SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளின் எதிர்பார்ப்பு

2021-11-25@ 00:23:05

நாடு முழுவதும் விவசாயிகளின் அதிருப்தியை சம்பாதித்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது. இது விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாக நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும், இந்த சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்களையும் நினைத்து பார்க்க வேண்டியது அவசியம். விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவை சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களையும் ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை மனதில் வைத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதனால், விவசாயிகள் மட்டுமல்ல விவசாய தொழிலே அடியோடு பாதிக்கப்படும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் நிரந்தரமாக தங்கி  ஓராண்டாக ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. பேச்சுவார்த்தையும் சுமூக தீர்வை தரவில்லை. இதையடுத்து சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது ஒன்றிய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களில் உள்ள ஷரத்துகளை விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என்று பிரதமர் வருத்தமாக கூறினார். வேளாண் சட்டங்கள் அமல் படுத்தப்பட்டிருந்தால் பெரு நிறுவனங்களிடம் விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்க வேண்டும். தங்கள் சொந்த நிலத்திலேயே விவசாய கூலிகளாக அவர்கள் மாற்றப்படும் சூழ்நிலை உருவாகும் என்பதை கடைகோடி விவசாயி வரை நன்கு புரிந்து கொண்டதால் இச்சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்தது. இதனால் விவசாயிகள் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. ஆனால், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை மனதில் வைத்து தான் ஒன்றிய அரசு விவசாய சட்டங்களை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.

மழை, பருவநிலை மாற்றம், புயல், சேதம் ஆகியவற்றுக்கு இடையில் விவசாயிகள் தங்கள் பணிகளை செய்கின்றனர். மற்ற துறை போன்று விவசாய துறை எப்போதும் சீராக நடக்க கூடியதல்ல. எனவே, விவசாயிகள்  நிரந்தர வருமானம் பெறுவது என்பது சாத்தியமற்றது. எனவே, புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது வரவேற்க தக்கதாகும். அதே நேரம், விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது மற்ற கோரிக்கைகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நலன் கருதி ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடிவு செய்தால், முதலில் விவசாய சங்க பிரதிநதிகளுடன் ஆலோசனை நடத்தி சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதே விவசாய அமைப்புகளின் எதிர்பார்ப்பும் கோரிக்கையாக உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்