SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நூலுக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

2021-11-25@ 00:24:02

சென்னை: நூலுக்கான விலையினைக் குறைப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ளன. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு ரூ.120 வரை விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக, இந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு அதிரடியாக ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.26 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டித் தரும் டாலர் சிட்டி திருப்பூரில், நாட்டின் 60 சதவீத பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நூல் விலை உயர்வினால் ஏற்கனவே எடுத்த ஆர்டர்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை பெற முடியாமலும் திண்டாடி வருகின்றனர். 40ம் எண் நூல் கிலோவிற்கு ரூ. 245 லிருந்து ரூ. 320 ஆகவும், 30 எண் நூல் கிலோவிற்கு ரூ. 250 லிருந்து ரூ. 300 ஆகவும், 2/40ம் எண் நூல் கிலோவிற்கு ரூ.280லிருந்து ரூ.340 ஆகவுமாக அனைத்து ரக நூல்களின் விலைகளும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களிடமும், பின்னலாடை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோரிடமும் மிகுந்த அதிருப்தியையும், தங்களது தொழிலின் எதிர்காலத்தை பற்றிய ஐயத்தையும் எழுப்பியுள்ளது. விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி பஞ்சிற்கான வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடே என்று கூறுகின்றனர்.

நூல் விலை உயர்வினால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற முக்கிய சங்கங்களை அழைத்துப் பேசி அவர்களது குறைகளைப் போக்கவும் இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மூலப் பொருட்களான, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூலிற்கு மானியம் வழங்க வேண்டும், நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியினை முழுமையாக ரத்து செய்ய ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்