SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னெச்சரிக்கை அவசியம்

2021-10-18@ 00:20:41

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவை கனமழை புரட்டி போட தொடங்கியுள்ளது. பம்பை, பெரியாறு என கேரளாவில் பல ஆறுகள் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அணைகளும் நிரம்ப தொடங்கிவிட்டன. மழைக்காலங்களில் கேரளாவை வாட்டி வதைக்கும் நிலச்சரிவும் பல்வேறு இடங்களில் தென்படுகின்றன. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாக மழை வெள்ளம் காணப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கொட்டும் மழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, பவானிசாகர், பரம்பிகுளம், சோலையாறு, ஆழியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி விட்டன. தமிழகத்தில் பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அமராவதி உள்ளிட்ட 90 அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக இவ்வாண்டு பல அணைகள் நிரம்பி விடும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசும் செய்து வருகிறது. பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு இப்போதே தயாராகி விட்டது. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர், வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் அமைக்கப்பட வேண்டிய முகாம்கள், உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் ஆலோசனைக்கு ஏற்பவே அரசு இயந்திரமும் கனமழை பெய்யும் மாவட்டங்களில் பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தில் 1500 பக்தர்கள் சிக்கி கொண்டனர். நெல்லை கலெக்டரும், எஸ்.பியும் சம்பவ இடத்தில் இரவு வரை நின்று பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவியதோடு, வெள்ள தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டியுள்ளனர். குமரி மாவட்டத்தில் காணப்படும் வெள்ள பாதிப்புகளிலும் அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், தமிழக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். பருவமழை காலத்தில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். குறிப்பாக ஆற்றின் கரையோர பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். வெள்ளக்காலங்களில் ஆற்றில் நீராடுவதை தவிர்ப்பதும் முக்கியமானதாகும். மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வானிலை மையம் அறிவிக்கும் வெள்ள எச்சரிக்கை தொடர்பான அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்றி நடப்பது நலம் பயக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

 • chennai-7

  ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்