SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஜி பெண் அமைச்சரின் மகன்கள் அடுத்தடுத்து சிக்கலில் மாட்டி வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-22@ 00:02:10

‘‘தற்காலிக பணியாளர் கோடிக்கணக்கில் வசூல் நடத்தி கலங்கடிக்கிறாராமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்து உள்ளாட்சி அலுவலகத்தின் கீழ்புற அலுவலகத்தில் மண் கூட்டும் பணியில் இருக்கிற ‘தும்பிக்கை கடவுள்’ பெயர் கொண்டவர், ‘வடபுற அலுவலக’த்திற்குத்தான் தினமும் வேலைக்கு போகிறார். மண்ணையே கூட்டாமல் இந்த தினக்கூலி பணியில் ரூ.8 ஆயிரம் சம்பளத்தை ஏடிஎம் மூலம் மாதம்தோறும் அரசிடமிருந்து பெற்றுக் கொள்கிற இவர்,  இலைக்கட்சி ஆட்சிக்காலம் துவங்கி இன்றும் 11 ஆண்டுகளாக இந்த ‘‘வடபுற அலுவலக’’த்தின் ‘‘திட்டமிட்ட உதவி அதிகாரி’’க்கு, ‘‘உதவியாளராக’’ இருக்கிறார். இந்த தும்பிக்கைக் கடவுள் பெயர் கொண்டவரின் பணியே, ‘‘வசூல்’’ செய்து கொடுப்பதுதானாம். இதற்கு முன்பு உதவி அதிகாரியாக இருந்தவர், இவருக்கு தனக்கான வருவாயில் ரூ.20 ஆயிரத்தை மாதச்சம்பளமாகவும் தந்து வந்தாராம். இந்த உதவி அதிகாரியானவர், லஞ்ச வழக்கில் சிக்கி பணிமாற்றம் பெற்றுப் போக, புதிதாக வந்தவருக்கும் ‘‘வசூல்’’ உதவிக்காக வேண்டி இவரே பணி தொடர்கிறார்.  இவர் மட்டுமே கார், பிளாட்கள் உள்ளிட்ட ரூ.4 கோடிக்கு சொத்து சேர்த்திருக்கிறாராம்.  இவரின் கருணைப்பார்வை இருந்தால்தான் பிளான் பாஸ் ஆகும் என்பதால் அதிகாரிக்கும் முன்னதாக இவரையே அத்தனை பேரும் அணுகுகின்றனராம். ‘‘வசூலின்’’ ஒரு பகுதி தனக்குப்போக, மீதியை அதிகாரியின் வீட்டுக்கே கொண்டு போய் சேர்க்கும் அளவிற்கு நம்பிக்கையோடு வேலை செய்கிறாராம். மாநகராட்சியில் இப்போது எல்லோரும் ஆச்சர்யப்படுகிற விஷயம், அரசுப்பணியில் இருப்பவர்களையே 3 ஆண்டுகளானால், கட்டாயம் இடமாற்றம் நடத்துகின்றனர். ஆனால், தினக்கூலி பணியில் இருக்கிறவரோ 11 ஆண்டுகள் தனக்கான இடத்தை விட்டு, இன்னொரு இடத்தில் கோலோச்சி, தற்காலிகப்பணியாளராக இருந்தும் கோடிக்கணக்கில் வசூல் நடத்தி வருவாய் பார்த்து வருவது சக பணியாளர்கள் அனைவரையும் வாய்பிளக்கும் ஆச்சர்யத்திற்குள் மூழ்கடித்திருக்கிறதாம். இவரைப்பற்றிய புகார் மனுக்களும் மேலதிகாரிகளுக்கு குவிந்து வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடந்த ஆட்சியில் ஆட்டம் போட்ட மாஜி அதிமுக பெண் அமைச்சரின் மகன்களுக்கு அடுத்தடுத்து சிக்கலாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் 2015 பிப் 13ல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இலைகட்சி  சார்பில் களமிறக்கப்பட்ட முதல் எழுத்தான வளரானவர் வெற்றி பெற்றார். எம்எல்ஏ ஆனவுடன் தனது செல்வாக்கை பயன்படுத்தி மூத்த மகனுக்கு சென்னை தலைமை  செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர் (ஏபிஆர்ஓ) பணியை  வாங்கி கொடுத்தாராம்... 2016 சட்டமன்ற தேர்தலிலும் வளரானவருக்கு மீண்டும்  வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 2வது முறையாக வெற்றி பெற்ற அவருக்கு  அதிர்ஷ்டவசமாக அமைச்சர் பதவி கிடைத்தது... இந்த செல்வாக்கை பயன்படுத்தி 2வது மகனுக்கும் சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் பொறியியல் மேலாளர் பணியை வாங்கிக்கொடுத்தாராம்.. அமைச்சரின் மகன்கள் என்பதால் இருவருமே சரிவர வேலை செய்யாமல் கடந்த ஆட்சியில் தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டம்போட்டார்களாம்... இவர்கள் போட்ட ஆட்டத்தால் நேர்மையான அதிகாரிகள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தனர்.
தற்போது ஆட்சி மாற்றத்தால்... நேர்மையான அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட தொடங்கியுள்ளனர்... இதனால் தான் முதல் நடவடிக்கையாக பணியில் மெத்தனமாக இருந்ததாக கூறி மாஜி அமைச்சரின் 2வது மகன்  ஆவின் மேலாளர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சூடு தணிவதற்குள், மாஜி அமைச்சரின் மூத்த மகன் ஏபிஆர்ஓ தலைமை செயலகத்தில் எப்படி பணியாற்றலாம் என மற்ற ஏபிஆர்ஓக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளார்களாம்... இலை ஆட்சியில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த ஏபிஆர்ஓ அவர் வைத்ததுதான் சட்டமாம்... அந்த அளவுக்கு ஆட்டம் போட்டராம்... தற்போது ஆட்சி மாறியிருப்பதால் கடந்த ஆட்சியில் ஏபிஆர்ஓ போட்ட ஆட்டம் தற்போது வெட்ட  வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம்... மாஜி அமைச்சரின் 2வது மகனை தொடர்ந்து மூத்த மகனான ஏபிஆர்ஓ மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயக்கூடும் என அரசல் புரசலாக சொந்த கட்சிக்குள்ளே பேச தொடங்கி விட்டார்களாம்... கடந்த ஆட்சியில் ஆட்டம் போட்டதோடு செல்வாக்குடன் வலம் வந்த 2 மகன்களுக்குமே அடுத்தடுத்து சிக்கலால் மாஜி அமைச்சர் செய்வதறியாமல் அதிர்ச்சியில் உள்ளாராம்’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘சசிகலா வந்தால் கூண்டோடு மாற்றுக்கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சேதி வருதே..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் அதிமுக கடந்த நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது. தற்போது 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்து உள்ளதால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. தொண்டர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க அதிமுகவின் 50 ஆண்டு பொன்விழாவையொட்டி நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என தனது பெயர் போட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். அதோடு அதிமுகவினருக்கு பொதுச்செயலாளர் என்று கையெழுத்துபோட்டு கடிதமும்  அனுப்பி வருகிறார்.
இதனால் மீண்டும் அதிமுகவிற்கு சசிகலா வர உள்ளதாக தகவல் பரவி உள்ளது. அடுத்தடுத்து நடைபெற்றுவரும் சம்பவங்களால் அதிமுக  முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலா எப்போது அதிமுகவில்  தலையீட்டை தொடங்கினாலும் அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் உடனே எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறுகின்றனர். இது திட்டமிட்ட நடவடிக்கைதானாம். இதனால் அவர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சசிகலா முயற்சி மேற்கொண்டு  வருகிறாராம். இதற்காக எவ்வளவு செலவு ஆனாலும் அதை கொடுக்கவும் பேரம்  பேசப்படுகிறதாம். இதில் சிலர் சசிகலாவின் வலையில் சிக்கிவிட்டார்களாம். எனவே  சசிகலா அதிமுகவுக்குள் மீண்டும் வருவது உறுதி என்று அமமுகவினர்  நம்பிக்கையுடன் கூறிவருகின்றனர். அப்படி சசிகலா வந்தால் அதிமுகவில் தற்போது  உள்ள முக்கிய கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றுக்கட்சிக்கு போக ரெடியாகி  வருகின்றனர். ஒருபக்கம் சசிகலாவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் சில அதிமுக நிர்வாகிகளும், மற்றொரு புறம் எதிர்க்கும் நிலையில் சில நிர்வாகிகளும்  இருந்து வருகின்றனர். இதனால் இனி வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சம்  இருக்காது என்று அதிமுகவினரே பேசிவருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்