில் 121 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், அது போதுமானதல்ல என்பது நிபுணர்களின் கருத்து. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 31 சதவீதம் பேருக்கு மட்டுமே இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

57 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். இந்த நிலையில், ஓமிக்ரான் வகை கொரோனா இந்தியாவில் பரவினால் அதன் பாதிப்பு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் பொது இடங்களில், தனி மனித இடைவெளி கடைபிடிப்பது, முககவசம் அணிதல் போன்ற கொரோனா தடுக்கும் பழக்க வழக்கங்கள் இப்போது நம்மிடையே குறைந்து வருகிறது. பொது வெளியில் முககவசம் அணியாத மக்கள் பலரை பார்க்க முடிகிறது.

கொரோனா அரக்கனை மனித குலம் இன்னும் முழுமையாக வெல்லவில்லை. ஆனால், அதற்குள் ஓமிக்ரான் கொரோனா என மீண்டும் ஒரு அச்சுறுத்தல். நான் நிரந்தரமானவன், என்னை அழிக்க முடியாது என்று கொக்கரிக்கிறது கொரோனா வைரஸ். ஒரு அலையில் இருந்து தப்பினால் இன்னொரு அலை நம்மை தாக்குகிறது. இதில் இருந்து தப்பிப்பதில், நமக்கும் பெரும் பங்கு உள்ளது. மக்கள் தங்கள் பங்களிப்பை வழங்காவிட்டால், மீண்டும் ஊரடங்கு போன்ற பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும் நிலை வரும் என்பதை உணர்ந்து பொறுப்போடு செயல்படுவோம். ஓமிக்ரான் பரவலை தடுப்போம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்